“மிர்ச்சி, லெஹ்சுன், அத்ரக்.. சுரைக்காய் இலைகள், கரேலா… வெல்லம்.”
மிளகாய், பூண்டு, இஞ்சி, சுரைக்காய் ஆகியவற்றை கொண்ட உணவு வகைக்கான குறிப்பு கிடையாது இது. பன்னா புலிகள் சரணாலயத்துக்கருகே இருக்கும் சுங்குனா கிராமத்தில் விவசாயத்துக்கான நிலம் மற்றும் பூச்சிமருந்தை இப்படித்தான் இயற்கை விவசாயி குலாப்ரானி தயாரிக்கிறார்.
53 வயதாகும் அவர், இப்பட்டியலை முதலில் கேட்டதும் என்ன தோன்றியது என்பதை சிரித்தபடியே நினைவுகூருகிறார். “இவற்றை எங்கு பெறுவது என நான் யோசித்தேன்? பிறகு சுரைக்காய்கள் காட்டில் கிடைப்பது தெரிய வந்தது…” என்கிறார். வெல்லம் போன்ற பொருட்களை அவர் சந்தையில் வாங்க வேண்டியிருந்தது.
அண்டை வீட்டாருக்கு சந்தேகம் வரவில்லையா? பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி குலாப்ரானிக்கு கவலை இல்லை. இயற்கை வேளாண்மைக்கு கிராமத்தின் 500 பேர் நகர்ந்திருக்கும் நிலையில், அவர்தான் அதற்கு தொடக்கமாக இருந்தார் என்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.
“சந்தையில் நாம் வாங்கும் உணவில் மருந்துகள் இருக்கின்றன. எல்லா வகை ரசாயனங்களும் அதில் கலக்கப்படுகின்றன. எனவேதான் அவற்றை ஏன் உண்ண வேண்டும் என நாங்கள் யோசித்தோம்,” என்கிறார் அவர் நான்கு வருடங்களுக்கு முன் நடந்த உரையாடல்களை நினைவுகூர்ந்து.
“இயற்கை உணவுகளுக்கு செல்வது நல்ல யோசனை என என் குடும்பம் கருதியது. இயற்கை உணவை உண்டால், ஆரோக்கியமும் பலனடையும் என நாங்கள் நினைத்தோம். இயற்கை உரங்களால், பூச்சிகள் அழிகின்றன. எங்களின் ஆரோக்கியம் தழைக்கிறது!” என்கிறார் அவர்.
மூன்றாம் வருடமாக 2.5 ஏக்கர் நிலத்தில் நடக்கும் இயற்கை விவசாயத்தில், அவரும் கணவர் உஜியான் சிங்கும் நெல், சோளம், துவரை, எள் ஆகியவற்றை சம்பா பருவத்துக்கும் கோதுமை, கொண்டைக் கடலை, கடுகு போன்றவற்றை குறுவை பருவத்துக்கும் விளைவிக்கின்றனர். வருடம் முழுக்க தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், வெண்டைக்காய், காய்கறி கீரை, சுரைக்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. “சந்தையிலிருந்து நாங்கள் எதையும் வாங்க வேண்டியதில்லை,” என்கிறார் அவர் சந்தோஷமாக.
கிழக்கு மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தின் விளிம்பில் சுங்குனா கிராமம் இருக்கிறது. இங்குள்ள பெரும்பான்மை குடும்பங்கள் ராஜ்கோண்ட் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவை. வருட மழை மற்றும் பக்கத்து கால்வாயை நம்பி சிறு நிலங்களில் விவசாயம் பார்த்து வருகின்றனர். வேலைகள் தேடி பலரும் கத்னி போன்ற பக்கத்து நகரங்களுக்கும் உத்தரப்பிரதேச பகுதிகளுக்கும் புலம்பெயருகின்றனர்.
“தொடக்கத்தில் ஒன்றிரண்டு விவசாயிகள்தான் இதை செய்யத் தொடங்கினோம். பிறகு 8-9 பேர் சேர்ந்தனர்,” என்கிறார் குலாப்ரானி, கிட்டத்தட்ட 200 ஏக்கர் நிலம் தற்போது இயற்கை வேளாண்மைக்குள் வந்திருக்கிறது என கணித்தபடி.
சமூக செயற்பாட்டாளரான ஷரத் யாதவ் சொல்கையில், “சுங்குனாவில் புலப்பெயர்வு குறைந்திருக்கிறது. காட்டை விறகுக்காக மட்டும்தான் சார்ந்திருக்கிறோம்.” மக்கள் அறிவியல் நிறுவனத்தின் (PSI) பகுதி ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஷரத் ஒரு விவசாயியும் ஆவார்.
நேரடியாக பேசும் குலாப்ரானியின் தன்மையும் கேள்வி கேட்கும் இயல்பும் அவருக்கு செல்வாக்கு பெற்று தந்ததாக சொல்கிறார் அவர். முதன்முதலாக அவர்கள் சொன்ன முறையின்படி சோளத்தை விளைவித்தவர் அவர்தான். நன்றாக விளைந்தது. அவரின் வெற்றிதான் மற்றவர்களுக்கு தூண்டுகோலாக அமைந்தது.
*****
“உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிக்கும் மாதந்தோறும் நாங்கள் 5,000 ரூபாய் வரை செலவு செய்து கொண்டிருந்தோம்,” என்கிறார் உஜியான் சிங். அவரின் நிலம் முழுமையாக ரசாயனங்களை சார்ந்து இருக்கிறது. உள்ளூரில் அதை ‘சித்கா கெடி’ (மருந்து அடிச்சு விவசாயம் செய்தல்) என சொல்வார்கள் என்கிறார் ஷரத்.
