“சாதர் பாதனி பொம்மலாட்டம் எங்கள் முன்னோர்களோடு ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளது. நான் இதை நிகழ்த்தும்போது, முன்னோர்கள் சூழ இருப்பதாகத் தோன்றுகிறது,” என்கிறார் தபன் முர்மூ.
இது நடந்தது 2023 ஜனவரியில். மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டம், கஞ்சன்பூரை ஒட்டிய சார்புகுர்தங்கா என்ற சிற்றூரில் ‘பந்தனா’ என்னும் அறுவடைத் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது. 30 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் விவசாயி தபன் தன்னுடைய சந்தால் பழங்குடிச் சமூகத்தின் வளமான மரபுகள் குறித்து ஆழமான கருத்துகளைக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக, மனதை கொள்ளை கொள்ளும், ‘சாதர் பாதனி’ என்னும் பொம்மலாட்டம் குறித்த அவரது உணர்வுகள் மிக ஆழமானவை.
பாரி தளத்துக்காக பேசும்போது, தபன் கையில், குவிமாடம் போலத் தோன்றும் கூண்டு ஒன்று இருந்தது. அதில் பளிச்சென்ற சிவப்பு வண்ணத் துணி சுற்றியிருந்தது. அதற்குள் மரத்தில் செதுக்கிய மனித உருவங்கள் பல இருந்தன. இந்த பொம்மைகள் கயிறு, மூங்கில் குச்சி, நெம்புகோல் ஆகியவை சேர்ந்த சிக்கலான அமைப்பால் இயக்கப்படுகின்றன.
“என் கால்களைப் பாருங்க... நான் எப்படி இந்த பொம்மைகளை நடனமாட வைக்கிறேன்னு தெரியும்.” தன் தாய் மொழியான சந்தாலியில் ஒரு பாடலை முணுமுணுக்கத் தொடங்கியவுடன் இந்த விவசாயியின் மண் படிந்த கால்களில் ஒரு வேகம் வந்து சேர்கிறது.









