“இல்லல்லா கி ஷரப் நசர் செ பிலா தியா, மைன் எக் குனாஹர் தா, சுஃபி பனா தியா.
சூரத் மெயின் மேரா ஆ கயி சூரத் ஃபகிர் கி, யே நசர் மேரே பிர் கி, யே நசர் மேரே பிர் கி…”

(என் துறவி என் கண்களில் பார்த்து அல்லாவின் தெய்வீக தேனை குடிக்க வைத்தார். அதுவரை பாவக்காரனாக இருந்தேன். அவர் என்னை ஒரு வகை சூஃபி ஆக்கினார்.
என் முகத்தில் ஓர் யாசகனின் முகம் ஒளிர்ந்தது.
ஓ அந்த பார்வை! என் துறவியின் கண்களில் வெளிப்பட்ட அந்த பார்வை.)

குங்குரூ க்கள் (மணிகள்) கையில் கட்டியிருக்க மடியில் குழந்தை போல் வீற்றிருக்கும் தோலக் மேளத்தை வாசித்தபடி ஒரு கவ்வால், புனே நகரத்தருகே இருக்கும் தர்காவில் பாடுகிறார்.

எந்த ஒலிபெருக்கியோ பாடகர்களோ பார்வையாளர்களோ இன்றி உரத்த குரல் கோபுர உச்சியை எட்டும் வகையில் கவ்வால் தனியாக பாடுகிறார்.

அடுத்தடுத்து கவ்வாலி. சுஹ்ர் மற்றும் மக்ரிப் நமாஸின்போது (மாலை தொழுகைகள்) மட்டும் அவர் ஓய்வெடுக்கிறார். தொழுகையின்போது பாடுவதோ இசைக்கருவிகள் வாசிப்பதோ உவப்பாக கருதப்படுவதில்லை. தொழுகை முடிந்த பிறகு, இரவு எட்டு மணி வரை அவர் தொடர்ந்து பாடுகிறார்.

“நான் அம்ஜத். அம்ஜத் முராத் கோண்ட். நாங்கள் ராஜ்கோண்ட். பழங்குடியினர்.” அவர் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தோற்றத்திலும் பெயரிலும் இஸ்லாமியராக இருக்கும் அவர், பிறப்பால் பழங்குடி. “கவ்வாலி எங்களின் தொழில்,” என்கிறார் அம்ஜத்.

PHOTO • Prashant Khunte

அம்ஜத் கோண்ட் புனே நகரம் அருகே ஒரு தர்காவில் கவ்வாலி பாடுகிறார். தொழுகை நேரங்களில் பாடுவது உவப்பானது கிடையாது என்பதால், சுர் மற்றும் மக்ரிப் நமாஸ் நேரங்களில் மட்டும் அவருக்கு ஓய்வு. தொழுகை முடிந்ததும் பாடத் தொடங்கி இரவு எட்டு மணி வரை பாடுகிறார்

பான் சாப்பிட்டபடி அவர், “கவ்வாலியை ரசிக்காத ஒருவரை காட்டுங்கள் பார்ப்போம். அனைவருக்கும் பிடிக்கும் கலை அது,” என்கிறார். பான் பீடாவை வாய்க்குள் மென்றபடி, தனக்கு பிடித்த கவ்வாலி பற்றி பேசுகிறார். “மக்களை சந்தோஷப்படுத்ததான் பாடுகிறேன்,” என்கிறார்.

‘பாவோன் மெயின் பேடி, ஹாதோன் மெயின் கடா ரஹ்னே தோ, உஸ்கோ சர்கார் கி சவுகத் பே படா ரஹ்னே தோ…’ மெட்டு ஏதோவொரு இந்திப் பாடலை நினைவூட்டியது.

தர்காவில் இருக்கும் பக்தர்கள், அவர் பாலிவுட் பாடல் மெட்டை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல், அவர் பாடுவதை கேட்டு கொஞ்சம் பணமும் கொடுத்தார்கள். சிலர் 10 ரூபாயும் சிலர் 20 ரூபாயும் கொடுக்கிறார்கள். பராமரிப்பாளர்கள், சதார் அங்கியை துறவிக்கு அளித்து ஆசிர்வாதம் வேண்டும் பக்தர்களுக்கு தில்குல் (எள் மற்றும் வெல்லம்) கொடுக்கிறார்கள். முஜாவர் மயில் தோகைகளை கொண்டு பாவத்தை விரட்டும் வகையில் சவாலி களின் (பக்தர்கள்) தோளையும் முதுகையும் தட்டுகிறார். பீரு க்கு (துறவி) பணம் கொடுக்கப்படுகிறது. ஒரு பகுதி பணத்தை கவ்வாலு க்கு (பாடகர்) ஒதுக்கி வைக்கிறார்கள்.

