"சிறுவர்கள் டோலு நடனத்தில் அவ்வளவு திறமைசாலிகள் அல்ல", என்று 15 வயதாகும் விஜயலட்சுமி வெளிப்படையாகக் கூறுகிறார். "நாங்கள் நன்றாக ஆடுவோம்".
அவர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று தான் தோன்றுகிறது. மெல்லிய தேகம் கொண்ட சிறுமிகள் கனமான பறையை (ட்ரம்களை) தங்களது மெலிதான இடுப்பில் கட்டிக்கொண்டு அனுபவமிக்க நடன கலைஞர்களின் நடனத்துக்கு மத்தியில் துல்லியமாக சுற்றிச் சுழன்று ஆடுகின்றனர். எல்லா நேரங்களிலும் சரியாக ஒத்திசைவுடன் தாளமும் சேர்ந்தே இருக்கிறது.
அவர்கள் இளம்பெண்கள். அவர்களில் மூத்த பெணுக்குக் கூட இன்னும் 18 வயது ஆகவில்லை. ஆனால் உடல் ரீதியாக மிகுந்த ஆற்றல் தேவைப்படும் இந்த நடனத்தை மிகுந்த ஆற்றலுடனும் சுலபமாகவும் அவர்கள் ஆடுகின்றனர் என்பது நம்மை வியக்கச் செய்கிறது. டோலு நடனம் கர்நாடகாவில் பிரபலமான நாட்டுப்புற நடனம். கன்னடத்தில் டோலு குனிதா என்றால் பறையை (ட்ரம்களை) வைத்துக்கொண்டு நடனமாடுவது. இதனை காண்டு காலே என்றும் அழைப்பர் அதாவது ஆண்களின் திறமை அல்லது ஆண்களின் கலை என்று பொருள். கனமான ஆண்கள் 10 கிலோ எடையுள்ள பறையை (ட்ரம்களை) தங்களது இடுப்பில் கட்டிக்கொண்டு வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் ஆடுகின்றனர். நடனம் ஆடுபவர்கள் நல்ல கனமான ஆண்களாகவும் அதிக வலிமை மற்றும் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டுமென்று மரபார்ந்த அறிவு எண்ணியிருந்தது.
சில பெண்கள் இந்த பாரம்பரியத்தை உடைக்கத் தொடங்கிய முன்னர் வரை தான் அது. இங்கே ஹேசரகட்டாவில், நகர மையத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் பெங்களூரக்கு வெளியே நெல் வயல்களும், தென்னை மரங்களும் நிறைந்தது இந்த இடம். இந்தப் பசுமையான சூழலில் இருக்கும் கலாச்சார நிலையை மாற்ற இந்த பெண்கள் குழு தொடங்கிவிட்டது. இந்த வகையான டோலு நடனம் பெண்களுக்கான நடனமல்ல என்ற கருத்தை அவர்கள் சவால் செய்கின்றனர். பரவலாக நம்பப்படுகின்ற இந்த கட்டுக்கதையை புறக்கணித்து கடினமான பறையை (ட்ரம்ஸை) இப்பெண்கள் ஏற்றுக்கொண்டனர்.





