82 வயதாகும் ஆரிஃபா வாழ்வின் அனைத்தையும் பார்த்தவர். 1938ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அவர் பிறந்ததாக ஆதார் அட்டை சொல்கிறது. ஆரிஃபாவிற்கு தனது வயது சரியானதா என்பது நினைவில் இல்லை. ஆனால் தனது 16ஆவது வயதில் 20 வயது கடந்த ரிஸ்வான் கானுக்கு இரண்டாவது மனைவியாகி ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தின் பிவான் கிராமத்திற்கு வந்தது மட்டும் நினைவில் உள்ளது. “பிரிவினையின் போது நிகழ்ந்த கலவரத்தில் என் மூத்த சகோதரியும் (ரிஸ்வானின் முதல் மனைவி), அவரது ஆறு குழந்தைகளும் கொல்லப்பட்டதால் ரிஸ்வானுக்கு என்னை என் தாயார் திருமணம் செய்து வைத்தார் என நினைவு கூர்கிறார் ஆரிஃபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என மகாத்மா காந்தி மேவாத் கிராமத்திற்கு வந்து மியோ இஸ்லாமியர்களிடம் கேட்டுக் கொண்டதையும் அவர் லேசாக நினைவில் வைத்துள்ளார். ஒவ்வொரு டிசம்பர் 19ஆம் தேதியையும் ஹரியாணாவின் நுஹ்ஹில் உள்ள காசிரா கிராமத்தில் காந்திஜியின் வருகையை மேவாத் திவாஸ் என மியோ இஸ்லாமியர்கள் அனுசரித்து வருகின்றனர். (2006ஆம் ஆண்டு வரை நுஹ், மேவாத் என்று தான் அழைக்கப்பட்டது).
ரிஸ்வானை ஏன் மணக்க வேண்டும் என தாயார் கீழே உட்கார்ந்து கொண்டு விளக்கியதையும் ஆரிஃபா மிகத் தெளிவாக நினைவு கூர்கிறார். அவரிடம் எதுவுமில்லை என்று கூறிவிட்டு என்னை அவரிடம் என் தாயார் ஒப்படைத்தார் என நினைவுகளைப் பகிரும் ஆரிஃபா தான் பிறந்த கிராமமான ரித்தோராவிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிவான் கிராமத்திற்கு வந்த கதையை அசைபோடுகிறார். இரண்டு கிராமங்களுமே ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவை. நாட்டின் மிகவும் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக அது உள்ளது.
தேச தலைநகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் ஹரியாணா, ராஜஸ்தான் எல்லைகளின் ஆரவல்லி மலை அடிவாரத்தின் ஃபெரோசிப்பூர் ஜிர்கா தொகுதியில் உள்ளது இந்த பிவான் கிராமம். டெல்லியிலிருந்து நுஹ் செல்லும் சாலை தெற்கு ஹரியாணாவின் குருகிராம் வழியாக செல்கிறது. இந்தியாவிலேய தனி நபர் வருமானம் அதிகமுள்ள மூன்றாவது நகரமாக நிதி மற்றும் தொழிற்துறை மையமாக உள்ளது குருகிராம். நாட்டின் 44ஆவது பின்தங்கிய மாவட்டமாக நுஹ் இருக்கிறது. இங்கு பச்சை புல்வெளிகள், உலர்ந்த குன்றுகள், மோசமான உள்கட்டமைப்பு, தண்ணீர் தட்டுப்பாடு போன்றவை ஆரிஃபா போன்ற பலரது வாழ்வின் அடையாளத்தை பதிக்கிறது.
ஹரியாணாவின் இப்பகுதியிலும், அண்டை மாநிலமான ராஜஸ்தானிலும் மியோ இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். நுஹ் மாவட்டத்தில் 79.2 சதவீத இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர் (கணக்கெடுப்பு 2011).
1970களில் ஆரிஃபாவின் கணவர் ரிஸ்வான் பிவானிலிருந்து நடக்கும் தொலைவில் உள்ள மண், கல், சிலிக்கான் சுரங்கங்களில் வேலை செய்ய தொடங்கினார். அப்போது ஆரிஃபாவின் உலகமே அந்த மலை குன்றுக்குள் மட்டுமே இருந்தது. தண்ணீர் கொண்டு வருவது தான் அவரது முதன்மை பணி. 22 ஆண்டுகளுக்கு முன் ரிஸ்வான் இறந்த பிறகு, ஆரிஃபா வயலில் கூலி வேலை செய்து தினமும் ரூ. 10 முதல் 20 என கிடைத்த சொற்ப பணத்தில் தனது எட்டு குழந்தைகளையும் வளர்த்தெடுத்தார். “எவ்வளவு குழந்தைகள் பெற்றுக் கொள்கிறோமோ, அவ்வளவு செல்வத்தை அல்லா கொடுப்பார் என்று எங்கள் மக்கள் சொல்வார்கள்“ என்கிறார் அவர்.