பல பணக்காரர்கள் தர்காவுக்கு வருகிறார்கள் என்கிறார் அம்ஜத். சமாதிக்கு செல்லும் பாதையில் சதாரும் சுன்ரியும் விற்கும் சிறு கடைகள் இருக்கின்றன. வழிபாட்டு இடம் எப்போதும் பலருக்கு வேலை தந்து உணவளிக்கிறது.

ஹஸ்ரத் பீர் கமார் அலி துர்வேஷ் எந்த பேதமும் பார்ப்பதில்லை. தர்காவின் படிக்கட்டுகளில் யாசகம் வேண்டும் ஒரு ஃபகீரை பார்க்கலாம். மாற்றுத்திறன் யாசகர்களும் இருப்பார்கள். ஒன்பது முழ புடவை கட்டி வரும் முதிய இந்துப் பெண் இங்கு அடிக்கடி வருபவர். ஹஸ்ரத் கமார் அலி துர்வேஷின் ஆசிர்வாதம் பெற்றதாக உணருபவர். மாற்றுத்திறனாளிகள், அநாதைகள், கவ்வால்கள் என அனைவரும் அவரின் கருணையில் இருக்கிறார்கள்.

அம்ஜத் யாசகர் அல்ல. அவர் ஒரு கலைஞர். காலை 11 மணிக்கு அவர் சமாதிக்கு முன்னால் ஓர் இடத்தை கண்டறிந்து மேடை அமைத்துக் கொள்கிறார். மெதுவாகவும் தொடர்ந்தும் பக்தர்கள் வருகிறார்கள். மதிய வேளையில் சமாதியை சுற்றி இருக்கும் பளிங்கு தரை சூடாகி விடுகிறது. பக்தர்கள் குதித்து, சூடிலிருந்து தப்பிக்க ஓடுகின்றனர். இந்து பக்தர்களின் எண்ணிக்கை இஸ்லாமிய பக்தர்களை விட அதிகமாக இருக்கிறது.

மஜாரு க்கருகே (துறவியின் சமாதி) செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை. எனவே பல பெண்கள் வராண்டாவில் அமர்ந்து கண்களை மூடி குரானின் அயத்தை ஜெபிக்கின்றனர். அவர்களுக்கருகே இருக்கும் ஒரு இந்துப் பெண் பக்கத்து கிராமத்திலிருந்து வந்திருக்கிறார். ஆவி பிடித்திருக்கிறது. “பீரின் ஆவி,” என்கின்றனர்.

PHOTO • Prashant Khunte
PHOTO • Prashant Khunte

இடது: புனே நகரத்தருகே இருக்கும் கெட் ஷிவாபூரிலுள்ள பிர் கமார் அலி துர்வேஷ் தர்கா ஏழைகளும் பணக்காரர்களும் வரும் பிரபலமான  வழிபாட்டுத் தலம் ஆகும். வலது: மஜாரருகே செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை. எனவே அவர்கள் வெளியே நின்று வேண்டிக் கொள்கின்றனர்

PHOTO • Prashant Khunte

அம்ஜத் கோண்ட் மாதந்தோறும் இங்கு வருகிறார். ‘மேலே இருப்பவர் பசியுடன் உங்களை தூங்க விட மாட்டார்’ என்கிறார் அவர்

சமாதியிலுள்ள விளக்கின் எண்ணெய், தேள் அல்லது பாம்பின் விஷத்தை முறிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை, விஷமுறிவுக்கு மருந்து இல்லாத காலத்தில் தோன்றியது. இப்போது மருத்துவ மையங்களும் மருந்துகளும் இருக்கின்றன. ஆனால் பலரால் அவற்றுக்கு செலவு செய்ய முடியாத நிலை இன்னும் இருக்கிறது. மேலும் பல வகை துயரங்களில் ஆட்பட்டோரும் அங்கு இருக்கின்றனர். குழந்தை இல்லாத பெண் ஒருவர், இன்னும் சிலர் கணவர்களாலும் மாமியார்களாலும் கொடுமைகளை அனுபவிப்பவர்கள். துணை காணாமல் போனோரும் இருக்கின்றனர்.

