“என் அம்மா பாடியதில் இரண்டு - மூன்று வார்த்தைகள் நினைவில் இருக்கிறது,” என்கிறார் ஹவுசாபாய் டிகே. அது 1995ம் ஆண்டு. அவர் ஹேமா ரைர்கர் மற்றும் கய் பொய்டெவின் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். 1980களின் பிற்பகுதியில் க்ரைண்ட்மில் பாடல்கள் பணியை துவக்கிய அவர்கள், சமூக அறிவியலாளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் இருந்தனர். புனேவை சேர்ந்த அவர்கள் முல்ஷி தாலுகாவின் பம்பார்டே கிராமத்துக்கு குழுவாக வந்து, க்ரைண்ட்மில் பாடல்களுக்காக பெண் பாடகர்களுடன் பேசினார்கள்.
மேலும் ஹவுசாபாய், “வயல் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது மாவு இருக்காது. அரைகல்லில் அரிசி போட்டு பாடியபடியே அரைப்பேன். அது இல்லாமல் எங்களின் நாள் முழுமையடையாது. என் நினைவுக்கு வரும் வார்த்தைகளை கொண்டு பாடல்கள் உருப்பெரும். நான் இறக்கும் வரை இப்பாடல்கள் நிற்காது. அதுவரை நான் அவற்றை நினைவில் கொண்டிருப்பேன்,” என்கிறார். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், குயவர்கள் மற்றும் தோட்டக்காரர்களை கொண்ட கிராம சமூகத்தின் பெண்களின் குரலை அவரது வார்த்தைகள் எதிரொலிக்கிறது. அன்றாடம் நெடுநேரம் வேலை பார்க்கும் அவர்கள், சூரியன் உதிக்கும் முன்பே தூங்கியெழுந்து வீட்டு வேலைகளை செய்து வயல் வேலைக்கு செல்கின்றனர்.
பெரும்பாலும் நாளின் முதல் வேலையாக இருப்பது அரைகல்லில் மாவரைப்பதுதான். பாடிக் கொண்டே அவர்கள் அரைத்தார்கள். சமையலறை அல்லது வராண்டாவின் மூலைதான் அவர்களுக்கு வசதி. அவர்களின் போராட்டங்களையும் சந்தோஷத்தையும் வெற்றிகளையும் பாடல்களின் வழியாக பகிர்ந்து கொள்வதற்கான தனிப்பகுதி அது.
அப்படி அவர்கள் செய்யும்போது உலகை பற்றியும் கிராம வாழ்க்கை பற்றியும் உறவுகள், மதம், ஆன்மிக யாத்திரை பற்றியும், சாதி, ஆணாதிக்க ஒடுக்குமுறை மற்றும் பாபாசாகெப் அம்பேத்கர் பற்றியும் இன்னும் பல விஷயங்கள் குறித்தும் அவர்கள் கொண்டிருக்கும் பார்வையையும் பகிர்வார்கள். இந்த காணொளியில், புனேவின் முல்ஷி தாலுகாவிலுள்ள கதாக்வாடி கிராமத்தை சேர்ந்த தாராபாய் உபே அதைப் பற்றி பேசுகிறார்.





