சித்து கவடே பள்ளிக்கு செல்ல முடிவெடுத்தபோது, அவரின் பெற்றோர் 50 செம்மறிகளை மேய்க்கக் கொடுத்தனர். அவரின் குடும்பத்தினரிலும் நண்பர்களிலும் இருக்கும் பலரைப் போல, பாரம்பரியத் தொழிலான மேய்ச்சலை இளவயதிலிருந்தே தொடங்க வேண்டுமென அவரும் பணிக்கப்பட்டார். இறுதி வரை அவர் பள்ளிக்கு செல்லவே இல்லை.
கவடே, தங்கர் சமூகத்தை சேர்ந்தவர். ஆடு, செம்மறி மேய்க்கும் தங்கர் சமூகத்தினர் மகாராஷ்டிராவில் நாடோடி பழங்குடியாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஆறு மாதங்களுக்கும் மேலாக வீட்டை விட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் விலங்குகளை மேய்க்க செல்வார்கள்.
வீட்டிலிருந்து நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் வட கர்நாடகாவின் கராடகா கிராமத்தில் செம்மறிகளை மேய்க்க சென்றிருந்தபோது, இன்னொரு மேய்ப்பர் நூல் கொண்டு வளையங்களாக பின்னிக் கொண்டிருப்பதை அவர் கண்டார். “அதை பார்க்க பரவசமாக இருந்தது.” அந்த மூத்த தங்கர் (மேய்ப்பர்) திறனுடன் எப்படி வெள்ளை நூல்களை கொண்டு ஒரு ஜலியை பின்னுகையில் அதன் நிறம் கடலையின் பழுப்பு நிறத்துக்கு மாறியது என நினைவுகூருகிறார்.
அந்த சந்திப்புதான் இளைஞராக இருந்த அவரை, அடுத்த 74 வருடங்களுக்கு செய்யப் போகும் கலையை கற்க வைத்தது.
கை கொண்டு பருத்தி நூல்களால் பின்னப்பட்டு, தோளில் தொங்கவிடப்படும் பைதான் ஜலி பை என குறிப்பிடப்படுகிறது. “கிட்டத்தட்ட எல்லா தங்கர்களும் தங்களின் நீண்ட பயணங்களில் ஜலி பையை கொண்டு செல்வார்கள்,” என்கிறார் சித்து. “”குறைந்த பட்சம் 10 ரொட்டிகளையும் ஒரு ஜோடி உடையையும் அதில் கொண்டு செல்ல முடியும். பல தங்கர்கள் அதில் வெற்றிலைப் பாக்கும் சுண்ணாம்பும் அதில் வைத்திருப்பார்கள்.”
ஜலிக்கென குறிப்பிட்ட அளவு இருந்தாலும், மேய்ப்பர்கள் அளவுகோல்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. “ஒரு சாண் மற்றும் நான்கு விரல்கள் உயரமாக இருக்க வேண்டும்,” என்கிறார் சித்து. அவர் செய்யும் ஒவ்வொரு ஜலியும் 10 வருடங்கள் தாங்கும். “மழையில் நனைந்துவிடக் கூடாது. மேலும் இதை கடித்து ஓட்டை போட எலிகளுக்கு பிடிக்குமென்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”
கராடகாவில் பருத்தி நூல் கொண்டு ஜலி செய்யத் தெரிந்த ஒரே விவசாயி சித்து மட்டும்தான். “கன்னடத்தில் ஜல்கி என இதை அழைப்பார்கள்,” என்கிறார் அவர். கராடகா, மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லையிலிருக்கும் பெலகாவியின் சிகோடி தாலுகாவில் இருக்கிறது. கிராமத்தில் இருக்கும் 9,000 பேர் மராத்தியும் கன்னடமும் பேசுகின்றனர்.