மனநல நோய்கள் பீடித்த மக்களும் அங்கு பீரை பார்க்க வந்திருக்கின்றனர். ஆசிர்வாதம் வேண்டி வந்திருக்கும் அவர்களின் வேண்டுதலுக்கு அம்ஜத்தின் கவ்வாலி மெட்டும் இசையும் கொடுத்து, நம்மை ஒரு பரவச நிலைக்கு கொண்டு செல்கிறது.

அவர் பாடுவதை நிறுத்துவாரா? அவரின் தொண்டை களைத்துப் போகுமா? அவரின் நுரையீரல்கள் ஒரு ஜோடி ஹார்மோனியங்கள் போல செயல்படுகிறது. இரு பாடல்களுக்கு இடையே அம்ஜத் இடைவெளி எடுத்துக் கொள்கிறார். நேர்காணலுக்கு நேரம் கேட்டு அவரை அணுகினேன். “நான் ஏதும் கொடுக்க வேண்டுமா?” எனக் கேட்கிறார் அம்ஜத், பணத்துக்கான சைகை காட்டியபடி. என்னிடம் பதில் இல்லை. மீண்டும் அவரிடம் நேரம் கேட்டு, அவர் பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

கவ்வாலி நம் மனதை தொடவல்லது. சூஃபி பாரம்பரியம் மனதை எல்லாம் வல்ல இறைவனுடன் இணைக்கிறது. ரியலிட்டி ஷோக்களில் நாம் கேட்பதோ காதலை தொடவல்லது. இவையன்றி மூன்றாம் வகையும் இருக்கிறது. கனாபதோஷி எனப்படுகிறது. பிழைப்புக்காக பயணிக்கும் அம்ஜத் போன்றவர்கள் பாடும் வகை அது.

அம்ஜத்தின் குரல் காற்றில் பரவுகிறது.

தாஜ்தர்-எ-ஹராம், ஹோ நிகா-எ-கராம்
ஹும் கரீபோன் கெ தின் பி சன்வார் ஜெயங்கே…
ஆப்கே தார் செ காலி அகார் ஜாயங்கே

இறுதி வரி ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. அவருடன் பேசிட இப்போது இன்னும் ஆர்வத்துடன் இருக்கிறேன். அவருக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாமென எண்ணி, அடுத்த நாள் நேரம் கேட்டேன். பீர் கமார் அலி துர்வேஷின் வரலாறு தெரிந்து கொள்வதில் அடுத்த நாள் வரை நான் நேரம் கழித்தேன்.

அம்ஜத் கோண்ட், கவாலி இசைக்கலைஞர்

அம்ஜத் கோண்ட், சமாதிக்கு முன் ஓரிடத்தை கண்டறிந்து தனக்கான மேடையை அமைத்துக் கொள்கிறார். மெல்ல பக்தர்கள் வரத் தொடங்குகிறார்கள். இந்து பக்தர்களின் எண்ணிக்கை இஸ்லாமியரை விட அதிகமாக இருக்கிறது

*****

கதையின்படி ஹஸ்ரத் கமார் அலி, சிங்கத் கோட்டையின் அடிவாரத்தில், புனே நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிறு கிராமமான கேத் ஷிவப்பூருக்கு வந்திருக்கிறார். கிராமவாசிகள், ஊரிலிருந்த பேயை விரட்ட உதவி கேட்டு ஹஸ்ரத் கமார் அலியை அணுகியிருக்கின்றனர். அந்த துறவி, பேயை ஒரு கல்லில் கட்டிப் போட்டு இப்படி சபித்தார்: ”இறுதி நாள் வரும் வரை மக்கள் உன்னை தூக்கி தரையில் எறிவார்கள். இப்போது வரை நீ அவர்களுக்கு துன்பம் கொடுத்திருக்கிறாய். ஆசிர்வாதம் வாங்க வருபவர்கள் இனி உன்னை தரையில் தூக்கி எறிவார்கள்.”

சமாதிக்கு முன் இருக்கும் கல் 90 கிலோ எடை. கிட்டத்தட்ட 11 பேர் ஒன்று சேர்ந்து அதை ஒரு விரல் கொண்டு தூக்குகின்றனர். ‘யா கமர் அலி துர்வேஷ்’ என உரத்து முழக்கம் போட்டு, கல்லை தரையில் போடுகிறார்கள்.

