பச்சை முதலை பாணியிlல் மேல்சட்டையும், அடர்த்தியான கம்பளி காலுறையும் அணிந்த ஹர்ஃபதே சிங், ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில், ஒரு பெரிய உருண்டையான பாத்திரத்தில் இருந்து பச்சை பட்டாணியை உரிக்க தனது தந்தைக்கு உதவ முயற்சிக்கிறார். டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்திலுள்ள ஷாஜகான்பூரில் 18 மாதம் நிரம்பிய அவன், நிச்சயமாக இளம் போராட்டக்காரர்களில் ஒருவரே. விவசாயிகளின் போராட்டத்தில் ஹர்ஃபதேவின் பங்களிப்பு காய்கறிகளை உரிப்பதுதான்; முயற்சிப்பது என்றும் வைத்துக்கொள்ளலாம். அவனால் அதைச் சரியாகவோ திறமையாகவோ செய்ய முடியாமல் போகலாம், ஆனால் அது ஆர்வமின்மை அல்லது தான் முயற்சி செய்ய விரும்பவில்லை என்ற அர்த்தமில்லை.

டெல்லி மற்றும் ஹரியானாவின் வெவ்வேறு எல்லைகளில், பல மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அழிவு ஏற்படுத்தும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி திரண்டுள்ளனர். ஜூன் 5 ஆம் தேதி முதன்முதலில் அவசரச் சட்டமாக வெளியிடப்பட்ட இந்த சட்டங்கள் செப்டம்பர் 14ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் மசோதாக்களாக அறிமுகப்படுத்தப்பட்டன.  மேலும், அந்த மாதம் 20ஆம் தேதிக்குள் சட்டங்களாக மாறின.

டிசம்பர் 25ம் தேதியன்று, நான் ஹர்ஃபதேவைச் சந்தித்தபோது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் விவசாயிகள் ஷாஜகான்பூரில் உள்ள போராட்ட இடத்தில், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் இருந்து பல விவசாயிகளுடன் ஒற்றுமையுடன் சேர்ந்துள்ளனர். இந்த விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நாசிக்கிலிருந்து 1,200 கிலோமீட்டர் தூரத்திற்கு டெம்போக்கள், ஜீப் மற்றும் மினிவேன் போன்ற வாகனங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சகாக்களுடன் பல போராட்டத் தளங்களில் சேர இருந்தனர்.

மகாராஷ்டிரா விவசாயிகளை வரவேற்கும் குடும்பங்களில் ஹர்ஃபதேவின் குடும்பத்தினரும் இருந்தனர் - கிட்டத்தட்ட நூறு பேருக்கு உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (ஒரு உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி கொண்டு செய்யப்படும் உணவு) தயாரிக்கும் பணி அவர்களுக்கு இருந்தது. "எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மிகுந்த குளிர்காலத்தில் நாங்கள் இங்கு இருக்கிறோம். நாங்கள், விவசாயிகள் இன்று எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், ஃபதேவுக்கு எதிர்காலம் இருக்காது ”, என்று குழந்தையின் 41 வயதான தந்தை ஜாக்ரூப் சிங் கூறுகிறார். அவர் ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள சாஜுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

One of the youngest protestors at the Rajasthan-Haryana border pitches in to help his family prepare aloo mutter for a hundred people
PHOTO • Shraddha Agarwal
One of the youngest protestors at the Rajasthan-Haryana border pitches in to help his family prepare aloo mutter for a hundred people
PHOTO • Shraddha Agarwal

போராட்ட இடத்தில் அமைக்கப்பட்ட சமூக சமையலறைகளில் உதவ ஹர்ஃபதேவின் குடும்பம் ஷாஜகான்பூருக்கு வந்தது

சாஜுபூரில் அரிசி, கோதுமை மற்றும் உருளைக்கிழங்கு வளர்க்கும் ஐந்து ஏக்கர் நிலத்தை சொந்தமாகக் கொண்ட ஜாக்ரூப்பை நான் சந்தித்தபோது, அவர் ஏற்கனவே 28 நாட்களாக போராட்டி வருகிறார்.  அவர் முதல் 20 நாட்களுக்கு ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் சிங்கு எல்லையில் இருந்தார்.  பின்னர் ராஜஸ்தான்-ஹரியானா எல்லையின் நெடுஞ்சாலையைத் தடுக்கும் நோக்கத்துடன் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் முகாமை ஷாஜகான்பூருக்கு மாற்றினார்.

போராட்டங்களின் முதல் வாரங்களில் தனது குடும்பத்தை பார்க்கமுடியாமல் தவித்ததாக ஜாக்ரூப் கூறுகிறார். டிசம்பர் 23 அன்று, அவரது மனைவி குர்பிரீத் கவுர், 33, மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளான ஏகாம்ஜோட், 8, மற்றும் ஹர்ஃபதே ஆகியோர் ஷாஜகான்பூரில் அவருடன் சேர்ந்து போராட்ட இடத்தில் அமைக்கப்பட்ட வெவ்வேறு சமூக சமையலறைகளில் உதவினர். “என் மகள் சேவா (சேவை) செய்து வருகிறாள் தேவைப்படும் அனைவருக்கும் அவள் தேநீர் விநியோகித்து வருகிறாள். நாங்கள் இங்கே என்ன செய்கிறோம் என்பதன் முக்கியத்துவத்தை என் குழந்தைகள் புரிந்துகொள்கின்றனர்,”என்று ஜாக்ரூப் கூறுகிறார், இதனைக்கூறிக்கொண்டே, ஹர்ஃபதே தனது பட்டாணியை சரியாக உரிக்கும்படி அறிவுறுத்துகிறார்.

விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் சட்டங்கள்: விவசாயிகள் உற்பத்தி வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020 ; விலை உறுதி மற்றும் வயல் சேவைகள் மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தச் சட்டம். 2020 ; மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020. இந்திய அரசியலமைப்பின் 32வது பிரிவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அனைத்து குடிமக்களுக்கும் சட்டரீதியான உதவிக்கான உரிமையை முடக்குவதால் , இவை ஒவ்வொரு இந்தியனையும் பாதிக்கும் என்று இந்த சட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன.

தமிழில்: ஷோபனா ரூபகுமார்
Shraddha Agarwal

Shraddha Agarwal is a Reporter and Content Editor at the People’s Archive of Rural India.

यांचे इतर लिखाण Shraddha Agarwal
Translator : Shobana Rupakumar

Shobana Rupakumar is a Chennai based journalist and she has worked on women and environmental issues.

यांचे इतर लिखाण Shobana Rupakumar