வேலை கிடைக்க கூடிய நாட்களில் ஜெயலட்சுமம்மா 12 மணி நேர வேலையை முடிக்கும் போது, ஒரு சிறை தண்டனை பெற்ற குற்றவாளிக்கு வழங்கப்படும் ஒரு நாளுக்கான அரிசியில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே பெறுகிறார். உண்மையில் நாள் முழுவதும் சராசரியாக அவர் பெரும் அரிசி சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிக்கு ஒரு நேர உணவில் கிடைப்பதை விட மிகக் குறைவானதே.
ஜெயலட்சுமம்மா சிறையில் உள்ள குற்றவாளி அல்ல. அவர் ஒரு குறு விவசாயி, அவரது கணவர் 45 வயதாகும் H M கிருஷ்ணா 4 ஆண்டுகளுக்கு முன்பு மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஹுளுஹனஹள்ளி கிராமத்தில் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகாவில் 2003 ஆம் ஆண்டு விவசாய தற்கொலைகளால் இந்த மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த மாநிலத்தில், அவருக்கு வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர் அட்டை மூலம் மாதமொன்றுக்கு 4 கிலோ அரிசி (மற்றும் ஒரு கிலோ கோதுமை) மட்டுமே பெற உரிமை உண்டு. அந்த நான்கு கிலோவிற்கும் அரசு மானியம் அளிக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நடைமுறையில் உள்ள சந்தையில் அதிகமான விலையில் அவரால் அவற்றை வாங்க முடியாது. கடந்த 14 ஆண்டுகளில் விவசாய நெருக்கடியால் ஏற்படும் தற்கொலையால் கணவனை இழந்த இந்தியா முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களில் இவரும் ஒருவர்.
ஒரு மாதத்திற்கு 4 கிலோகிராம் என்றால் நாளொன்றுக்கு சுமார் 135 கிராம் என்று அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த டி யஸ்வந்தா கூறுகிறார். இவர் இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவராகவும் இருக்கிறார். "ஒரு விசாரணைக் கைதி அல்லது குற்றவாளி கூட இதை விட அதிகமாக பெறுகிறார்". மேலும் என்னவென்றால் அவர்கள் சமைத்த உணவை பெறுகின்றனர். இவருக்கு நான்கு கிலோ தானியம் தான் கிடைக்கிறது. சிறைச்சாலையில் மாநிலங்களுக்கு ஏற்றவாறு கைதிகளுக்கு அரிசி, கேழ்வரகு அல்லது சப்பாத்தி உணவாக வழங்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள சிறை அதிகாரிகள் தி இந்துவிடம் கடுமையான சிறை தண்டனை பெற்ற அரிசி உணவு உண்ணும் கைதிகள் ஒருநேர உணவிற்கு 710 கிராம் சமைத்த அரிசியை பெறுகின்றனர் என்று கூறினார்கள். அரிசி உணவு முறையில் இல்லாதவர்களுக்கு 290 கிராம் அரிசி வழங்கப்படுகிறது. விசாரணை கைதிகள் மற்றும் எளிய சிறை தண்டனை பெற்றவர்கள் (அரிசி உணவு உண்பவர்கள்) ஒரு நேரத்திற்கு 505 கிராம் அளவு அரிசி பெறுகின்றனர்".
கடுமையான சிறைவாசம் பெற்ற குற்றவாளிகள் எட்டு மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கும். ஜெயலட்சுமம்மா 12 அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரங்கள் வேலை செய்கிறார். ஆனால் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உணவு உண்டால் அவருக்கு ஒரு வேளை உணவிற்கு 45 கிராம் அரிசி தான் கிடைக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறுகிறார் யஸ்வந்தா. அவருக்கு இந்த ஒப்பீடுகளை எல்லாம் செய்து பார்ப்பதற்கு நேரம் இல்லை. இப்போது அவரது மகள் பெங்களூருவில் உள்ள ஆடை நிறுவனத்தில் சொர்ப்ப சம்பளத்தில் வேலை செய்கிறார். "அதிகபட்சமாக ஒரு வருடத்தில் அவளால் எங்களுக்கு 500 ரூபாய் அனுப்ப முடியும்", என்று அவர் அவரது கிராமத்தில் எங்களிடம் கூறினார். இதனால் அவரும் அவரது மகனும் வீட்டில் இருக்கின்றனர். வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் நபர் என்ற அட்டையின் மூலம் கூட்டு உரிமையில் நாளொன்றுக்கு 270 கிராம் அரிசி பெறுவர். அதாவது கேழ்வரகு உணவு சாப்பிடும் ஒரு கைதி கூட 290 கிராம் அல்லது அதற்கும் அதிகமான அளவு பெறுவார் ஆனால் இவர்கள் அதை விட குறைந்த அளவே பெறுகின்றனர்.