பல தர்காக்கள் இருந்தாலும் கேத் ஷிவாப்பூரில் உள்ளதை போன்ற சிலவற்றில்தான் கூட்டம் அதிகம் இருக்கிறது. இந்த கனமான கல்லின் அற்புதம் பல மக்களை இங்கு வர வைக்கிறது: அஜ்மத் போன்ற பலருக்கும் இந்த கூட்டத்தால் சற்று வருமானம் அதிகம் கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. பக்தர்களும் ஆலியா , குழந்தை அருள் பாவிப்பதாக நம்புகின்றனர். “மூலிகை மருந்துகளும் கொடுத்து குழந்தை இல்லா தன்மையை குணமாக்குகிறோம்,” என்கிறார் அம்ஜத்.

PHOTO • Prashant Khunte

பிர் கமார் அலி துர்வேஷ் தர்காவிலுள்ள 90 கிலோ கல், சில ஆண்களால் தூக்கப்பட்டு தரையில் போடப்படுகிறது. பல தர்காக்களில் காணப்படும் சடங்கு இது

*****

அதே வளாகத்துக்குள் ஒரு மசூதியும் இருக்கிறது. அருகே ஒரு வசுக்கானா இருக்கிறது. அம்ஜத் அங்கு சென்று கை, கால், முகத்தை கழுவிக் கொண்டு, முடியைக் கொண்டை போட்டு, ஆரஞ்சு நிற தொப்பியை அணிந்து, பேசத் தொடங்குகிறார். “நான் மாதந்தோறும் இங்கு வந்து குறைந்தபட்சம் ஒரு வாரம் தங்குகிறேன்.” குழந்தையாக அவர், அடிக்கடி இங்கு வரும் தந்தையுடன் வந்திருக்கிறார். “எனக்கு 10 அல்லது 15 வயது இருக்கலாம். என் அப்பா இங்கு என்னை முதன்முறையாக கூட்டி வந்தார். இப்போது நான் 30 வயதை கடந்து விட்டேன். என் மகனை சில முறை இங்கு கூட்டி வருகிறேன்,” என்கிறார் அவர்.

தர்வேஷி சமூகத்தை சேர்ந்த சிலர், தர்காவின் அடித்தளத்தில் பாய் போட்டு உறங்கிக் கொண்டிருக்கின்றனர். அம்ஜத்தும் தன் பையை ஒரு சுவரருகே வைத்திருந்தார். ஒரு பாயை எடுத்து தரையில் விரிக்கிறார். ஜல்காவோன் மாவட்ட பச்சோராவிலுள்ள கோண்ட் குப்பத்தில் தன் வீடு இருப்பதாக சொல்கிறார் அவர்.

தன் மதத்தை சொல்ல அம்ஜத் தயங்கவில்லை. அவரின் குடும்பத்தை பற்றி கேட்டேன். “தந்தையும் இரு தாய்களும் நான்கு சகோதரர்களும் உண்டு. நான்தான் மூத்த சகோதரன். எனக்கு பிறகு ஷாருக், சேத் மற்றும் பாபர் ஆகியோர் இருக்கின்றனர். ஐந்து பெண் குழந்தைகளுக்கு பிறகு நான் பிறந்தேன்.” அவர்களின் இஸ்லாமிய பெயர்களை நான் கேட்டேன். “கோண்ட்களாகிய எங்களுக்கு இந்து மற்றும் இஸ்லாமியப் பெயர்கள் உண்டு. எங்களுக்கு மதம் இல்லை. சாதியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்களின் மதம் சற்று வித்தியாசமானது. நாங்கள் ராஜ்கோண்ட்,” என்கிறார்.

பொது தளத்தில் இருக்கும் தகவலின்படி, 300 வருடங்களுக்கு முன்பு, ராஜ்கோண்ட் பழங்குடியினரின் ஒரு பகுதியினர் இஸ்லாமுக்கு மதம் மாறியிருக்கின்றனர். அவர்கள் முசல்மான்/முஸ்லிம் கோண்ட் என்றறியப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம் கோண்ட் சமூகத்தை சேர்ந்த சில உறுப்பினர்களை இப்போதும் சந்திக்க முடியும். மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் ஜால்காவோன் மாவட்டங்களில் அவர்களை பார்க்கலாம். ஆனால் அம்ஜத்துக்கு இந்த வரலாறு தெரியவில்லை.

