“நீங்கள் வெளிச்சத்துடன் பிறந்தவர்கள். நாங்கள் இருளுடன் பிறந்தவர்கள்,’ என்கிறார் நந்த்ராம் ஜமுங்கார், மண் வீட்டுக்கு வெளியே அமர்ந்து கொண்டு. ஏப்ரல் 26, 2024 அன்று தேர்தலை சந்திக்கவிருக்கும் அம்ராவதி மாவட்டத்தின் காதிமால் கிராமத்தில் ஏப்ரல் 26, 2024 அன்று தேர்தல் நடக்கிறது. நந்த்ராம் குறிப்பிடும் இருள் வாழ்க்கை உண்மை. மகாராஷ்டிராவின் அந்தப் பழங்குடி கிராமத்துக்கு மின்சார இணைப்பு கிடையாது.
“ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், யாராவது வந்து மின்சாரம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுப்பார்கள். மின்சார இணைப்பை கூட விடுங்கள், அவர்கள் திரும்பி வரக் கூட மாட்டார்கள்,” என்கிறார் 48 வயது நிறைந்த அவர். தற்போது அத்தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கும் சுயேச்சை வேட்பாளரான நவ்நீத் கவுர் ரானா 2019ம் ஆண்டில் சிவசேனா வேட்பாளரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆனந்த் ராவ் அத்சுலை வீழ்த்தி வென்றார். இந்த வருடம் அவர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
சிகல்தாரா தாலுகாவின் இந்த கிராமத்தில் இருக்கும் 198 குடும்பங்கள் (கணக்கெடுப்பு 2011) பிரதானமாக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சார்ந்திருக்கிறார்கள். சிலரிடம் சொந்தமாக நிலம் இருக்கிறது. வானம் பார்த்த பூமி. பெரும்பாலும் சோளம் விளைவிக்கப்படுகிறது. காதிமாலில் பெரும்பான்மையாக வசிக்கும் பட்டியல் பழங்குடியினர், குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகள் இன்றிதான் வாழ்ந்து வருகின்றனர். கொர்க்கு பழங்குடி சமூகத்தை சேர்ந்த நந்த்ராம் கொர்க்கு மொழி பேசுகிறார். பழங்குடித் துறை அமைச்சகத்தால் 2019ம் ஆண்டில் அருகி வரும் மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் மொழி அது.








