1951-52ல் நடந்த தேர்தலின் வாக்களிப்பு நாள் காலையில் அணிந்திருந்த மொடமொடப்பான வெள்ளை குர்தாவை இன்னும் க்வாஜா மொயினுதீன் நினைவில் வைத்திருக்கிறார். அப்போது அவருக்கு 20 வயது. உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவரது சிறு டவுனை தாண்டி வாக்குச்சாவடிக்கு, சுதந்திரக் காற்றை சுவாசித்து சென்றார்.
தற்போது 72 வருடங்களுக்கு பிறகு, மொயின் நூறின் வயதுகளில் இருக்கிறார். மே 13, 2023 அன்று, அவர் மீண்டும் ஒருமுறை காலையில், மொடமொடப்பான வெள்ளை குர்தாவை அணிந்து வெளியே வந்தார். இம்முறை, வாக்குச்சாவடிக்கு கைத்தடியின் துணையுடன் சென்றார். அவரின் நடையில் இருந்த வசந்த காலம் இப்போது இல்லை. வாக்களிப்பதற்கான கொண்டாட்டமும் தற்போது இல்லை.
“இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக அந்த காலத்தில் நான் வாக்களித்தேன். இப்போது இந்த நாட்டை காப்பதற்காக வாக்களிக்கிறேன்,” என்கிறார் அவர் பாரியிடம், மகாராஷ்டிராவின் பீட் நகரத்தில்.
1932ம் ஆண்டு, பீட் மாவட்ட ஷிரூர் கசார் தாலுகாவில் பிறந்த மொயீன், தாலுகா அலுவலகத்தின் காவலராக பணிபுரிந்தார். 1948ம் ஆண்டில், பீட் நகரத்திலிருந்து அவர் தப்பியோட வேண்டியிருந்தது. ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையால் அவர் 40 கிலோமீட்டர் தூரத்துக்கு தப்பி சென்றார்.
1947ம் ஆண்டில் நடந்த வன்முறை நிறைந்த பிரிவினைக்கு ஒரு வருடத்துக்கு பிறகு, ஹைதராபாத், கஷ்மீர் மற்றும் திருவிதாங்கூர் ஆகிய மூன்று சமஸ்தானங்கள், இந்திய ஒன்றியத்துடன் இணைய மறுத்தன. இந்தியாவையும் பாகிஸ்தானையும் சேராத சுதந்திர நாடாக இருக்க வேண்டுமென ஹைதராபாத்தின் நிஜாம் கேட்டார். பீட் மாவட்டம் இருக்கும் விவசாயப் பகுதியான மராத்வடா, ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்திய ராணுவம், செப்டம்பர் 1948-ல் ஹைதராபாத்துக்குள் நுழைந்து, நான்கு நாட்களுக்குள் நிஜாம் சரணடையும்படி கட்டாயப்படுத்தியது. எனினும் 10 வருடங்களுக்கு பிறகு வெளியிடப்பட்ட சுந்தர்லால் குழுவின் ரகசிய அறிக்கையின்படி, 27,000-லிருந்து 40,000 இஸ்லாமியர், படையெடுப்பில் உயிரிழந்திருக்கின்றனர். மொயீன் போன்ற இளைஞர்கள் உயிரை காத்துக் கொள்ள தப்பியோட வேண்டியிருந்தது.
”என் ஊர் கிணறு முழுக்க சடலங்கள் கிடந்தன,” என நினைவுகூருகிறார் அவர். “பீட் நகரத்துக்கு தப்பி சென்றோம். அப்போதிருந்து அதுதான் என் ஊராக இருக்கிறது.”