“இஸ்லாமியர்களை நாங்கள் மணம் முடிப்பதில்லை. கோண்ட்களைதான் மணம் முடிப்போம். என் மனைவி சாந்தனி கோண்ட்,” என அவர் தொடர்கிறார். “என் மகள்கள் லாஜோ, அலியா மற்றும் அலிமா. அவர்கள் அனைவரும் கோண்ட்தான், இல்லையா?” ஒருவரின் மதத்தை பெயர்களை கொண்டு அடையாளங்காண முடியும் என அம்ஜத்துக்கு தோன்றவில்லை. சகோதரிகளை பற்றி அவர் சொல்லத் தொடங்குகிறார். “என் மூத்த அக்கா நிஷோரி. அவருக்கு பிறகு ரேஷ்மா. சவுசல் மற்றும் திதோலி ஆகியோர் ரேஷ்மாவுக்கு தங்கைகள். இவை எல்லாமும் கோண்ட் பெயர்கள்தான், பாருங்கள். ஆனால் கடைக்குட்டி மேரி. அது ஒரு கிறித்துவ பெயர். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு பிடித்ததை நாங்கள் பயன்படுத்துகிறோம். அவ்வளவுதான்.” நிஷோரிக்கு வயது 45. இளையவர் மேரி, முப்பது வயதுகளில் இருக்கிறார். அவர்கள் அனைவரும் கோண்ட் ஆண்களைதான் மணம் முடித்திருக்கிறார்கள். அவர்களில் எவரும் பள்ளிக்கு சென்றிருக்கவில்லை.

அம்ஜத்தின் மனைவி சாந்தனிக்கு படிப்பறிவு இல்லை. மகள்களை பள்ளிக்கு அனுப்புவது குறித்து கேட்டதற்கு, “என் மகள்கள் ஓர் அரசுப் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் எங்கள் சமூகத்தில் பெண் குழந்தைகள் அதிகம் படிக்க ஆதரவு இருப்பதில்லை,” என்கிறார் அவர்.

PHOTO • Prashant Khunte
PHOTO • Prashant Khunte

அம்ஜத் கோண்ட், மகாராஷ்டிராவின் பசோராவில் வசிக்கிறார். இஸ்லாமிய பெயர் மற்றும் தோற்றத்துடன் இருக்கும் ராஜ்கோண்ட் பழங்குடி அவர். மதப் பிரிவினைகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை

“என் மகன்களில் ஒருவர் நவாஸ், இன்னொருவர் கரீப்!” க்வாஜா மொயினுதீன் சிஷ்டியை ஏழைகளின் ரட்சகர் என்ற பொருளில் ‘கரீப் நவாஸ்’ எனக் குறிப்பிடுவார்கள். இந்த இரண்டு வார்த்தைகளை கொண்டு மகன்களுக்கு பெயர் வைத்திருக்கிறார் அம்ஜத். “நவாஸுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை. ஆனால் கரீப் நன்றாக படிப்பதை நான் உறுதி செய்வேன். என்னை போல் சுற்றி அலைய விட மாட்டேன்!” கரீபுக்கு வயது எட்டு. மூன்றாம் வகுப்பு படிக்கிறார். ஆனால் இந்த குழந்தை, கவ்வால் தந்தையுடன் சுற்றி அலைகிறார்.

அவரின் குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களும் கவ்வாலியை தொழிலாக செய்கிறார்கள்.

“கோண்ட்களாகிய நாங்கள் எதை வேண்டுமானால் விற்போம் தெரியுமா, களிமண்ணை கூட விற்போம். காதுகளை சுத்தப்படுத்துவோம். பேரீச்சம்பழம் விற்போம். வேலைக்காக வீட்டை விட்டு கிளம்பி விட்டால், திரும்பி வரும்போது 1000 அல்லது 500 ரூபாயுடன் வருவோம்!” என்கிறார் அம்ஜத். ஆனால் அவர், “மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்கிறார்கள். சேமித்து வைப்பதில்லை. எங்களுக்கென தனியாக தொழில் ஏதும் இல்லை. யாரும் இத்தகைய சேவையும் செய்வதில்லை,” என புகார் கூறுகிறார்.

