கடைக்கு மேல் பெயர்ப்பலகை எதுவும் இல்லை. “இது ஒரு பெயரற்றக் கடை,” என்கிறார் முகமது அசீம். 8 x 8 அடி கொட்டகையின் ஆஸ்பெஸ்டாஸ் சுவர்கள் புகைக்கரியாலும் சிலந்தி வலைகளாலும் மூடப்பட்டிருந்தன. ஒரு சிறு உலை மூலையில் இருந்தது. ஒரு நீலநிற தார்ப்பாயுடன் கரிக்குவியல் நடுவில் கிடந்தது.
ஒவ்வொரு நாள் காலை ஏழு மணியானதும் மேற்கு ஹைதராபாத்தின் தூத் பவுலியிலுள்ளக் குறுகியச் சந்துகளில் அசீம் சைக்கிள் ஓட்டிச் செல்வார். பட்டறைக்கு அருகே சைக்கிளை நிறுத்துவார். ஹகீம் மிர் வசீர் அலி இடுகாட்டின் சுவர்தான் பட்டறைக்கான சுவரும்.
தூசுபடிந்த பிளாஸ்டிக் பெட்டிகள், துருப்பிடித்த உலோகப் பெட்டிகள், உடைந்த பக்கெட்டுகள் மற்றும் தரையில் சிதறிக் கிடக்கும் உபகரணங்கள் என கொஞ்சம் கூட இடமின்றி இருக்கும் இங்குதான் மண் வார்ப்பு உலோக டோக்கன்களைச் செய்யும் தன் அன்றாட நாளை அவர் தொடங்குகிறார்.
ஹைதராபாத்தின் சில பழைய டீக்கடைகளும் உணவகங்களும் 28 வயது அசீம் தயாரிக்கும் இந்த டோக்கன்களை இன்னும் பயன்படுத்துகின்றன. முன்பு, இதே போன்ற உணவு டோக்கன்கள் ஆலைகளிலும் ராணுவ மையங்களிலும் ரயில் நிலையங்களிலும் வங்கிகளிலும் விடுதிகளிலும் கூட்டுறவுகளிலும் இன்னும் பல இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காலப்போக்கில் டோக்கன்களுக்கான தேவை சரிந்து மக்கள் பிளாஸ்டிக் டோக்கன்களுக்கும் ரசீதுகளுக்கும் மாறிவிட்டனர். சில ஹைதரபாத் உணவகங்கள் இன்னும அவர்களின் அன்றாட வருமானத்தை கணக்குப் பார்க்க உலோக டோக்கன்களை சார்ந்திருக்கின்றன. ஒரு வாடிக்கையாளர் உணவு வேண்டுமெனில் அந்த உணவுக்கான டோக்கன் வாங்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களும் பிற கடைக்காரர்களும் அசீமை அஜூ என அழைப்பார்கள். இத்தகைய டோக்கன்கள் செய்யும் திறனை ஹைதராபாத்தில் கொண்டிருக்கும் கடைசிச் சிலரில் தானும் ஒருவர் என்கிறார் அஜூ.



















