பனிமூட்டமான 2021 ஜூலை காலை நேரத்தில், விவசாயி சிவராம் கவாரி பீமாசங்கர், வனவிலங்கு சரணாலயத்தின் எல்லையில் உள்ள தனது வயலுக்கு வந்தபோது, பாதி உண்ணப்பட்ட நிலையில் தனது ஐந்து குந்தா (சுமார் 0.125 ஏக்கர்) அளவு நெற்பயிரை கண்டார். மீதமுள்ளவை தரையில் நசுக்கப்பட்டிருந்தன.
"இப்படி ஒரு நிலையை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை," என்று அவர் கூறும்போது, அதன் அதிர்ச்சி அவரது மனதில் இருந்து அகன்றிருக்கவில்லை. அந்த விலங்குகளின் கால்தடங்களை பின்தொடர்ந்து அவர் காட்டுக்குள் சென்றார், அப்போது காவா (பாஸ் கவுரஸ் மற்றும் சில நேரங்களில் இந்திய காட்டெருமை என்றும் அழைக்கப்படுகிறது) திடீரென்று அவர் முன் தோன்றியது. மாடுகளில் மிகப்பெரியதான இவை, பார்க்க பயங்கரமாக இருக்கும் - காளைகளின் உயரம் ஆறு அடிக்கு மேல் மற்றும் 500 முதல் 1,000 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.
அதிக எடை கொண்ட இக்காட்டெருமைகள், வயல்களை மிதிக்கும்போது, அவை உருவாக்கும் பெரிய பள்ளங்கள், பயிர்கள் மற்றும் மரக்கன்றுகள் இரண்டையும் முற்றிலுமாக அழிக்கின்றன. “கவா, தொடர்ந்து மூன்று வருடங்களாக, ஒவ்வொரு பருவத்திலும் எனது பயிரை அழித்துவிட்டது. சாகுபடியை கைவிடுவதுதான் எனக்கிருக்கும் என்னுடைய ஒரே வழி,” என்கிறார் சிவராம். 2021 ஆம் ஆண்டு முதல் காவாவின் கூட்டம் முகாமிட்டிருக்கும் டானில் உள்ள அவரது தகரக் கூரை வீட்டின் முன் அவர் அமர்ந்திருக்கிறார்.