பால்ய காலத்தில், பருத்தி நூல் வர ட்ரக்குகளுக்காக சித்து காத்திருப்பார். “ஏனெனில் (வலிமையான) காற்றால், ஓடும் ட்ரக்கிலிருந்து நூல் விழும். அவற்றை நான் சேகரிப்பேன்,’ என விளக்குகிறார். நூல்களை கொண்டு முடிச்சு போட்டு விளையாடுவார். “இக்கலையை யாரும் எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. ஒரு (மூத்த) தங்கரை பார்த்து நான் கற்றுக் கொண்டேன்.”
முதல் வருடத்தில், வளையங்களை மட்டும் செய்து கொண்டிருந்த சித்து, முடிச்சு போட பலமுறை முயன்றார். “இறுதியில் செம்மறி மற்றும் நாய் ஆகியவற்றுடன் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு, இந்த கடினமான கலையை நான் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர். “ஒரே அளவிலான வளையங்களை செய்து, மொத்த ஜலியும் செய்து முடிக்கும் வரை அது குலையாமல் வைத்திருப்பதுதான் திறமை,” என்கிறார் ஊசியின்றி பின்னும் அவர்.
மெல்லிய நூலால் நல்ல முடிச்சுகளை உருவாக்க முடியாது. எனவே முதலில் சித்து நூலை தடிமனாக ஆக்க வேண்டும். அதற்கு பெரிய உருளையிலிருந்து 20 அடி வெள்ளை நூல் தேவை. அதை அவர் வேகமாக தக்லி அல்லது பிங்கிரி என மராத்தியில் அழைக்கப்படும் பாரம்பரிய உபகரணத்தில் வேகமாகக் கட்டுகிறார். ஒரு காளான் போல ஒரு பக்கம் பரந்தும் மறுபக்கம் கூம்பாகவும் இருக்கும் 25 செண்டிமீட்டர் நீள மர உபகரணம்தான் தக்லி.
பிறகு அதை அவர், தனது வலது காலில் இருக்கும் 50 வருட பாபுல் (கருவேல மரக் கட்டை) தக்லி யில் வைத்து வேகமாக சுற்றுகிறார். சுற்றுவதை நிறுத்தாமல், தக்லி யை இடது கையில் தூக்கி நூலை எடுக்கத் தொடங்குகிறார். “தடிமன் நூலை செய்வதற்கான பாரம்பரிய வழி இது,” என்கிறார் அவர். 20 அடி மெல்லிய நூலை சுற்ற அவருக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் பிடிக்கிறது.
தடிமன் நூலின் விலை அதிகம் என்பதால் இம்முறையை பின்பற்றுவதாக அவர் சொல்கிறார். “மூன்று இழைகள் கொண்டு நூல் செய்யப்பட வேண்டும்.” ஆனால் காலுக்கும் தக்லி க்கும் ஏற்படும் உராய்வால் எரிச்சலும் சிராய்ப்பும் ஏற்படும். “பிறகு என்ன? ஓரிரண்டு நாட்களுக்கு ஓய்வுதான்,” என்கிறார் சிரித்தபடி.
தக்லி கிடைப்பது இப்போது கஷ்டமாக இருக்கிறது என்கிறார் சித்து.”இளம் தச்சர்களுக்கு அதை எப்படி செய்வதென தெரியவில்லை.” 1970களின் தொடக்கத்தில் ஒரு கிராமத்து தச்சரிடமிருந்து 50 ரூபாய்க்கு அவர் வாங்கினார். அந்தக் காலக்கட்டத்தில் நல்ல தரமான அரிசி ஒரு கிலோவே வெறும் ஒரு ரூபாய்தான்.
