ருபேல் ஷேக்கும் அனில் கானும் வாகனம் ஓட்டுகிறார்கள். ஆனால் இருவரும் தரையில் இல்லை. கிட்டத்தட்ட 20 அடி உயரத்தில் 80 டிகிரி செங்குத்தான கோணத்தில் இருந்தனர். அகர்தாலாவின் விழாவில் கூடியிருந்த பெரும் கூட்டம் அவர்களை கொண்டாடிக் கொண்டிருந்தது. ருபேல் மற்றும் அனில், கார் கண்ணாடிகளிலிருந்து எட்டிப் பார்த்து கையசைக்கின்றனர்.
மரணக் கிணறு வித்தையை அவர்கள் காட்டிக் கொண்டிருந்தனர். கார் மற்றும் பைக் போன்றவற்றை சுவரில் செங்குத்தாக ஓட்டி பல ஸ்டண்டுகள் காட்டுவதுதான் மரணக் கிணறு வித்தை.
நிகழ்ச்சி, 10 நிமிட நிகழ்ச்சிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். பல மணி நேரங்களுக்கு நடக்கும். நிகழ்ச்சி நடைபெறும் மைதானம் கிணறு போல வடிவமைக்கப்பட்டிருக்கும். அதை உருவாக்க பல நாட்கள் பிடிக்கும். மரணக் கிணற்றில் வாகனம் ஓட்டுபவர்களே அதை உருவாக்குவதிலும் ஈடுபடுவார்கள். ஏனெனில் அந்த கிணறு அமைக்கப்படும் விதமும் அவர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம்.
’மரணக்கிணறு’ எனப் பெயர் சூட்டப்பட்ட இந்த நிகழ்வு, திரிபுராவின் அகர்தாலாவில் அக்டோபர் 2023-ல் நடந்த துர்கா பூஜை விழாவில் ஈர்ப்புக்குரிய முக்கியமான அம்சமாக இடம்பெற்றது. ராட்டினம், பொம்மை ரயில்களும் விழாவில் இடம்பெற்றன.























