பிப்ரவரி 13, 2024 அன்று, பஞ்சாபைச் சேர்ந்த சமூகவியல் மாணவர் தவிந்தர் சிங் பங்கு, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தனது நண்பர்களுடன் ஷம்பு எல்லைக்குச் சென்றார். பிற்பகல் 2 மணியளவில் அவர்கள் வந்தபோது, விரைவு அதிரடிப் படையும் (ஆர்.ஏ.எஃப்) மற்றும் ஹரியானா பக்க எல்லையில் காவல்துறையினரும் ஏற்கனவே தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.
தவிந்தரின் நண்பர் தரன்வீர் சிங் கூறுகையில், "நாங்கள் ஒரு குழுவாக அமைதியாக நின்று கொண்டிருந்தபோது ஒரு ரப்பர் குண்டு அவரது இடது கண்ணில் தாக்கியது. உடனே தவிந்தர் கீழே விழுந்தார். நாங்கள் அவரை அழைத்துச் செல்ல முயன்றபோது, போலீசார் எங்கள் மீது மூன்று அல்லது நான்கு கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்." இவை எல்லாமும் பிற்பகல் 3 மணியளவில், அவர்கள் போராட்டக் களத்திற்கு வந்த ஒரு மணி நேரத்திற்குள் நடந்துவிட்டன.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் பிப்ரவரி 13, 2024 அன்று டெல்லியை நோக்கி அமைதியான பேரணியைத் தொடங்கினர். பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு எல்லையில் அவர்களை போலீசார் மற்றும் ஆர்.ஏ.எஃப் படையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் அணிவகுத்துச் செல்ல முயன்றபோது, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகள் வீசப்பட்டன (இதையும் படியுங்கள்: ' நான் ஷம்பு எல்லையில் சிறைபிடிக்கப்பட்டதாக உணர்கிறேன் ' ).
கண்ணீர் புகை குண்டுகளின் கடுமையான புகையை பொருட்படுத்தாமல், தவிந்தரின் நண்பர்கள் துரிதமாக செயல்பட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தவரைத் தூக்கினர். 22 வயதான அந்த இளைஞரை சம்பவ இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆம்புலன்ஸில் பனூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அவரை சண்டிகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல பரிந்துரைத்தனர். அங்கு பிப்ரவரி 15 ஆம் தேதி அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு இடது கண்ணில் மீண்டும் பார்வை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
விவசாயியான தவிந்தரின் தந்தை மஞ்சித் சிங், தனது மகன் வெளிநாடு செல்லாமல், இங்கேயே தங்கி காவல்துறையில் சேர தயாராக இருந்ததாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பட்டியாலா மாவட்டத்தில் உள்ள ஷேக்குபூர் கிராமத்தில் இக்குடும்பத்திற்கு எட்டு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020-21ஆம் ஆண்டில் டெல்லியின் எல்லைகளில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் இவர்கள் பங்கேற்றனர். இது குறித்து பாரியின் செய்திகளைப் படியுங்கள்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: முழு தொகுப்பு .
பஞ்சாபின் அதிகார வரம்பில் ஹரியானா காவல்துறையினரால் எவ்வாறு பெல்லட் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீச முடிகிறது என்று போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் கேட்கின்றனர். "சொந்த மாநிலத்தில் பாதுகாப்பில்லையென்றால், நாங்கள் எங்கே செல்வது?" என்று அவர்கள் கேட்கிறார்கள். மேலும் காவல்துறையினர் அமைதியான போராட்டக்காரர்களை குறிவைத்துள்ளனர் என்றும் கூறுகின்றனர்.
"பஞ்சாப் அரசு ஏதாவது செய்ய வேண்டும்" என்கிறார்கள். விவசாயிகள் தலைவரான குர் அம்னீத் சிங், இந்த பிரச்சனையை பஞ்சாப் காவல்துறையிடமும், துணை ஆணையரிடமும் கூட எழுப்பியதாக பாரியிடம் கூறினார். அம்பாலாவில் உள்ள அவர்களின் சகாக்களுடன் காவல்துறையினர் பேசியதாக கூறப்பட்டது. ஆனால் கண்ணீர் புகை குண்டு வீச்சு இன்னும் ஓயவில்லை.
தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்துள்ளனர். 3 பேர் கண் பார்வை இழந்துள்ளனர். விவசாயிகள் மீது ஹரியானா காவல்துறையின் 'அறிவிக்கப்படாத' தாக்குதலை சுகாதாரத் துறை அமைச்சர் கண்டித்தார்.
பிப்ரவரி 13 அன்று டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள தாரிவால் கிராமத்தைச் சேர்ந்த ஜர்னைல் சிங் என்ற விவசாயி லத்தி தாக்குதலின் போது தலையில் தாக்கப்பட்டார். 44 வயதான அவரது தலையில் ஐந்து தையல்கள் போடப்பட்டுள்ளது. ஆனால் அவர் வீடு திரும்ப விரும்பவில்லை. "எல்லோரும் இங்கே போராடுகிறார்கள், நான் ஏன் எனது கிராமத்திற்கு, வீட்டிற்கு செல்ல வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
போராட்டக் களத்தில் மருத்துவ முகாமை நடத்தி வரும் டாக்டர் மந்தீப் சிங், போராட்டம் தொடங்கியதிலிருந்து காயங்கள் மற்றும் நோய்களுடன் வந்த சுமார் 400பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்கிறார்.
