ஆணாக வளர்ந்த ரம்யா, 5ம் வகுப்பிலிருந்து பெண்ணாக தன்னை அடையாளப்படுத்தத் தொடங்கினார்.
“என் (நடுநிலை) பள்ளியில் நான் கால்சட்டை அணிய வேண்டும். என் தொடைகள் தெரியும் வகையில் இருந்தது,” என்கிறார் அவர். “சிறுவர்களுடன் அமர வைத்தது சங்கடமாக இருந்தது.” தற்போது முப்பது வயதுகளில் இருக்கும் அவர் சிவப்புப் புடவை கட்டி நீண்ட முடி வைத்து, பெண்ணுக்கான அடையாளத்துடன் இருக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூரில் ஒரு சிறு அம்மன் கோவிலை நிர்வகித்து வருகிறார் ரம்யா. அவரின் தாயான வெங்கம்மா, தரையில் அவருக்கருகே அமர்ந்திருக்கிறார். “வளரும்போது இவன் (ரம்யாவை சுட்டிக் காட்டுகிறார்) சுடிதார், தாவணி, கம்மல் அணிய ஆசைப்படுவான். ஆணைப் போல நடந்து கொள்ளும்படி அவனிடம் சொல்லிப் பார்த்தோம். ஆனால் அவன் இப்படித்தான் ஆக விரும்பினான்,” என்கிறார் ரம்யாவின் 56 வயது தாய்.
கன்னியம்மன் கோவில் மூடியிருப்பதால், உரையாடல் எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்தது. அவர்களைப் போன்ற இருளர் சமூகத்தினர், கன்னியம்மனை வணங்க இந்தக் கோவிலுக்கு வருவார்கள்.
ரம்யாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். இந்த இருளர் பகுதியில்தான் அவர் வளர்ந்தார். அதிகம் பாதிக்கத்தக்க பழங்குடி குழுக்களில் (PVTG) இருளர் சமூகமும் ஒன்று. அவரின் பெற்றோர், சமூகத்திலுள்ள பிறரை போல், விவசாய நிலம், கட்டுமானப் பணி, ஊரக வேலைத் திட்ட வேலைகள் போன்ற தினக்கூலி வேலைகள் பார்த்து நாளொன்றுக்கு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகின்றனர்.
“அந்த காலத்தில் மக்களுக்கு திருநங்கைகளை பற்றி தெரியாது. எனவே வீட்டை விட்டு நான் வெளியே வரும்போதெல்லாம், எனக்கு பின்னால் பலரும் பலவிதமாக பேசுவார்கள்,” என்கிறார் ரம்யா. “‘ஆணைப் போல் உடையணிந்திருந்தாலும் பெண்ணை போல் நடந்து கொள்கிறான். இது ஆணா, பெண்ணா?’ எனப் பேசுவார்கள். அது எனக்கு கஷ்டமாக இருந்தது,” என்கிறார்.