நிலையான வருமானம் இல்லாத சூழலை சமாளிக்க, அம்ஜத்தின் தந்தை கவ்வாலி இசைக் கலையை நாடினார். “என் தாத்தாவை போல, என் தந்தையும் ஊர் ஊராக சென்று மூலிகைகளையும் பேரீச்சம் பழங்களையும் விற்றார். அவருக்கு இசை பிடிக்கும் என்பதால் கவ்வாலியை அடைந்தார். என் தந்தை எங்கு சென்றாலும் நானும் உடன் செல்வேன். மெல்ல அவர் நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினார். அவரைப் பார்த்து நானும் அக்கலையைக் கற்றுக் கொண்டேன்.”

“நீங்கள் பள்ளிக்கு செல்லவில்லையா?” எனக் கேட்டேன்.

நீர்த்த சுண்ணாம்பு கொண்ட ஒரு பையை எடுத்து, ஒரு விரல் நுனியளவு எடுத்து, நாக்கில் நக்கிவிட்டு, “2 அல்லது 3ம் வகுப்பு வரை பள்ளிக்கு சென்றேன். அதற்குப் பிறகு செல்லவில்லை. ஆனால் எனக்கு எழுதவும் வாசிக்கவும் தெரியும். எனக்கு ஆங்கிலமும் தெரியும்,” என்கிறார். மேலும் படித்திருந்தால் வாழ்வில் முன்னேறியிருக்கலாமென அவர் நினைக்கிறார். அப்படி படிக்காததை நினைத்து புலம்புகிறார். “அதனால்தான் நான் தேங்கிப் போனேன்,” என்கிறார் அவர். அம்ஜத்தின் சகோதரர்களுக்கும் அதுதான் நிலை. அவர்கள் அனைவரும் பள்ளிக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொள்ள மட்டுமே சென்றார்கள். அதற்கு பிறகு வேலை பார்க்க சென்று விட்டார்கள்.

PHOTO • Prashant Khunte

கவ்வால் பாடுகையில் உரத்தும் தெளிவாகவும் இருக்கும் அவரின் குரல் ஒலிபெருக்கி இல்லாமல் கோபுரத்தின் உயரம் வரை சென்று கேட்கிறது

“எங்கள் ஊரில் 50 கோண்ட் குடும்பங்கள் இருக்கின்றன. மற்றவர்கள் அனைவரும் இந்துக்கள், இஸ்லாமியர் மற்றும் ஜெய்பீம் (தலித்). அனைவரும் இருக்கிறார்கள்,” என்கிறார் அம்ஜத். “எங்களை தவிர்த்து, எல்லா சமூகங்களிலும் படித்த இளைஞர்களை நீங்கள் பார்க்க முடியும். சிவா என்னும் உறவினர் மட்டும் படித்திருக்கிறார். 15, 16 வயது வரை படித்த சிவா, ராணுவத்தில் சேரும் விருப்பத்தில் இருந்தார். ஆனால் சேர முடியவில்லை. தற்போது அவர் காவலராகும் முயற்சியில் இருக்கிறார். அம்ஜத்தின் குடும்பத்தில் அவர் ஒருவரேனும் கல்வி மற்றும் வேலை பற்றி சிந்திக்கிறார்.

அம்ஜத்துக்கும் சொந்தமாக தொழில் இருக்கிறது. “எங்களுக்கு ஒரு குழு இருக்கிறது. கேஜிஎன் கவ்வாலி குழு.” கேஜிஎன் என்றால் க்வாஜா கரீப் நவாஸ் என அர்த்தம். சகோதரர்களுடன் சேர்ந்து அவர் தொடங்கினார். திருமண நிகழ்ச்சிகளிலும் பிற நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். “எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?” எனக் கேட்டேன். “ஒருங்கிணைப்பாளரை சார்ந்த விஷயம் அது. 5,000லிருந்து 10,000 ரூபாய் வரை கிடைக்கும். பார்வையாளர்களும் கொஞ்சம் பணம் தருவார்கள். மொத்தமாக ஒரு நிகழ்ச்சிக்கு 15,000-லிருந்து 20,000 வரை சம்பாதிப்போம்,” என்கிறார் அம்ஜத். எல்லா உறுப்பினர்களுக்கும் இடையே பணம் பிரிக்கப்பட்ட பிறகு ஒவ்வொருவரிடமும் 2,000-3,000 ரூபாய் மிஞ்சும். திருமணக் காலம் முடிந்தபிறகு, நிகழ்ச்சிகள் ஏதும் இருக்காது. அம்ஜத் புனேவுக்கு வந்து விடுவார்.

