"பசி உட்பட பல விஷயங்களை மது அருந்தினால் மறந்துவிடலாம்," என்கிறார் சிங்துய் கிராமத்தை சேர்ந்த ரொபிந்திர புய்யா.
ஐம்பது வயதுகளில் இருக்கும் புய்யா ஒரு ஷபோர் பழங்குடியினத்தவர் (மேற்கு வங்கத்தில் ஷவோர் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் சமூகம்). முண்டா பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஷபோர்கள் இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வாழ்கின்றனர். சவுரா, சுரா, ஷபோர், சுரிகள் போன்ற பெயர்களிலும் குறிப்பிடப்படுகின்றனர். லோதா ஷவோர் மேற்கு (பிரிக்கப்படாத) மெதினிபூரில் அதிகம். கடியா ஷவோர் அதிகமாக புருலியா, பாங்குடா மற்றும் மேற்கு (பிரிக்கப்படாத) மெதினிபூரில் வசிக்கின்றனர்.
மகாஸ்வெதா தேவியின் The Book of the Hunter (முதன்முதலாக வங்காளியில் 1994-ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது) இச்சமூகத்தின் வறுமையையும் விளிம்புநிலையில் வாழும் நிலையையும் எடுத்துக் காட்டியது. பல ஆண்டுகளாகியும் 2020ம் ஆண்டின் அறிக்கையின்படி பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை எனத் தெரிகிறது. Living World of the Adivasis of West Bengal என்ற அறிக்கை, “கணக்கெடுக்கப்பட்ட கிராமங்களில் 67 சதவிகிதம் பட்டினியால் வாடுகின்றன,” எனக் குறிப்பிடுகிறது.
18ம் நூற்றாண்டியின் பிற்பகுதியில் இச்சமூகத்தினர் ‘குற்றப்பரம்பரை’ என பிரிட்டிஷாரால் வரையறுக்கப்பட்டனர். 1952ம் ஆண்டில்தான் அந்த அடையாளம் நீக்கப்பட்டது. பாரம்பரிய வேடர்களான அவர்கள், பழங்கள் பறிப்பார்கள். இலை மற்றும் வேர்களை சேகரிப்பார்கள். வனவிலங்குகளை வேட்டையாடுவார்கள். சுதந்திரத்துக்கு பின் சிலருக்கு விவசாயம் பார்க்க நிலம் வழங்கப்பட்டது. ஆனால் அதில் பெரும்பாலான நிலம் பாறையும் பொட்டலும்தான். எனவே அவர்கள் புலம்பெயர் தொழிலாளர்களாகி பணி செய்யத் தொடங்கினர். குற்றப்பரம்பரை வகைமை நீக்கப்பட்டபிறகும், களங்கம் தொடர்ந்தது. உள்ளூர் காவல்துறை மற்றும் வனத்துறையினரின் கருணையில்தான் அவர்கள் வாழ முடிந்தது. இல்லையெனில் அவர்களின் நடமாட்டம் முடக்கப்படும்.
குறைவான பணமீட்டும் வாய்ப்புகளை கொண்டிருப்பதால் மேற்கு மெதினிபூர் மற்றும் ஜாடுகிராம் மாவட்டங்களில் வாழும் ஷபோர் சமூகத்துக்கு பசிதான் கதி. புய்யா போன்ற பலரும் தங்களின் பசியை மதுவில் மறக்கின்றனர். அல்லது, “மூன்று வேளையும் பழைய சோற்றை சாப்பிட்டு வாழ்வோம்,” என்கிறார் பங்கிம் மல்லிக். தபோபான் கிராமத்தின் 55 வயது நிரம்பியவரான மல்லிக், மாதந்தோறும் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோ அரிசி கொடுக்கப்படும் பொது விநியோகத் திட்டத்தை குறிப்பிடுகிறார். “உப்போ எண்ணெயோ பெருஞ்செலவு.” தன் பாழடைந்த வீட்டுக்கு முன் அமர்ந்து அவர் பழைய சோற்றை சாப்பிடுகிறார்.























