“தேர்தல் நாள் இப்பகுதியில் திருவிழா போல இருக்கும்,” என்கிறார் மர்ஜினா காதுன், நெய்யவிருக்கும் துணிகளை அடுக்கியபடி. “வேலைகளுக்காக பிற மாநிலங்களுக்கு சென்றவர்கள், வாக்களிக்க இங்கு வருவார்கள்.”
அவர் வசிக்கும் ருபாகாச்சி கிராமம், மே 7, 2024 அன்று தேர்தல் நடக்மும் துப்ரி மக்களவை தொகுதியில் வருகிறது.
ஆனால் 48 வயது மர்ஜினா வாக்களிக்கவில்லை. “அந்த நாளை நான் புறக்கணிப்பேன். மக்களை தவிர்க்க வீட்டுக்குள் ஒளிந்து கொள்ளவும் செய்வேன்.”
வாக்காளர் பட்டியலில் மர்ஜினா, சந்தேகத்துக்குரிய வாக்காளர் (D Voter) என குறிக்கப்பட்டிருக்கிறார். இந்தியக் குடியுரிமைய நிரூபிக்க முடியாத 99,942 வாக்காளர்களில் அவரும் ஒருவர். பெரும்பாலானோர் அஸ்ஸாமை சேர்ந்த வங்க மொழி பேசும் இந்துக்களும் இஸ்லாமியரும்தான்.
சந்தேகத்துக்குரிய வாக்காளர் என்கிற வகைமையை வைத்திருக்கும் ஒரே மாநிலம், அஸ்ஸாம். வங்க தேசத்திலிருந்து சட்டவிரோத புலப்பெயர்வு நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டே காரணம். D-Voter வகையை, தேர்தல் ஆணையம் கொண்டு வந்த 1997ம் ஆண்டில்தான் வாக்காளர் பட்டியலில் தன் பெயர் சேர்க்கும் விண்ணப்பத்தையும் கொடுத்தார் மர்ஜினா. “அப்போதெல்லாம் பட்டியலில் பெயர் சேர்க்க பள்ளி ஆசிரியர்கள் வீடுதோறும் செல்வார்கள். நானும் என் பெயர் கொடுத்தேன்,” என்கிறார் மர்ஜினா. “ஆனால் அடுத்த தேர்தலில் வாக்களிக்க சென்றபோது அவர்கள் என்னை வாக்களிக்க விடவில்லை. என்னை சந்தேகத்துக்குரிய வாக்காளர் என்றனர்.”