ஹஸ்ரத் கமார் அலி துர்வேஷ் தர்காவில், ஓரளவுக்கு வருமானம் அவரால் ஈட்ட முடிகிறது. இரவு நேரத்தை அடித்தளத்தில் கழிக்கிறார். “பசியோடு உறங்க இறைவன் அனுமதிப்பதில்லை.” வேண்டுதல் நிறைவேறினால் பலரும் விருந்தும் உணவும் கொடுப்பதுண்டு. இங்கு ஒரு வாரம் இருந்து கவ்வாலி பாடி, கிடைக்கும் வருமானத்தை எடுத்துக் கொண்டு ஊர் திரும்புவார். இதுதான் அவரது வழக்கம். இங்கு கிட்டும் வருமானம் குறித்து கேட்டபோது, 10,000 முதல் 20,000 ரூபாய் வரை கிடைக்கும் என்கிறார் அம்ஜத். ”பேராசையுடன் இருக்கக் கூடாது. அதிகம் வருமானம் ஈட்டினாலும் எல்லாவற்றையும் எங்கு வைக்க முடியும்? எனவே எவ்வளவு கிடைக்கிறதோ அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று விடுவேன்!,” என்கிறார் அவர்.

“அந்த வருமானம் போதுமா?” எனக் கேட்கிறேன். “ஆம். சமாளிக்கலாம். ஊரிலும் நான் வேலை பார்க்கிறேன்,” என்கிறார் அவர். சொந்தமாக நிலம் ஏதும் இன்றி என்ன வேலை பார்ப்பார் என எனக்கு தோன்றியது.

அம்ஜத் பதிலளித்தார். “ரேடியம் வேலை. வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று, பெயர்களையும் வாகன எண்களையும் பெயிண்ட் செய்வேன்,” என விளக்குகிறார் அம்ஜத். “கவ்வாலி நிகழ்ச்சிகளுக்கு தூரம் செல்ல வேண்டும். இடையில் நான் வேறு வேலை தேடிக் கொள்வேன். என் பையை எடுத்துக் கொண்டு கொஞ்சம் ரேடியம் பெயிண்ட் வாங்குவேன். வரும் வழியில் நின்று ஒரு வாகனத்தை மணப்பெண் போல் அலங்கரித்தேன்.” அது அவரின் இன்னொரு தொழில். ஓவியக் கலையை பயன்படுத்தி கொஞ்சம் பணத்தை அதில் அவர் ஈட்டிக் கொள்கிறார்.

PHOTO • Prashant Khunte
PHOTO • Prashant Khunte

இளம் வயதில் இசைக்கலைஞரான தந்தையுடன் அம்ஜத் கோண்ட் சுற்றி அலைந்து பள்ளிப்படிப்பை தவற விட்டிருக்கிறார்

கலை பெரியளவில் வரவேற்பை பெறாத நிலையில் வாழ்வாதார வாய்ப்புகள் கொஞ்சமாக இருக்கும் அம்ஜத்தின் சமூகத்துக்கு, லட்சியமாக கொள்ள பெரியளவில் ஏதுமில்லை. ஆனாலும் நிலை மாறும். இந்திய ஜனநாயகம் அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை கீற்றை கொண்டு வந்திருக்கிறது. “என் தந்தை ஓர் ஊர்த் தலைவர்,” என்கிறார் அவர். “ஊருக்கென அவர் நிறைய நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். முன்பு வெறும் மண் சாலைதான் இருந்தது. ஆனால் அவர் சாலை போட்டுக் கொடுத்தார்.”

உள்ளாட்சியில் பழங்குடிகளுக்கு இருக்கும் இட ஒதுக்கீடு இவற்றை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் சொந்த மக்கள் மீது அம்ஜத்துக்கு அதிருப்தி இருக்கிறது. “ஊர்த் தலைவரை மீறலாமா? எங்களின் மக்கள் மீறுவார்கள். கையில் கொஞ்சம் காசு வந்தால் போதும். சிக்கன், மீன் எல்லாம் வாங்குவார்கள். எல்லா பணத்தையும் செலவு செய்து விடுவார்கள். யாரும் எதிர்காலத்தை பற்றி யோசிப்பதில்லை,” என்கிறார் அவர்.

“நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள்?” எனக் கேட்டேன், வாக்களிப்பது அவரவர் ரகசியம் என தெரிந்து. “முன்பு நான் கை சின்னத்துக்கு வாக்களித்தேன். இப்போது பாஜகவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. எங்களின் சாதி பஞ்சாயத்து என்ன சொல்கிறதோ அதன்படி வாக்களிப்போம். சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை,” என்கிறார் அவர்.

PHOTO • Prashant Khunte

பல ஊர்களில் தர்காக்கள் இருந்தாலும் கேத் சிவாப்பூரில் இருப்பதை போன்ற சிலவற்றில்தான் அதிக கூட்டம் வருகிறது. அம்ஜத் போன்ற இசைக் கலைஞர்களுக்கு வருமானம் ஈட்ட இங்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது

“நீங்கள் குடிப்பீர்களா?” என்று கேட்டதும் உடனடியாக அவர் மறுத்தார். “குடித்ததே இல்லை… பீடியோ சாராயமோ எந்த பழக்கமும் இல்லை. என் சகோதரர்கள் பீடி பிடிப்பார்கள். புகையிலை பயன்படுத்துவார்கள். நான் செய்வதில்லை. அந்த பழக்கமே என்னிடம் கிடையாது.” இந்த பழக்கங்களில் என்ன தவறு என அவரிடம் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

“நான் முற்றிலும் வேறு பாணியை சேர்ந்தவன்! ஒருவர் குடித்துவிட்டு, கவ்வாலி பாடினால், மதிப்பை இழந்து விடுவார். ஏன் ஒருவர் அந்த பழக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்? அதனால்தான் இத்தகைய பழக்கங்களில் நான் ஆட்படுவதில்லை,” என்கிறார் அம்ஜத்.

எந்த கவ்வாலி உங்களுக்கு பிடிக்கும்? “சமஸ்கிருதத்தில் உள்ளது பிடிக்கும். அதை பாடவும் கேட்கவும் எனக்கு பிடிக்கும்,” என்கிறார் அவர். சமஸ்கிருத கவ்வாலியா? ஆச்சரியமானேன். “அஸ்லாம் சப்ரி பாடுகிறார், ‘கிர்பா கரோ மகாராஜ்…’ என்ன ஓர் அற்புதமான பாடல். என்னை பொறுத்தவரை மனதை தொடும் மொழி சமஸ்கிருதம்தான். கவ்வாலிகள் கடவுளருக்கோ தூதுவர்களுக்கோ பாடப்படுபவை. அது உங்களின் மனதை தொட்டால், போதுமானது!” என்கிறார்.

அம்ஜத்தை பொறுத்தவரை இந்து கடவுளை ஆராதிக்கும் பாடல்தான் சமஸ்கிருதம். நாம்தான் மொழி மற்றும் எழுத்து ஆகியவற்றுக்கு சண்டை போட்டுக் கொள்கிறோம்.

மதியம் நெருங்குகையில் கூட்டம் அதிகரிக்கிறது. சமாதிக்கு முன் ஓர் ஆண்கள் குழு கூடுகிறது. சிலர் தொப்பிகளை அணிந்திருக்கின்றனர். சிலர் கைக்குட்டையை தலைகளில் மாட்டியிருக்கின்றனர். ‘யா… கமார் அலி துர்வேஷ்…’ என்ற உச்சாடனம் உரத்து எழ, அவர்கள் அனைவரும் எடை அதிகமான கல்லை தங்களின் விரல்களால் தூக்கி, தரையில் வீசுகின்றனர்.

அம்ஜத் முராத் கோண்ட் தொடர்ந்து கடவுளுக்கும் தூதுவர்களுக்கும் பாடிக் கொண்டிருக்கிறார்.

தமிழில் : ராஜசங்கீதன்

Prashant Khunte

Prashant Khunte is an independent journalist, author and activist reporting on the lives of the marginalised communities. He is also a farmer.

यांचे इतर लिखाण Prashant Khunte
Editor : Medha Kale

मेधा काळे यांना स्त्रिया आणि आरोग्याच्या क्षेत्रात कामाचा अनुभव आहे. कुणाच्या गणतीत नसणाऱ्या लोकांची आयुष्यं आणि कहाण्या हा त्यांचा जिव्हाळ्याचा विषय आहे.

यांचे इतर लिखाण मेधा काळे
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan