தபாலா சக்மா பிறந்தபோது இருண்ட வானத்தை கருமேகங்கள் சூழ்ந்திருந்தது. எனவே அவரது பெற்றோர் அவருக்கு ‘இருண்ட வானம்‘ என்ற பெயரை தேர்ந்தெடுத்தனர். அவர்கள் மொழியில் சக்மா என்பதன் அர்த்தம் இதுதான். ஆனால் அந்த இருள் தபாலாவின் வாழ்க்கை முழுவதும் தங்கிவிட்டது. அவர் மூன்று வயதில் தனது பார்வையை இழந்துவிட்டார். அம்மை நோயுடன், தீவிர வயிற்றுப்போக்கால் மாலைக்கண் நோய் ஏற்பட்டு, இறுதியில் நிரந்தரமாக பார்வை தெரியாமல் போய்விட்டது.
ஆனால், தபாலாவை இது பாதித்தாலும், அவர் தனது 16 வயதில் மூங்கில் கூடைகள் தயாரிப்பதற்கு கற்றுக்கொண்டார். தற்போது 65 வயதான அவர், “மூங்கில் குச்சிகளை வைத்து வடிவங்கள் செய்வதற்கு நானாகவே கற்றுக்கொண்டேன். எனது இளம் வயதில், என்னால் மூங்கில் வீடு செய்வதற்கு போதுமான சக்தி இருந்தது“ என்று கூறுகிறார்.
தபாலா, ராஜீவ் நகரில் வசித்து வந்தார். அந்த கிராமத்தில் 3,530 பேர் வசித்து வருகின்றனர். இது மிசோரம் மாநிலத்தின் மாமிட் மாவட்டம் சாவல்னுவம் வட்டத்தில் உள்ளது. அவர் சக்மா சமூகத்தைச் சார்ந்த பழங்குடியினர். அவர்களில் பெரும்பாலானோர் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள். அவர்களின் முதன்மை தொழில் விவசாயமாகும். இந்த மாவட்டத்தின் மலைகளில் வளமான மண் உள்ளது. அதில் பெரும்பாலானோர் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வார்கள். அவர்கள் நெல், சோளம், எள், பாக்கு, அன்னாசி மற்றும் பிற பயிர்களை சாகுபடி செய்வார்கள். அங்கு அடர்ந்த மூங்கில் காடுகளும் உள்ளன. துடைப்பம் தயாரிப்பதும் உள்ளூர் பொருளாதாரத்திற்கான ஆதாரமாக உள்ளது.




