அஹர்வானியில் ராம் அவதார் குஷ்வஹா நுழைந்ததும், அந்த மண் சாலைகளில் ஓட்டுவதற்காக மோட்டார் சைக்கிளை நிதானிக்கிறார். குக்கிராமத்தின் பகுதியை அவர் அடைந்ததும், 150 சிசி பைக்கை நிறுத்துகிறார்.
ஐந்து நிமிடங்களில் குழந்தைகள், நடுநிலை பள்ளி படிப்பவர்கள், பதின்வயதினர் அவரை சுற்றி கூடத் தொடங்குகின்றனர். கையில் நாணயங்களும் 10 ரூபாய் தாள்களையும் வைத்துக் கொண்டு தங்களுக்குள் பேசியபடி அந்த சஹாரியா பழங்குடி குழந்தைகள் பொறுமையாக காத்திருக்கின்றன. வறுத்த நூடுல்ஸ் மற்றும் காய்கறியை கலந்து செய்யப்படும் சவ் மெய்ன் என்கிற உணவு ஒரு தட்டு வாங்குவதற்காக அவர்கள் காத்திருக்கின்றனர்
தற்போது நன்றாக நடந்து கொண்டிருக்கும் பசியோடு கூடிய அந்த வாடிக்கையாளர்கள் விரைவிலேயே பொறுமை இழந்து விடுவார்கள் எனத் தெரிந்து அந்த மோட்டார் வாகன விற்பனையாளர், வேகமாக பையை திறக்கிறார். அதிகமாக இல்லை. இரண்டு பிளாஸ்டிக் குடுவைகளை வெளியே எடுக்கிறார். ‘ஒன்று மிளகாய் சாஸ், இன்னொன்று சோயா சாஸ்,” என விளக்குகிறார். பிறகு முட்டைக்கோஸ், உரிக்கப்பட்ட வெங்காயம், குடை மிளகாய் மற்றும் வேக வைக்கப்பட்ட நூடுல்ஸ் ஆகியவற்றை எடுக்கிறார். “எனக்கான பொருட்களை நான் விஜய்பூரில் (டவுன்) வாங்குகிறேன்.”
கிட்டத்தட்ட மாலை ஆறு மணி. இன்று ராம் அவதார் வரும் நான்காவது கிராமம் இது. வழக்கமாக அவர் செல்லும் பிற குக்கிராமங்கள் மற்றும் கிராமங்களை பட்டியலிடுகிறார் - லதார், பண்ட்ரி, கஜுரி கலான், சில்பரா, பரோண்ட் - எல்லாமும் விஜய்பூர் தாலுகாவின் கோபால்புரா கிராமத்தில் அவர் வசிக்கும் சுட்டாய்புரா வீட்டிலிருந்து 30 கிமீ சுற்றளவில் இருக்கிறது. இந்த கிராமங்களில் கிடைக்கக் கூடிய பிற தின்பண்டங்கள் சிப்ஸ் பாக்கெட்டும் பிஸ்கெட்டுகள் மட்டும்தான்.
பழங்குடி அதிகம் வசிக்கும் 500 பேர் கொண்ட அஹர்வானிக்கு அவர் வாரத்தில் 2-3 முறை வருகிறார். அஹர்வானி சமீபமாக உருவான வசிப்பிடம். சிங்கங்களுக்கான இரண்டாம் வசிப்பிடமாக உருவாக்கப்படவென குனோ தேசியப் பூங்காவிலிருந்து 1999ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்கள்தான் இங்கு வசிப்பவர்கள். வாசிக்க: வேங்கை உள்ளே, பழங்குடிகள் வெளியே . சிங்கங்கள் வரவில்லை. ஆப்பிரிக்காவிலிருந்து சிறுத்தைப்புலிகள்தான் அப்பூங்காவுக்கு செப்டம்பர் 2022-ல் கொண்டு வரப்பட்டன.
சுற்றி நிற்கும் பெரும்பாலான குழந்தைகள், அஹர்வானியில் இருக்கும் உள்ளூர் அரசுப் பள்ளியில் படிப்பதாக கூறுகின்றனர். ஆனால் அங்கு வசிக்கும் கெதார் ஆதிவாசி, பள்ளியில் குழந்தைகள் சேர்ந்திருந்தாலும், அதிகம் அவர்கள் படிப்பதில்லை என்கிறார். “ஆசிரியர்கள் தொடர்ந்து வருவதில்லை. வந்தாலும் எதுவும் சொல்லிக் கொடுப்பதில்லை.”