ஜலி செய்ய இரண்டு கிலோ பருத்தி நூல் வாங்குகிறார். நூலின் அடர்த்தி மற்றும் தடிமன் சார்ந்து அவர் பல அடி நீள நூலை உருட்டுகிறார். சில வருடங்களுக்கு முன் வரை, பருத்தி நூலை அவர் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மகாராஷ்டிராவின் ரெண்டல் கிராமத்தில் வாங்கினார். “இப்போது, நூல் சுலபமாக எங்கள் கிராமத்திலேயே கிடைக்கிறது. விலை தரத்தை சார்ந்து ஒரு கிலோ 80-100 ரூபாய் ஆகிறது.” 90களின் பிற்பகுதியில் அதே நூல் கிலோ 20 ரூபாய்க்கு விற்றதாக நினைவுகூருகிறார். இரண்டு கிலோ வரை வாங்கியிருக்கிறார்.
ஆண்களே பாரம்பரியமாக ஜலி செய்து வந்திருந்தாலும் அவரின் மனைவியான காலஞ்சென்ற மயவ்வா, நூலை தடிமனாக்க அவருக்கு உதவியிருக்கிறார். “அவள் திறமை பெற்றவள்,” என நினைவுகூருகிறார் சித்து. மயவ்வா 2016ம் ஆண்டில் சிறுநீரகம் செயலிழந்து மறைந்துவிட்டார். “தவறான சிகிச்சை அவளுக்குக் கொடுக்கப்பட்டது. ஆஸ்துமா சிகிச்சைக்காக நாங்கள் சென்றோம். மருந்துகளின் பக்கவிளைவால் அவளின் சிறுநீரகம் செயலிழந்துவிட்டது,” என்கிறார் அவர்.
அவரின் காலஞ்சென்ற மனைவி போல பலர், செம்மறி வளர்ப்பதும் கம்பளி நூல்களை தயாரிப்பதிலும் திறமை கொண்டிருக்கிறார்கள் என்கிறார் சித்து. இந்த நூல்களை பிறகு தங்கர்கள், கொங்கடிகள் (கம்பளி போர்வைகள்) குழித்தறியில் செய்யும் சங்கர்களுக்குக் கொடுப்பார்கள். குழித்தறி என்பது குழிக்குள் வைக்கப்பட்டு, நெசவாளர் மிதித்து நெய்யும் தறி வகை.
தேவை மற்றும் நேரத்தை பொறுத்து நூல்களை சித்து தடிமன் ஆக்குவார். பிறகு விரலால் நெய்யும் கடினமான வேலையை செய்வார். இரண்டு வளையங்களை செய்து அவற்றை சுற்றி வேகமாக முடிச்சு போடுவார். ஒரு பைக்கு, சம தூரத்தில் இருக்கும் 25 வளையங்களின் சங்கிலியை அவர் செய்வார்.
”வளையங்களை உருவாக்குவதுதான் மிகவும் கஷ்டமான பகுதி.” கிராமத்தில் ஜலி செய்யத் தெரிந்த 2-3 தங்கர்களும், “வளையங்களை செய்ய எப்போதும் சிரமப்படுவார்கள். எனவே அவர்கள் செய்வதையே நிறுத்தி விட்டார்கள்,” என்கிறார்.
வளையத்தை செய்ய சித்து 14 மணி நேரங்களுக்கும் மேல் செலவழிக்கிறார். “ஒரு தவறு செய்தாலும் மொத்தத்தையும் திரும்ப செய்ய வேண்டும்.” ஒரு ஜலி செய்ய குறைந்தபட்சம் 20 நாட்கள் ஆகும். தினமும் மூன்று மணி நேரமேனும் சித்து வேலை செய்ய வேண்டும். 60 மணி நேரங்களில் அவர் 300 அடி நீள நூலை சம அளவு முடிச்சுகளுடன் பின்னுகிறார். தற்போது விவசாயத்தில் அதிகமாக நேரம் கழிக்கும் சித்து, ஜலி செய்யவும் நேரம் எடுத்துக் கொள்கிறார். கடந்த எழுபது ஆண்டுகளில் அவர், பல தங்கர்களுக்கு 100 ஜலிகள் வரை செய்து கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட 6,000 மணி நேரங்கள் செலவு செய்திருக்கிறார்.
