கோவிட்-19 தொற்றுநோயின் போது ஹரியானாவிலிருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரான மகாராஜ்கஞ்சிற்கு தான் சுயமாக பயணிக்க வேண்டியிருந்ததை நினைவுகூருகிறார் சுனிதா நிஷாத்.
திடீரென அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கைத் தொடர்ந்து, இத்தகைய சூழலை சந்திக்க வேண்டிய லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் அவரும் ஒருவர். அதனால் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்தவொரு புதிய அரசாங்க திட்டங்களிலும் அவருக்கு ஆர்வம் இல்லாதது ஆச்சரியமான விஷயமல்ல.
“என்னிடத்தில் பட்ஜெட்டைப் பற்றி கேட்கிறீர்கள்,” என்று துவங்கியவர், “அதற்கு பதில், அரசாங்கத்திடம், கொரோனா [கோவிட்-19 தொற்றுநோய்] காலத்தில் எங்களை வீட்டிற்கு அனுப்ப ஏன் போதுமான பணம் இல்லை என்று கேளுங்கள்,” என்கிறார்.
தற்போது, 35 வயதான அவர் ஹரியானாவில் உள்ள ரோஹ்தக்கின் லாதோட் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பணியில் மீண்டும் தொடர்கிறார். “மஜ்பூர் ஹுன் [நான் உதவியற்றவள்]. அதனால்தான் இங்கு மீண்டும் திரும்ப வேண்டியதாயிற்று.”
மறுசுழற்சிக்காக தூக்கி எறியப்பட்ட வாசனை திரவிய குப்பிகளை உடைத்த வண்ணம், “மேரே பாஸ் படா மொபைல் நஹின் ஹை, சோட்டா மொபைல் ஹை [என்னிடம் பெரிய மொபைல் ஃபோன் இல்லை, சிறியது தான் உள்ளது]. பட்ஜெட் என்னவென்று எனக்கு எப்படித் தெரியும்?” அதிகரித்து வரும் டிஜிட்டல்மயமாக்கல், அரசாங்கத் திட்டங்களை அறிந்து கொள்ள ஸ்மார்ட்போன் மற்றும் இணைய இணைப்பை சார்ந்திருக்கச் செய்துள்ளது. கிராமப்புற இந்தியாவில், இது அனைவருக்கும் சாத்தியமில்லை.





