அரத்தோண்டி கிராமத்தின் குறுக்கு சந்துகளில் ஒரு இனிமையான மயக்கும் நறுமணம் வீசுகிறது.
ஒவ்வொரு வீட்டிற்கு முன் உள்ள முற்றத்தில், மூங்கில் பாய்கள், மென்மையான விரிப்புகள் மற்றும் மண் தரைகளில் மஞ்சள், பச்சை மற்றும் பழுப்பு நிற இலுப்பை பூக்கள் காய்ந்து கொண்டிருக்கிறது. புதிதாகப் பறிக்கப்பட்ட மஞ்சள் மற்றும் பச்சை நிற மலர்கள், வெயிலில் உலர்த்தப்பட்ட பிறகு காய்த்து, கடினமாகி, பழுப்பு நிறமாகி விடுகின்றன.
மஹாராஷ்டிராவின் கோந்தியாவில், தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில், இது இலுப்பைக்கான பருவகாலமும் ஆகும்.
"ஏப்ரலில் இலுப்பை, மே மாதத்தில் கருங்காலி இலை" என்று சார்த்திகா கைலாஷ் ஆடே துவங்குகிறார். "இதுதான் எங்களின் ஆதாரம்." ஒவ்வொரு காலையிலும், 35 வயதான இவரும், மானா மற்றும் கோந்த் பழங்குடியினத்தைச் சேர்ந்த பிற கிராமவாசிகளும் 4-5 மணி நேரம் சுற்றியுள்ள காடுகளில், உயரமான இலுப்பை மரங்களிலிருந்து விழும் மென்மையான பூக்களை சேகரிக்கின்றனர். அவற்றின் இலைகள் இப்போது சிவப்பு நிறத்தில் உள்ளன. நண்பகலில், வெயில் 41 டிகிரி செல்சியஸை தொடும்போது, வெப்பம் இன்னும் அதிகமாகிறது.
ஒவ்வொரு இலுப்பை மரமும் சராசரியாக 4-6 கிலோ பூக்களைத் தருகின்றன. அரத்தோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் (உள்ளூர் மக்களால் அரக்தொண்டி என்றும் அழைக்கப்படுகிறது) மூங்கில் கேன்கள் அல்லது பிளாஸ்டிக் சாக்குகளில் சேகரித்து வீட்டிற்கு கொண்டு வந்து வருகிறார்கள். உலர்ந்த இலுப்பைப்பூ, கிலோ ஒன்றிற்கு அவர்களுக்கு ரூ.35 முதல் 40 வரை பெற்றுத் தருகிறது. ஒவ்வொரு நபரும் நாளொன்றிற்கு சராசரியாக 5-7 கிலோ வரை தினமும் சேகரிக்கின்றனர்.
