அன்பாக சித்து பத்கர் மதாரா (தலைப்பாகை அணிந்த முதியவர்) என அழைக்கப்படுகிறார். தினமும் அவர் தலைப்பாகை அணிந்திருப்பார்.
வயதாகி இருந்தாலும் அவர், ஒன்பது வருடங்களாக வாரி விழாவுக்காக மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தின் பந்தார்பூர் டவுனிலுள்ள விதோபா கோவிலுக்கு 350 கிலோமீட்டர் பாதயாத்திரை சென்று வருகிறார். மகாராஷ்டிரா மற்றும் வட கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் குழுக்களாக சேர்ந்து ஜூன்/ஜூலை மாதங்களிலும் தீபாவளிக்கு பிறகு அக்டோபர்-நவம்பர் மாதத்திலும் யாத்திரை செல்வார்கள். அபாங் எனப்படும் பக்தி பாடல்களையும் துகாராம், தியானேஸ்வர் மற்றும் நம்தேவ் போன்றோரின் கவிதைகளையும் அவர்கள் பாடுவார்கள்.
“வாகனத்தில் செல்ல மாட்டேன். விதோபா என்னுள் இருப்பதால் எனக்கு எதுவும் ஆகாது என தெரியும்,” என்கிறார் அவர். பந்தார்பூரின் வித்தால்-ருக்மிணி கோவிலை அடைய அவருக்கு 12 நாட்களாகும். அடைந்ததும் ஓய்வெடுப்பார். பருத்தி நூலை எடுத்து வளையங்கள் செய்யத் தொடங்குவார்.
சித்துவின் தந்தையான, காலஞ்சென்ற பாலுவும் ஜலிகள் செய்திருக்கிறார். ஜலி கலைஞர்கள் எவரும் இல்லையென்பதால், தங்கர்கள் துணிப்பைகளுக்கு மாறி விட்டனர். “நேரமும் பொருட்களும் அதிகமாக தேவைப்படுவதால், அக்கலையை தொடர முடிவதில்லை,” என்கிறார் சித்து. நூலுக்கு 200 ரூபாய் செலவு செய்கிறார். ஆனால் ஒரு ஜலி 250லிருந்து 300 ரூபாய்க்குதான் விற்கும். “பெரிய பயனில்லை,” என்கிறார் அவர்.
அவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். 50 வயதுகளில் இருக்கும் மல்லப்பாவும் 35 வயது கல்லப்பாவும் கால்நடை மேய்க்கும் வேலையை விட்டுவிட்டு, இருவரும் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்கின்றனர். விவசாயியாக இருக்கும் 45 வயது பாலு, 50 செம்மறிகளை மேய்க்க தூரப் பகுதிகளுக்கு பயணிக்கிறார். 30 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் மகள் ஷனா, மணம் முடித்து வீட்டை பார்த்துக் கொள்கிறார்.
அவரின் மகன்களில் எவரும் இக்கலையை கற்றுக் கொள்ளவில்லை. “அவர்கள் கற்கவுமில்லை. முயலவுமில்லை. விரும்பவுமில்லை,” என்கிறார் அவர் ஒரே மூச்சாக. மக்கள் அவரின் பணியை கவனத்துடன் பார்க்கின்றனர். ஆனால் யாரும் கலையை கற்க முன்வரவில்லை.
வளையம் செய்வது சுலபமாக தெரியலாம், ஆனால் பல சவால்களை கொண்டது. உடல்ரீதியாக சோர்வை கொடுக்கவல்லது. “ஊசி நூல் வேலை போன்றது,” என்கிறார் அவர். இந்த வேலை அவருக்கு முதுகு வலியும் கண்களில் பாதிப்பையும் கொடுக்கிறது. சில வருடங்களுக்கு முன் கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை அவரது இரு கண்களிலும் செய்யப்பட்டது. இப்போது கண்ணாடி அணிகிறார். இதனால் வேகம் குறைந்தாலும், கலையை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்கிற அவரின் உணர்வு உறுதியாக இருக்கிறது.