“இப்போது எங்களுக்கு சொந்தமான மத்கா காதை (உர மண்பானை) செய்து கொள்கிறோம்,” என்கிறார் குலப்ரானி புழக்கடையில் கிடக்கும் பெரிய மண் பானையைக் காட்டி. “வீட்டு வேலைக்கு நடுவே நான் நேரம் கண்டறிய வேண்டும்,” என்கிறார் அவர். குடும்பத்துக்கென 10 கால்நடைகள் இருக்கின்றன. அவர்கள் பாலும் விற்பதில்லை. குடும்பத்துக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். குடும்பத்தில் இரு மகள்களும் ஒரு மணம் முடித்த மகனும் இருக்கின்றனர்.
கரேலா, சுரைக்காய் மற்றும் வேப்பிலைகளுடன் மிளகாய்கள், இஞ்சி மற்றும் மாட்டு மூத்திரமும் தேவைப்படும். “ஒரு மணி நேரத்துக்கு சுட வைக்க வேண்டும். பிறகு 2.5-லிருந்து 3 நாட்களுக்கு வைத்திருந்து பிறகு பயன்படுத்த வேண்டும். ஆனால் நமக்கு தேவைப்படும் வரை, அது பானையிலேயே இருக்கலாம். “சிலர் 15 நாட்களுக்கு மேல் கூட வைத்திருப்பார்கள். நன்றாக பதப்படும்,” என்கிறார் அந்த இயற்கை விவசாயி.
ஐந்திலிருந்து 10 லிட்டர் அவர் தயாரிக்கிறார். “ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் போதும். 10 லிட்டர் நீரில் கரைக்கப்பட வேண்டும். அதிகமாக தை கலந்துவிட்டால், பூக்கள் செத்து விடும். பயிர் அழிந்து போகும்,” என்கிறார் அவர். தொடக்கத்தில் அண்டைவீட்டார், பாட்டிலில் முயற்சி செய்து பார்த்தனர்.
“வருடம் முழுக்க எங்களுக்கு தேவையான உணவு கிடைத்து விடுகிறது. வருடம் தோறும் 15,000 ரூபாய்க்கு விளைச்சலை விற்கவும் முடிகிறது,” என்கிறார் உஜியான் சிங். மத்திய இந்தியாவிலுள்ள மற்றவர்களை போல, இந்த விவசாயிகளும் வனவிலங்குகள் பயிர்களை அழிக்கும் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். “எங்களால் அவற்றைப் பிடிக்கவோ கொல்லவும் முடியாது. ஏனெனில் அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. நீலான் விலங்கு கோதுமையையும் சோளத்தையும் உண்டு, மொத்தமாக பயிரை அழித்து விடுகிறது,” என்கிறார் அவர். வன உயிர் பாதுகாப்பு சட்டம் , வன பன்றிகளை கொல்வதை தடை செய்கிறது.
பக்கத்து ஓடையிலிருந்து நீரிறைக்கவென சூரிய ஆற்றல் பம்ப் பயன்படுத்துகிறது. பல விவசாயிகள், வருடந்தோறும் மூன்று பயிர்களை விளைவிக்க முடிகிறது,” என்கிறார் உஜியான் சிங், வயலின் முடிவில் இருக்கும் சூரியத் தகடுகளைக் காட்டி.
மக்கள் அறிவியல் நிறுவனம் (PSI), ஒரு தொழில்நுட்ப சேவை மையத்தையும் (TRC) உருவாக்கியிருக்கிறது. பில்புரா பஞ்சாயத்தை சுற்றி இருக்கும் 40 கிராமங்களுக்கு அம்மையம் சேவை அளிக்கிறது. “TRC-ல் 15 வகை அரிசியையும் 11 வகை கோதுமையையும் குறைந்த மழையிலும் கொடுங்குளிரிலும் விளையும் பாரம்பரிய விதைகளையும் சேமித்து வைக்கிறார்கள். அந்த விதைகள் களைகளும் பூச்சிகளும் குறைவாகதான் வரும்,” என்கிறார் ரஜிந்தெர் சிங்.
“இரண்டு கிலோ விதைகளை எங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு கொடுக்கிறோம். அறுவடை செய்யும்போது இரு மடங்காக அவற்றை அவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும்,” என்கிறார் அவர். சற்று தூரத்தில் அவர் ஒரு ஏக்கர் நெல் வயலைக் காட்டுகிறார். நான்கு வகைகள் பக்கம் பக்கமாக விதைக்கப்பட்டிருக்கிறது. அறுவடை நாளை அவர் சொல்கிறார்.
காய்கறிகளை விற்கவென ஒரு கூட்டுறவை தொடங்க, அப்பகுதியின் விவசாயிகள் திட்டமிடுகின்றனர். இயற்கை வேளாண்மையால், நல்ல விலை கிடைக்குமென நம்புகிறார்கள்.
கிளம்புகையில், கிராமத்தின் பிற பெண்களுடன் குலாப்ரானி சேர்ந்து கொள்கிறார். அவர்கள் கால்வாய்க்கு சென்று குளித்து, விரதத்தை முடிக்கும் முன் ஹல்சத் பூஜை செய்ய வேண்டும். இந்து நாட்காட்டியின் ஐந்தாவது மாதத்தில் - பாதோன் - அவர்களின் குழந்தைகளுக்காக இந்த பூஜை நடக்கிறது. “இலுப்பை சமைத்து, மோரில் காய வைத்து, சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்வோம்,” என்கிறார் குலாப்ரானி. இயற்கையாக விளைவித்த சுண்டலை வறுத்து அதையும் அவர்கள் உண்ணுவார்கள்.
தமிழில்
:
ராஜசங்கீதன்