பாகுன் மாதம் முடியவிருக்கிறது. சோம்பலான ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலை சூரியன், சுரேந்திர நகர் மாவட்டத்தின் கரகோடா ஸ்டேஷனுக்கருகே இருக்கும் சிறு கால்வாயில் பிரதிபலிக்கிறது. ஒரு சின்ன தடை, அந்த கால்வாயில் உள்ள நீரை தேக்கி, சிறு குளத்தை உருவாக்கி இருக்கிறது. தடையைத் தாண்டும் நீரின் சத்தம், கரைகளில் அமைதியாக அமர்ந்திருக்கும் குழந்தைகளை விட அதிகமாக இருக்கிறது. காற்றடித்து ஓய்ந்திருக்கும்  காட்டுச்செடிகளைப் போல் ஏழு சிறுவர்கள், தூண்டிலில் மீன் மாட்டுவதற்காக அமைதியாக காத்திருக்கின்றனர். ஒரு சின்ன அசைவு இருந்தாலும் இளம் கைகள் தூண்டிலை இழுத்து விடும். ஒரு மீன் சிக்கும். தடதடவென ஆடியபடி. படபடப்பு சில நிமிடங்களில் அடங்கி விடும்.

கரையிலிருந்து சற்றுத் தள்ளி, அக்‌ஷய் தரோதராவும் மகேஷ் சிபாராவும் பேசி, கத்தி, ஒருவரையொருவர் திட்டி, மீனை ஒரு ஹாக்சா பிளேடு கொண்டு வெட்டி சுத்தப்படுத்துகின்றனர். மகேஷுக்கு பதினைந்து வயது ஆகப் போகிறது. மற்ற ஆறு பேரும் இளையவர்கள். மீன்பிடி விளையாட்டு முடிந்து விட்டது. இப்போது ஓடிப் பிடித்து விளையாடி, சிரித்து, பேசுவதற்கான நேரம். மீன் சுத்தமாகி விட்டது. அடுத்தது கூட்டு சமையல். வேடிக்கை தொடர்கிறது. சமையல் முடிந்து விட்டது. பகிர்தல் நடக்கிறது. சிரிப்புகள் தூவப்பட்ட ஓர் உணவு அது.

சற்று நேரம் கழித்து, சிறுவர்கள் குளத்துக்குள் குதித்து நீந்துகின்றனர். பிறகு கரையிலுள்ள புற்கள் மீது அமர்ந்து காய்ந்து கொள்கின்றனர். மூன்று சிறுவர்கள் சும்வாலியா கோலி சீர்மரபு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவர் இஸ்லாமியர்கள். ஏழு சிறுவர்களும் இந்த மதியவேளையை ஒன்று கூடி, பேசி, திட்டி, சிரித்து கழிக்கின்றனர். அவர்களருகே நான் சென்று புன்னகைத்து, முதல் கேள்வி கேட்டேன், “எல்லாரும் என்ன கிளாஸ் படிக்கிறீங்க?”

இன்னும் உடைகளை அணியாத பவன் சிரிக்கிறான், “இது மகேஷியோ (மகேஷ்) ஒன்பதாவது படிக்கிறார். விலாசியோ (விலாஸ்) ஆறாவது படிக்கிறான். வேறு யாரும் படிக்கவில்லை. நான் கூட படிக்கவில்லை.” ஒரு பாக்குப் பொட்டலத்தை பிரித்து, புகையிலையை கலக்கிக் கொண்டே பேசுகிறான். இரண்டையும் கையில் வைத்து தேய்த்து, ஒரு சிட்டிகையை எடுத்து வாய்க்குள் பற்களுக்கு இடையே வைத்து விட்டு, மிச்சத்தை மற்றவர்களுக்குக் கொடுக்கிறான். காவி சாற்றை நீருக்குள் துப்பிவிட்டு, “படிப்பதில் சந்தோஷம் இல்லை. ஆசிரியை எங்களை அடிப்பார்,” என்கிறான். எனக்குள் அமைதி பரவுகிறது.

PHOTO • Umesh Solanki

ஷாருக்கும் (இடது) சோஹிலும் மீன்பிடிப்பதில் கவனமாக இருக்கின்றனர்

PHOTO • Umesh Solanki

மீனை சுத்தப்படுத்தும் மகேஷும் அக்‌ஷயும்

PHOTO • Umesh Solanki

மூன்று கற்களை கொண்டு ஒரு தற்காலிக அடுப்பு உருவாக்கப்படுகிறது. சில சுள்ளிகளையும் ஒரு பிளாஸ்டிக் கவரையும் வைக்கும் கிருஷ்ணா, அடுப்பில் தீ மூட்டுகிறார்

PHOTO • Umesh Solanki

அக்‌ஷயும் விஷாலும் பவனும் ஆர்வத்துடன் காத்திருக்க, சட்டியில் எண்ணெயை ஊற்றுகிறார் கிருஷ்ணா

PHOTO • Umesh Solanki

சிறுவர்களில் ஒருவன் கொண்டு வந்த சட்டியில் மீன் சேர்க்கப்படுகிறது. எண்ணெயை சோஹிலும் மிளகாய்ப் பொடி, மஞ்சள், உப்பு ஆகியவற்றை விஷாலும் கொண்டு வந்தனர்

PHOTO • Umesh Solanki

மதிய உணவுக்காக காத்திருக்கும் கிருஷ்ணா

PHOTO • Umesh Solanki

சமயல் போட்டி நடக்கிறது. சிறுவர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்

PHOTO • Umesh Solanki

வீட்டிலிருந்து எடுத்து வந்த சில ரொட்டிகளுடன் தாங்கள் சமைத்த உணவை, ஒரு தார்ப்பாய்க்கு கீழே அமர்ந்து சிறுவர்கள் உண்ணுகின்றனர்

PHOTO • Umesh Solanki

சுவையான மீன் குழம்பு ஒரு பக்கம், வெயிலேற்றும் சூரியன் மறுபக்கம்

PHOTO • Umesh Solanki

வெயிலும் வியர்வையும் நீச்சலுக்கு இட்டுச் செல்கிறது

PHOTO • Umesh Solanki

‘வா, நீந்தலாம்’ மகேஷ் கால்வாய் நீரில் குதிக்கிறான்

PHOTO • Umesh Solanki

ஏழு சிறுவர்களில் ஐந்து பேர் பள்ளிக்கு செல்வதில்லை. காரணம், அங்கிருக்கும் ஆசிரியர்கள் அடிக்கிறார்களாம்

PHOTO • Umesh Solanki

நீந்துகின்றனர், விளையாடுகின்றனர், வாழ்க்கை கற்றுக் கொடுப்பதை கற்கின்றனர்

தமிழில் : ராஜசங்கீதன்

Umesh Solanki

उमेश सोलंकी अहमदाबाद स्थित छायाचित्रकार, बोधपटकार आणि लेख आहेत. त्यांनी पत्रकारितेत पदव्युत्तर शिक्षण घेतलं असून मुशाफिरी करायला त्यांना आवडतं.

यांचे इतर लिखाण Umesh Solanki
Editor : Pratishtha Pandya

प्रतिष्ठा पांड्या पारीमध्ये वरिष्ठ संपादक असून त्या पारीवरील सर्जक लेखन विभागाचं काम पाहतात. त्या पारीभाषासोबत गुजराती भाषेत अनुवाद आणि संपादनाचं कामही करतात. त्या गुजराती आणि इंग्रजी कवयीत्री असून त्यांचं बरंच साहित्य प्रकाशित झालं आहे.

यांचे इतर लिखाण Pratishtha Pandya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan