கொள்முதல் செய்யும் முகவரிடம் பழைய ரூ.500 நோட்டுகளை பெறுவதை தவிர பாண்டு கோர்மடிக்கு வேறு வழியில்லை. அதுவும் அறுவடை செய்த கத்தரிக்காய்களின் ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் 200 ரூபாய் குறைவாக அவர் பெற்றுள்ளார்.
“நான் அதற்கு சம்மதிக்காவிட்டால், விளைச்சல் அனைத்தும் வீணாகும்,” என்கிறார் வயது 40களில் உள்ள அந்த விவசாயி. அவர் கேரட், பாலக்கீரை, கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை நாக்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிச்சோலியில் விளைவிக்கிறார். “தானியங்கள், பருத்தி விளைவிக்கும் விவசாயிகள் சேமித்து வைத்துக் கொள்ளலாம். என்னால் முடியாது.”
பல ஆண்டுகளாக கோர்மேட் தினமும் காலையில் தனது டெம்போ வண்டியில் நான்கு குவிண்டால் (400கிலோ) காய்களை அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் ஏற்றிச் செல்வார். நாக்பூரில் மாநில அரசின் விவசாய உற்பத்தி சந்தை குழு மண்டியில் ஏஜெண்டுகள் மூலம் விளைபொருட்களை, உரிமம் பெற்ற வியாபாரிகள் வாங்கிக் கொள்வார்கள்.
அதிக மதிப்புள்ள பணத்திற்கு நவம்பர் 8-ம் தேதி மதிப்பிழப்பு செய்தது முதல், கோர்மேட் மண்டியில் நஷ்டத்திற்கு விற்று வருகிறார். அவரது மகன் அருகில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கியில் பணத்தை செலுத்த வரிசையில் காத்திருக்கிறார்.
பழைய நோட்டுகளை ஏற்பதால் மட்டுமே கோர்மேட் வருவாய் ஈட்ட முடிகிறது. நல்ல விளைச்சல் இருந்தும், சில விவசாயிகள் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
புனே, தானே சந்தைகளில் வாங்குவதற்கு யாருமில்லை என்பதால் பல விவசாயிகள் தங்கள் விளைச்சல்களை குப்பையில் கொட்டிச் சென்றதாக செய்தித்தாள் அறிக்கைகள் சொல்கின்றன .
நாக்பூரிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமராவதியின் ஹிவார்கெட் கிராம சந்தையில், ஆரஞ்சு விவசாயிகள் கடும் விலைச்சரிவை கண்டித்து தங்கள் பழங்களை குப்பையில் கொட்டிச் சென்றுள்னர்.
வியாபாரிகள் வாங்குவதை நிறுத்தியதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. பழைய நோட்டுகளை விவசாயிகள் ஏற்க மறுப்பதால் வியாபாரிகள் பழங்களை வாங்குவதற்கு முன்வரவில்லை.
பணமதிப்பு நீக்கம் எனும் மோசமான நடவடிக்கை தான் விவசாயிகளின் அவலநிலைக்கு காரணமா அல்லது மதிப்புள்ள பணத்தை மட்டுமே ஏற்க நினைத்து விவசாயிகள் தங்களை வருத்திக் கொள்கின்றனரா?
வியாபாரிகள் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணத்தை செலுத்துவதாக சொல்கின்றனர். ஆம்காவோன் கிராம முன்னாள் தலைவர் பவார் இதை ஏற்கிறார். எவ்வித தடையுமின்றி பணம் உடனடியாக வந்தடைகிறது.
அதே நாளில், தனக்கு தெரிந்த விவசாயிகள் எட்டு பேர் மண்டியில் பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு 80 குவிண்டால் பருத்தியை விற்றுள்ளதாக பவார் தெரிவித்தார். பருத்தி வருகை குறைவாக இருந்ததால் வியாபாரிகளும் குவிண்டால் ரூ.5000 கொடுத்து வாங்கிச் சென்றுள்ளனர்- இது வழக்கமான சந்தை விலையான ரூ.4750-4900 ஆகியவற்றை விட சற்று கூடுதலாகும்.
இதை ஏன் மற்ற விவசாயிகள் பின்பற்றுவதில்லை? பவார் விளக்குகிறார்:
பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வருமானத்தை வங்கிக் கணக்கில் செலுத்த அஞ்சுகின்றனர். காரணம் வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கியில் தான் அவர்கள் பயிர்க் கடன் பெற்றுள்ளனர். நீண்டகாலமாக கடனில் இருக்கும் பெரும்பாலானோர் கடனை திருப்பி செலுத்தவும் முடியாமல், குடும்பத்தையும் கவனிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
அவர்களின் வருவாய் ஒருமுறை வங்கிக் கணக்குகளுக்கு சென்றுவிட்டால், வங்கிகள் பணத்தை திருப்பி எடுக்க அனுமதிக்காது என அஞ்சுகின்றனர். மார்ச் மாதத்திற்குள் மீதமுள்ள கடன் தொகையை செலுத்துமாறு வற்புறுத்துகின்றனர். இது பெரும்பாலான விவசாயிகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
விவசாயிகள் கணக்கிலிருந்து தன்னிச்சையாக வங்கித் தொகையை பிடித்தம் செய்து கொள்ளுமாறு அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. ஆனால் வங்கிகள் இந்த தந்திரங்களை பயன்படுத்துகின்றனர். இனிவரும் ஆண்டுகளிலும் விவசாயிகள் கடன் வாங்க தங்களிடம் வரவேண்டும் என அவர்கள் நன்கு அறிந்துள்னர்.
“பணப் பரிவர்த்தனையை நான் ஏற்கிறேன். எனது பெயரில் எந்த கடனும் கிடையாது, எனக்கு பணத் தேவையும் உடனடியாக இல்லை,” என்றார் பவார். “எனது பயிர்க்கடன் என் தந்தையின் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளதால், எனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்ய மாட்டார்கள்.”
இதேப்போன்று மண்டியில் விற்ற அந்த எட்டு விவசாயிகளுக்கும் உடனடி பணத்தேவை இல்லை என்றார் அவர். “ஆனால் சிறு விவசாயிகளுக்கு வேறு வருவாய் ஆதாரம் கிடையாது. அவர்கள் காசோலை அல்லது பண பரிவர்த்தனையை ஏற்பதில்லை.”
நவம்பர் 16, புதன்கிழமையன்று, 38 வயது சுதாம் பவார் நாக்பூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் வர்தா மாவட்டம் செலு நகரில் உள்ள மண்டியில் ஒற்றை விவசாயியாக தனது ஒன்பது குவிண்டால் பருத்தியை விற்கிறார்.
“பணமதிப்பு நீக்கம் விவசாயிகளை சிதைத்துவிட்டது,” என்றார் செலு மண்டியில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைக் குழு(APMC) துணைத் தலைவரும், விவசாயியுமான ராம்கிருஷ்ணா உமதே. சோயாபீன், பருத்தி அதிகம் விளைவிக்கும் சுமார் 100 கிராமங்களுக்காக அந்த மண்டி செயல்படுகிறது. “ஒரு வாரமாக உற்பத்தியாளர்களும், வாங்குபவர்களும் எங்கள் சந்தைக்கு வருவதில்லை.”
இதனால் மூட்டை தூக்குபவர்கள், வாகன உரிமையாளர்கள் என இதை சார்ந்துள்ள பலரும் வேலையிழந்துள்ளனர் என்றார் சந்தையின் உதவிச் செயலாளர் மகேந்திரா பண்டார்கார்.
“இச்சமயத்தில் தான் வியாபாரம் சூடுபிடிக்கும். ஆனால் நவம்பர் 8-க்கு பிறகு சரக்குகள் வருவது நின்றுவிட்டது,” என்று புதன்கிழமையன்று கூறினார் உமதே.
ஒரு நாளுக்கு 5000 குவிண்டால் என இருந்த வருகை இப்போது பூஜியமாகிவிட்டது, என்றார் அவர். “நேற்று 100 சாக்கு மூட்டை(குவிண்டால்) வந்தது.”
வியாபாரிகள் காசோலை, பண பரிவர்த்தனை செய்ய தயாராக இருந்தாலும், “பயிர் கடனுக்கு பிடித்தம் செய்வார்கள்” என விவசாயிகள் மறுக்கின்றனர்.
“பெரும்பாலான வயல்கள் இங்கு பாசனமின்றி இருக்கின்றன. விவசாயிகள் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். கைமாற்றாக வாங்கிய கடன், உள்ளீட்டு செலவுக்கான கடனை திருப்பி செலுத்த வேண்டும். மளிகைப் பொருட்கள் போன்றவற்றிற்கு பணம் செலுத்த வேண்டும்” என்றார் உமதே.
“ஏதேனும் பணம் மிச்சமிருந்தால், வங்கியில் செலுத்துகின்றனர்- இல்லாவிட்டால் வங்கிக் கடன்கள் திருப்பி செலுத்தப்படுவதில்லை.”
உற்பத்திப் பொருட்களின் விற்பனை- விலைகளின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமும் உள்ளது: சில்லரை சந்தைகளில் நுகர்வு குறைந்துள்ளது. “முன்னேற்றம் தேக்கமடைந்துள்ளது,” என்றார் நாஷிக்கில் தக்காளி மொத்த வியாபாரம் செய்யும் ராஜேஷ் தாகர்.
வடஇந்தியா, கொல்கத்தா சந்தைகளில் பணமதிப்பு நீக்கத்தால் நாக்பூர் மண்டிக்கு வரும் ஆரஞ்சு பழங்கள் காய்ந்து போகின்றன என்றார் ஆரஞ்சு வியாபாரியும், நாக்பூர் APMC இயக்குநருமான ராஜேஷ் சாப்ராணி.
“ஆரஞ்சு விலை இன்று(செவ்வாய்) 25 முதல் 35 சதவிதம் சரிந்துள்ளது. ஒரு டன்னுக்கு ரூ.40,000லிருந்து ரூ.25-30,000 வரை விற்கிறது,” என்றார் அவர். “கொல்கத்தாவிற்கு தினமும் 10 முதல் 12 லாரி ஆரஞ்சுப் பழங்கள் அனுப்பிவைக்கப்படும். அது இப்போது நின்றுவிட்டது.”
வர்தா மாவட்டம் ஹிங்கன்காட் நகரில் உள்ள APMC இயக்குநர் மதுசூதன் ஹரானே பேசுகையில், “எங்கள் APMC நவம்பர் 8 முதல் மூடப்பட்டுள்ளது.”
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நேரத்தை அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “எங்கள் மண்டியில் ரூ.1500 கோடிக்கு ஆண்டு வணிகம் நடைபெறும். அதில் பாதி அக்டோபர்- டிசம்பர் மாதங்களில் நடைபெறும். இது தான் விவசாய சந்தைக்கு உச்சமான மாதங்கள்,” என்றார்.
முரணாக, நாட்டின் பல பிராந்தியங்களில் தொடர் வறட்சிக்கு பிறகு இந்த ஆண்டு பருவமழை நன்றாக இருந்த காரணத்தால் விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பியிருந்தனர்.
இக்கட்டுரை 2016, நவம்பர் 22ஆம் தேதி கொல்கத்தாவின் தி டெலிகிராஃப்பில் முதலில் (இங்கு சிறிது மாற்றப்பட்டுள்ளது) வெளியிடப்பட்டது.
தமிழில்: சவிதா