ஜனவரி 2022ம் ஆண்டு வெளியான Grass and Forage Science-ல் பிரசுரிக்கப்பட்ட இந்தியாவின் தீவனத் தயாரிப்பு பற்றிய ஆய்வு , பசுமைத் தீவனமும் தீவனப் பொருட்களும் உலர் பயிர் மிச்சமும் இந்தியாவில் பற்றாக்குறையாக இருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது.
அவரின் கிராமத்தில் குறைவான எண்ணிக்கையிலான தங்கர்கள் மட்டுமே செம்மறி மற்றும் ஆடுகள் வளர்க்க தீவனப் பற்றாக்குறை ஒரு காரணம். “கடந்த 5-7 வருடங்களில் பல செம்மறிகளும் ஆடுகளும் இறந்துவிட்டன. காரணம், விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதுதான்,” என்கிறார் அவர். விவசாயம் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு ஒன்றிய அமைச்சக த்தின்படி, கர்நாடக விவசாயிகள் கடந்த 2022-23-ல் 1,669 மெட்ரிக் டன் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தியிருக்கின்றனர். 2018-19-ல் இருந்த 1,524 மெட்ரிக் டன்களை விட இது அதிகம்.
மேலும் அவர், கால்நடை வளர்ப்பிலும் செலவு அதிகமாகிவிட்டதாக சொல்கிறார். மருத்துவ செலவுதான் அதிகம். “ஒவ்வொரு வருடமும், கிட்டத்தட்ட 20,000 ரூபாய் வரை ஒவ்வொருவரும் விலங்குகளின் மருத்துவம் மற்றும் ஊசிகளுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அடிக்கடி அவை நோய்வாய்ப்படுகின்றன,” என்கிறார்.
ஒவ்வொரு செம்மறிக்கும் வருடந்தோறும் ஆறு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்கிறார். “செம்மறி உயிரோடு இருந்தால்தான் வருமானம்.” மேலும் அப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் கரும்புகளை விளைவிக்கின்றனர். 2021-2022-ல் கிட்டத்தட்ட 50 கோடி மெட்ரிக் டன் கரும்புகளை தயாரித்து, உலகின் சர்க்கரை தயாரிப்பிலும் நுகர்விலும் பெரிய நாடாக இந்தியா மாறியிருக்கிறது.
இருபது வருடங்களுக்கு முன்பே கால்நடைகள் வளர்ப்பதை நிறுத்தி விட்டு, 50 விலங்குகளை மகன்களுக்கு சித்து கொடுத்துவிட்டார். விவசாயத்தை பாதித்திருக்கும் பருவம் தப்பிய மழை குறித்து பேசுகிறார். “இந்த வருடம், ஜூன் முதல் ஜூலை நடுப்பகுதி வரை, நீரில்லாததால் என் மூன்று ஏக்கர் நிலத்தில் ஒன்றும் போடவில்லை. ஒரு பக்கத்து வீட்டுக்காரர் உதவியதால், நிலக்கடலை போட முடிந்தது.”
வெப்ப அலைகளாலும் இடைவிடாத மழையாலும் விவசாயம் சவாலாகி வருகிறது என்கிறார் அவர். “முன்பெல்லாம் பெற்றோர் நிறைய செம்மறிகளையும் ஆடுகளையும் குழந்தைகளுக்கு கொடுத்து சென்றனர். இப்போது இலவசமாக அவை கொடுக்கப்பட்டாலும் வேண்டாம் என சொல்லுமளவுக்கு காலம் மாறிவிட்டது.”
இக்கட்டுரை மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளையின் ஆதரவில் சங்கெத் ஜெயின் எழுதும் கிராமப்புற கலைஞர்கள் பற்றிய தொடரின் ஒரு பகுதி
தமிழில்: ராஜசங்கீதன்