“இன்று டிவியும் செல்பேசிகளும் இருக்கின்றன. அவற்றை கொண்டு மக்கள் பொழுது போக்கிக் கொள்கின்றனர்,” என்கிறார் முஸ்லிம் கலீஃபா தோலக் கருவியின் வளையங்களை இறுக்கிக் கொண்டே.
12ம் நூற்றாண்டை சேர்ந்த அல்ஹா மற்றும் உதால் ஆகிய வீரர்கள் பற்றிய கதையை முஸ்லிம் கலீஃபா பாடுகிறார். பிகாரின் சமஸ்டிப்பூரை சேர்ந்த தோலக் இசைஞரும் நாட்டுப்புற பாடகருமான அவர், ஐம்பது ஆண்டுகளாக இதை செய்து வருகிறார். அவரின் குரல் கணீரென, பல காலமாக பாடி வரும் ஒருவரின் குரலை ஒத்ததாக இருக்கிறது.
நெல், கோதுமை, சோளம் போன்றவற்றை அறுவடை செய்யும் ஏப்ரல்-மே மாதங்களில் அவர் தோலக்குடன் வயல்களுக்கு சென்று விவசாயிகளுக்காக பாடுவார். இரண்டு மணி நேரம் பாடினால், பதிலுக்கு புதிதாக அறுவடை செய்யப்பட்டிருக்கும் தானியத்தில் 10 கிலோ கொடுக்கப்படும். “மூன்று பயிர்களை அறுவடை செய்ய ஒரு மாதம் ஆகும். எனவே முழு மாதத்தையும் நான் வயல்களில்தான் கழிப்பேன்,” என்கிறார் அவர். திருமண காலங்களில் அவருக்கான தேவை அதிகரித்து, மூன்று மாதங்களில் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை வருமானம் கிட்டும்.
52 அத்தியாயங்களை கொண்ட விரிவான பாடலை முழுமையாக பாடி முடிக்க பல நாட்களாகும். அதை கேட்க பார்வையாளர்கள் தொடர்ந்து அமைதியாக கவனிக்க வேண்டும். ”ஆனால் இன்று யார் அதிக நேரம் கவனிப்பார்?” எனக் கேட்கிறார் கலீஃபா. காலிஸ்பூர் கிராமத்தை சேர்ந்த 60 வயது கலீஃபாவின் வருமானம் சரிந்து வருகிறது. அவரின் சொந்த குழந்தைகள் கூட அல்ஹா-உதாலில் ஆர்வம் கொள்வதில்லை என புலம்புகிறார்.
இஸ்லாமியரான கலீஃபா, பட்டியல் சமூகமாக வரையறுக்கப்பட்டிருக்கும் நாட் சமூகத்தை சேர்ந்தவர். மாநிலத்தில் தற்போது இருக்கும் நாட் சமூகத்தினரின் எண்ணிக்கை 58,819. “ஆனால் 10-20 கிராமங்களில் (அல்ஹா-உதால் பாடும்) ஒன்றிரண்டு பேரை மட்டும்தான் நீங்கள் பார்க்க முடியும்,” என்கிறார் மே 2023-ல் நம்முடன் கலீஃபா பேசுகையில்.










