தீபிகா கமனின் பயிற்சி பெற்ற பார்வைக்கு, ஒன்று போல தோற்றமளிக்கும் ஆண் மற்றும் பெண் அந்துப்பூச்சிகளுக்கு இடையிலான வேறுபாடு தெரிந்து விடும். “ஒன்றுபோல் தோற்றமளித்தாலும் இரண்டில் நீளமாக இருப்பது ஆண் பூச்சி,” என்கிறார் அவர்13 செண்டிமீட்டர் இறகுகளை கொண்ட பழுப்பு பூச்சிகளை சுட்டிக் காட்டி. “குட்டியாக, தடியாக இருப்பதுதான் பெண் பூச்சி.”
அஸ்ஸாமின் மஜுலி மாவட்டத்திலுள்ள போருன் சிடாதர் சுக் கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா. எரி பட்டு அந்துப்பூச்சிகளை மூன்று வருடங்களாக வளர்த்து வருகிறார். தாய் மற்றும் பாட்டியிடமிருந்து அவர் கற்றுக் கொண்டார்.
எரி என்பது அஸ்ஸாமின் பிரம்மபுத்திர பள்ளத்தாக்கிலும் பக்கத்து அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களிலும் விளைவிக்கப்படும் பட்டு வகை. மைசிங் சமூக மக்கள் பாரம்பரியமாக பட்டுப் புழுக்களை வளர்த்து, எரி துணியை நெய்து உடுத்துபவர்கள். ஆனால் வியாபாரத்துக்காக பட்டு நெய்வது அச்சமூகத்தில் புதிய பழக்கம்.
”காலம் மாறி விட்டது,” என்கிறார் 28 வயது தீபிகா. “இப்போதெல்லாம் இளம்பெண்கள் கூட பட்டுப்புழு வளர்ப்பு கற்று, வளர்க்கின்றனர்.”













