டும்-டும்-டும்… டும்-டும்-டும்…! தோலக்குகள் தயாரிக்கப்பட்டு, ஸ்ருதி சேர்க்கப்பட்டு, செழுமை செய்யப்படுகையில் எழும் மெய்மறக்கும் சத்தம், சாந்தி நகரின் ஒவ்வொரு சந்திலும் உங்களைத் தொடரும். தோலக் தயாரிக்கும் 37 வயது இர்ஃபான் ஷேக்குடன் நாம் நடந்து கொண்டிருக்கிறோம். மும்பையின் வடக்குப்பகுதியில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கான இப்பகுதியில் பிற கலைஞர்களை அறிமுகப்படுத்த நம்மை அழைத்து செல்கிறார்.
இங்குள்ள கலைஞர்கள் பெரும்பாலானோரில் பூர்விகம் உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டமாக இருக்கிறது. இந்த தொழிலில் அவர்கள் 50 பேர் இருக்கின்றனர். “எங்கு பார்த்தாலும் எங்களின் பிராதாரி (சமூகத்தினர்), இக்கருவிகளை மும்முரமாக தயாரித்துக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்,” என்கிறார் அவர் பெருமையுடன், இங்கிருந்துதான் தோலக்குகள் மும்பைக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் செல்கின்றன எனக் கூறி. (பிராதாரி என்றால் எங்களின் ஆட்கள் என மொழிபெயர்க்கலாம். பெரும்பாலும் இச்சொல், குழுவையும் ஒரு கூட்டத்தையும் குறிப்பிட பயன்படுகிறது).