பஞ்சாபின் சுகாதார அமைச்சரும், கண் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பல்பீர் சிங், போராட்டத்தின் போது காயமடைந்தவர்களை சந்தித்து வருகிறார். பிப்ரவரி 14 அன்று, போராட்டத்தின் போது காயமடைந்த விவசாயிகளின் அனைத்து சிகிச்சை செலவுகளையும் பஞ்சாப் அரசு ஏற்கும் என்று அவர் அறிவித்தார்.
போராட்டக் களத்தில் பல ஊடகவியலாளர்களும் விஷமிகளால் தாக்கப்பட்டு வருகின்றனர். பத்திரிகைகளுக்கு உதவவும், இதுபோன்ற விஷமிகளை கட்டுப்படுத்தவும், விவசாய சங்கங்கள் தன்னார்வலர்களை பாதுகாவலர்களாக அல்லது பெஹ்ரேதார்களாக நியமித்து கண்காணிக்கின்றன.
போராட்டத்தை பற்றிய செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் தங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஊடக அட்டைகளையும் வழங்கி வருகின்றன. பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்படுவதாக விவசாயத் தலைவர் ரஞ்சித் சிங் ராஜு கூறுகிறார். அந்த அட்டையில் பத்திரிகையாளரின் விவரங்களும், அவற்றை பதிவேற்றும் ஒரு தலைவரின் கையொப்பமும் இடம்பெற்றுள்ளது.
*****
தவீந்தரைப் போலவே, ஷம்பு எல்லையில் போராட்டக் களத்தில் இருந்த பலரும் 2020-2021-ம் ஆண்டு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்.
கர சேவைக் குழுவின் உறுப்பினரான பாபா லாப் சிங், டெல்லி எல்லையில் நடந்த போராட்டத்தின் போது தனது உறவினரை இழந்தார். "எனது உறவினர் அஜய்ப் சிங் போராட்டக் களத்தில் நிமோனியாவால் இறந்தார். அவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். அவரது இரண்டு குழந்தைகளும் நிராதரவாக நிற்கின்றனர்", என 62 வயதான அவர் பிப்ரவரி 18 அன்று ஷம்பு எல்லையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது சொல்கிறார்.
"தேர்தல்களின் போது, இவர்கள் எங்களிடம் கைகூப்புகின்றனர் ஆனால் கோரிக்கைகளுடன் சென்றால் அவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள்," என்று அவர் தொடர்ந்து பேசுகிறார். எத்தனை அரசுகள் மாறினாலும், மக்கள் எப்போதும் தங்களுக்காக போராட வேண்டியிருக்கிறது என்று கூறுகிறார்.
ஹர்பஜன் கவுர் குர்தாஸ்பூரில் உள்ள துக்ரியிலிருந்து பயணித்த பெண், விவசாயிகளின் குழுவைச் சேர்ந்தவர். அவர்கள் இரண்டு நாட்கள் பயணம் செய்து ஷம்பு எல்லையை அடைந்தனர். "என் மகன் என்னை அழைத்து வர விரும்பவில்லை," என்று 78 வயதான அவர் கூறுகிறார், "கிராமத்தில் நான் தனியாக என்ன செய்வேன் என்று கூறி வந்துவிட்டேன். இறக்கும் சூழல் வந்தால் நான் முதலில் இறந்து விடுவேன்" என்கிறார்.
2020-21 போராட்டத்தின் போது அவரும் அவரது கிராமத்தைச் சேர்ந்த மற்ற பெண்களும் டெல்லி எல்லைகளிலேயே தங்கியிருந்தனர்.
மக்கள் மட்டுமின்றி, முந்தையப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த வாகனங்களும் இங்கு உள்ளன. ஷம்பு எல்லையில் உள்ள ஒரு டிராக்டரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வாசகம்: "ஹார் பாவாங்கே, ஹார் புவாங்கே... சன் டில்லியே, பர் ஹார் கே நஹி ஜவாங்கே [உன்னை கௌரவிப்பேன், இன்னும் கௌரவிப்பேன்... கேளுங்கள் டெல்லி, ஆனால் நாங்கள் தோல்வியுற்றவர்களாக / அவமானப்படுத்தப்பட்டவர்களாக திரும்ப மாட்டோம்).”
ஒரு காரில் இடம்பெற்றுள்ள வாசகம்:
"ஜடோன் படா ஹோவே சீனேயன் சேக் ஹோங்கே, ஓடன் ஜங் ஜான் வாலே பந்தே ஆம் நஹியோன்
ஹுண்டே [மார்பில் (நெருப்பின் மூலம்) துளைகள் ஏற்படும் என்றும் தெரிந்தே, போருக்குச் செல்லும் ஆண்கள் சாதாரணமானவர்கள் அல்ல]."
ஒன்றிய அமைச்சர்கள் புதிய குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) முன்மொழிவை முன்வைத்த பின்னர் , பிப்ரவரி 18 , ஞாயிற்றுக்கிழமை மாலையில் டெல்லி சலோ பேரணியை விவசாயத் தலைவர்கள் தற்காலிகமாக நிறுத்தினர். அதை பரிசீலித்த பிறகு விவசாயிகள் , பிப்ரவரி 21-ம் தேதி மீண்டும் பேரணி தொடங்க உள்ளனர்.
தமிழில்: சவிதா