“நான் வரையும் பலகைகள் எதுவும் ஒன்று போல இருக்காது,” என்கிறார் அகமதாபாத்தின் பெயர்ப்பலகை ஓவியரான ஷேக் ஜலாலுதீன் கமாருதீன். கத்திரிக்கோல் உற்பத்திக்கு பெயர் பெற்ற கீக்ண்டா பகுதியில் எல்லா பெயர்ப் பலகைகளையும் அவர்தான் வரைந்திருக்கிறார். எல்லா கடைகளும் ஒரே பொருளைத்தான் விற்கின்றன என்றாலும் ஜலாலுதீன் வரைந்த ஒவ்வொரு பெயர் பலகையும் தனித்துவமான அடையாளத்தை கொண்டிருக்கும் வகையிலேயே வரையப்பட்டிருக்கிறது.
மூத்த ஓவியரின் கைவண்ணம் சுவர்கள், கடைகள் மற்றும் கடை ஷட்டர்கள் என எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது. திரைப்படங்களின் பின்னணிகளையும் உருவாக்கி இருக்கிறார். ஒரு பெயர்ப்பலகை ஓவியருக்கு உள்ளூர் மொழிகளின் எழுத்துகளை வரையவும் பூச்சு போடவும் தெரிந்திருக்க வேண்டும். அகமதாபாத்தின் மனேக் சவுக்கின் நகைக்கடையில், குஜராத்தி, இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளை கொண்ட பெயர்ப்பலகை அரை நூற்றாண்டு காலமாக இருக்கிறது.
அந்த பெயர்ப்பலகை தனக்குதான் வந்ததாக கூறுகிறார் ஜலாலுதீன். 71 வயதாகும் அவர், அகமதாபாத்திலேயே மூத்த பெயர்ப்பலகை ஓவியர்களில் ஒருவர் ஆவார். அவரின் கடைக்கு பெயர் ‘ஜேகே பெயிண்டர்’. 50 வருடங்களுக்கு முன்பு பெயர்ப்பலகை வரைய அவர் தொடங்கிய காலத்தில் கிடைத்த அளவுக்கான வேலைகள் தற்போது கிடைப்பதில்லை என்கிறார் அவர்.
7ம் வகுப்பு வரை படித்திருக்கும் அவர், குஜராத்தி, ஆங்கிலம், இந்தி, உருது மற்றும் அரபி ஆகிய ஐந்து மொழிகளில் பெயர்ப்பலகைகள் எழுதுவார். பள்ளிப் படிப்பை நிறுத்திய பிறகு, கயிறு தயாரிப்பவராகவும் புத்தக அட்டை போடுபவராகவும் மெக்கானிக்காகவும் பணியாற்றி இருக்கிறார். பிறகுதான் தல்கார்வாட் சந்தையின் ரஹீம் கடையில் ஓவியம் வரைய கற்றுக் கொண்டார்.
எழுபது வயதுகளில் இருந்தாலும் 20 கிலோ ஏணியை ஜலாலுதீன் இன்னும் பெயர்ப்பலகை எழுத அதை தூக்கி செல்ல முடியும். ஆனால் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, சுமைகளை தூக்க வேண்டாமென அவரின் மருத்துவர் அறிவுறுத்தியிருக்கிறார். “ஏணியில் அதிக நேரம் நின்றால் முழங்கால் வலிக்கிறது<” என்னும் அவர் உடனடியாக, “என் கையும் காலும் இயங்கும் வரை இந்த வேலையை நான் செய்வேன்,” என்கிறார்.


