வெளியேற்றப்பட்ட மக்களின் குழந்தைகளுக்காக பள்ளி நடத்தும் தொண்டு நிறுவனமான ஆதார்ஷிலா ஷிக்ஷா சமிதியில் 23 வயது கெதார் ஆசிரியராக இருக்கிறார். “இங்கு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தேர்ச்சி பெற்றதும் பிற பள்ளிகளில் அவர்களால் முன்னேற முடிவதில்லை. ஏனெனில் அடிப்படைக் கல்வியான வாசித்தல், எழுதுதல் போன்றவற்றில் அவர்கள் பின்தங்கியிருக்கின்றனர்,” என்கிறார் அவர் பாரியுடன் 2022-ல் பேசுகையில்.
சஹாரியா பழங்குடிகள் மத்தியப்பிரதேசத்தின் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி குழுவாக (PVTG) இருக்கிறார்கள். 42 சதவிகித படிப்பறிவு இருப்பதாக இந்த 2013ம் ஆண்டின் Statistical Profile of Scheduled Tribes in India அறிக்கை குறிப்பிடுகிறது.
கூட்டம் அமைதியிழக்க தொடங்கியதும் பேசுவதை நிறுத்திவிட்டு சமையலில் கவனம் செலுத்துகிறார் ராம் அவதார். மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைக்கிறார். அதோடு இணைந்திருக்கும் 20 அங்குல அகல வறுகடாயில் எண்ணெய் ஊற்றுகிறார். அடியில் ஒரு பெட்டியிலிருந்து அவர் நூடுல்ஸ் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போடுகிறார்.
வெங்காயம், முட்டைக்கோஸ் ஆகியவற்றை அறுக்க பைக்கின் சீட் வசதியாக இருக்கிறது. வெட்டப்பட்ட வெங்காயங்களை கடாய்க்குள் தள்ளுகிறார். நறுமணம் காற்றை நிரப்புகிறது.
ராம் அவதார் யூட்யூப் பார்த்து சமைப்பவர். அவர் காய்கறி விற்பவர். “அந்த வியாபாரம் மெதுவாகதான் நடக்கும். சவ் மெய்ன் எப்படி சமைப்பது என்கிற ஒரு யூட்யூப் வீடியோவை என் செல்பேசியில் பார்த்தேன். முயற்சிக்கலாமென முடிவெடுத்தேன்.” 2019ம் ஆண்டில் அது நடந்தது. அதற்குப் பிறகு அவர் நிறுத்தவில்லை.
2022-ல் பாரி அவரை சந்தித்தபோது, சவ் மெய்னின் ஒரு சிறு கிண்ண அளவை 10 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார். “கிட்டத்தட்ட 700 - 800 ரூபாய் வரை ஒருநாளில் விற்பேன்.” இதிலிருந்து 200-300 ரூபாயை அவர் வருமானமாக கணக்கிடுகிறார். 700 கிராம் நூடுல்ஸின் விலை ரூ.35. ஒருநாளில் ஐந்து பாக்கெட்டுகளை அவர் பயன்படுத்துகிறார். அடுப்புக்கான மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய், பைக்குக்கான பெட்ரோல் போன்றவை பிற பிரதான செலவுகள்.
“எங்களுக்கு மூன்று பிகா நிலமிருக்கிறது. ஆனால் அதிலிருந்து வருமானம் பெரிதாக வருவதில்லை,” என்கிறார் அவர். விவசாய வேலையை சகோதரர்களுடன் சேர்ந்து செய்கிறார். கோதுமை, கடுகு, கம்பு ஆகியவற்றை சொந்த பயன்பாட்டுக்கு விளைவிக்கின்றனர். ரீனாவை ராம் மணம் முடித்திருக்கிறார். 10 வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் அவர்களுக்கு உண்டு.
டிவிஎஸ் மோட்டார் சைக்கிளை ஏழு வருடங்களுக்கு முன் ராம் அவதார் வாங்கினார். நான்கு வருடங்கள் கழித்து 2019ம் ஆண்டில் அதை நடமாடும் சமையலறையாக மாற்றினார். ஒருநாளில் 100 கிலோமீட்டர் வரை பயணித்து பெரும்பாலும் இளம் வாடிக்கையாளர்களுக்கு உணவு விற்பதாக சொல்கிறார். “இதை செய்வது எனக்கு பிடித்திருக்கிறது. என்னால் முடியும் வரை இதை தொடருவேன்.”
தமிழில்: ராஜசங்கீதன்