“காய்ந்து கொண்டிருக்கும் வண்டல் மண்ணிலிருந்து எழும் தூசும் இந்த சேற்றில் உள்ள மாசும் ரொம்ப மோசமானவை” என்கிறார் பட்டணம்திட்டாவைச் சேர்ந்த டத்தன் சி.எஸ். “இதை அணிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லிக்கொண்டே மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் முகமூடியை நீட்டுகிறார். அவர் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு பெண் இதை கேட்டு சிரிக்கிறார். அந்தப் பெண்ணின் வயலும் கேரள வெள்ளத்தில் அழிந்திருக்கிறது. “அவர் மும்பையில் வாழ்கிறார்” என்று கிண்டல் செய்தார். “அவருக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு தேவைப்படும்?”
வயல்வெளிகள் பேரழிவின் காட்சியாக நிற்கின்றன. முன்பு மிகச் சிறப்பான, நெல்லையும் மரவள்ளிக் கிழங்கையும் பயிரிட்டு லாபம் ஈட்டித் தரக்கூடிய நிலங்களில் ஆற்றுப் படுகையிலிருந்து அடித்துவரப்பட்ட சகதி பல அங்குல உயரத்திற்கு இருக்கிறது. சில இடங்களில் அடி உயரத்திற்கு சகதி படிந்திருக்கிறது. வேறு சில இடங்களில் ஆற்றில் அடித்துவர்பட்ட தொழிற்சாலைக் கழிவுகள் நிரம்பிக்கிடக்கின்றன. பல ஏக்கர் விவசாய நிலம், இம்மாதிரியான சகதி மற்றும் கழிவுகளால் போர்த்தப்பட்டு, வெயிலில் காய்ந்து ஒரு சிமென்ட் போர்வையைப் போல நிலத்தில் படிந்து கிடக்கிறது.
நிலத்தடி நீர் கீழே போய்க்கொண்டேயிருக்கிறது. நிலத்தடிக்கு நீர் சென்று சேரவில்லை. கிணறுகள் காய ஆரம்பித்திருக்கின்றன. வெப்பம் உயர்ந்துகொண்டே வருகிறது. இவையெல்லாம் சேர்ந்து தரையின் மேல் பரப்பில் உள்ள நீருக்கும் நிலத்தடி நீருக்கும் இடையிலான சமன்பாட்டைக் குலைத்து வருகின்றன. ஆறுகளின் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு, மாறியிருக்கிறது. மணல் படுகை இல்லாததால், பல ஆறுகளால் தண்ணீரை உறிஞ்சி வைக்க முடியவில்லை. ஆகவே, கேரளா எதிர்கொள்ளும் அடுத்த பிரச்சனை பஞ்சமாக இருக்கலாம். இம்மாதிரியான ஒரு சூழலில் மீண்டும் விவசாயத்தில் ஈடுபடத்தக்க சூழலை உருவாக்குவதென்பது, மிக உறுதியானவர்களைக்கூட நிராசையடையச் செய்யும்.
ஆனால், குடும்பஸ்ரீ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அப்படி நம்பிக்கையிழப்பவர்கள் அல்ல. குடும்பஸ்ரீ அமைப்பில் கிட்டத்தட்ட 45 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். வயது வந்த எல்லா பெண்களும் உறுப்பினராகலாம், ஆனால் ஒரு குடும்பத்திலிருந்து ஒரே ஒரு பெண் மட்டும்தான் உறுப்பினராக முடியும். அப்படியென்றால் மொத்தமுள்ள 77 லட்சம் வீடுகளில் கிட்டதட்ட 60 சதவிகிதம் வீடுகளிலாவது குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் இருக்கிறார்கள். குடும்பஸ்ரீயின் மையமாக இருப்பது 3.2 லட்சம் பெண் விவசாயிகள். தங்களை சங்க கிருஷிகளாக அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் – கூட்டு விவசாயம் செய்யும் சிறு குழுக்கள்.






