கை நீண்டு திறந்திருக்கும் உள்ளங்கையில் தேங்காயை கொண்டிருக்கும் பூசாரி ஆஞ்சநேயலு, முட்டலப்புரம் வயல்களினூடாக நடந்து செல்கிறார். தேங்காய் அசைந்து, சுற்றி, கீழே விழ காத்திருக்கிறார். X அடையாளம் போட்டிருக்கும் ஒரு இடத்தை காட்டுகிறார். “இங்கு நீர் இருக்கும். இங்கு ஓர் ஆழ்துளைக் கிணறு தோண்டுங்கள். உங்களுக்கு தெரியும்,” என்கிறார் அவர் அனந்தப்பூர் மாவட்டத்தின் இக்கிராமத்தில்.
ஒரு கிராமம் தள்ளியிருக்கும் ராயுலு தோமதிம்மனா அடுத்த வயலுக்கு குனிந்து செல்கிறார். அவர் கையில் பிடித்திருக்கும் பெரிய சுள்ளி, ராயலப்படோடியில் நீர் இருக்கும் இடம் நோக்கி அவரை இட்டுச் செல்லும். “சுள்ளி மேல்நோக்கி நகரந்தால், அதுதான் இடம்,” என விளக்குகிறார். அவரின் உத்தி, “90 சதவிகிதம் வெற்றி” அடைந்திருப்பதாக கூறுகிறார்.
அனந்தப்பூரின் இன்னொரு மண்டலத்தில், தத்துவவியலாளர்களை காலந்தோறும் உலுக்கி வந்த கேள்வி சந்திரசேகர் ரெட்டியை பீடித்திருந்தது. மரணத்துக்கு பிறகு வாழ்க்கை இருக்கிறதா? தனக்கு பதில் தெரியுமென ரெட்டி நம்புகிறார். “நீர்தான் வாழ்க்கை,” என்கிறார் அவர். என்வே மயானத்தில் நான்கு ஆழ்துளைக் கிணறுகளை தோண்டியிருக்கிறார். அவரின் வயல்களில் 32 கிணறுகள் இருக்கின்றன. அவரின் நீர்நிலைகளிலிருந்து மொத்த ஜம்புலதனுக்கும் நீரை ஒரு எட்டு கிலோமீட்டர் குழாயில் எடுத்து சென்று மற்றவருக்கும் கொடுக்கிறார்.
நீருக்கான அனந்தப்பூரின் தேடலில் மூடநம்பிக்கை, அமானுஷ்யம், அரசாங்கம் தொழில்நுட்பம் மற்றும் தேங்காய்கள் என எல்லாமும் பங்களிக்கின்றன. அவை எல்லாமும் சேர்ந்து அளிக்கும் பலன் சிறப்பானதாகவே இருக்கிறது. ஆனால் பூசாரி ஆஞ்சநேயலு வேறுவிதமாக சொல்கிறார்.
மென்மையாக பேசும் அவர், தனது உத்தி தோற்றதில்லை என கூறுகிறார். கடவுளிடமிருந்து அந்த திறமை அவருக்குக் கிடைத்திருக்கிறது. “தவறான நேரத்தில் மக்கள் இதை செய்யும்படி என்னை கட்டாயப்படுத்தும் சமயத்தில் மட்டும்தான் சரியாக இது நடக்காமல் போகும்,” என்கிறார் அவர். (ஒரு ஆழ்துளைக் கிணறு பகுதி கண்டுபிடிக்க, கடவுள் 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்). நம்மை வயல்களினூடாக கையில் தேங்காய் ஏந்தியபடி அழைத்து செல்கிறார்.









