“என் அப்பு (தந்தை) ஒரு தினக்கூலி தொழிலாளர். ஆனால் மீன் பிடிப்பது அவருக்கு பிடித்த வேலை. ஒரு கிலோ அரிசிக்கு மட்டும் எப்படியாவது பணத்தை சம்பாதித்து கொடுத்து விட்டு, கிளம்பி விடுவார்! என் அம்மி (தாய்) மிச்ச எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்,” என்கிறார் பெல்தாங்காவின் உத்தர்பரா பகுதியிலுள்ள வீட்டின் மாடியில் அமர்ந்திருக்கும் கோஹினூர் பேகம்.
“யோசித்துப் பாருங்கள். அந்த ஒரு கிலோ அரிசியில்தான் என் அம்மி நான்கு குழந்தைகளுக்கும் தாதிக்கும் (தந்தை வழி பாட்டி) தந்தைக்கும் அத்தைக்கும் தனக்கும் உணவு தயார் செய்ய வேண்டும்.” ஒரு கணம் தாமதித்து பேசும் அவர், “அவற்றை தாண்டியும் மீன் பிடிக்க கொஞ்ச அரிசி வேண்டுமென கேட்கும் துணிச்சல் அபுவுக்கு உண்டு. அவரை பொருட்படுத்துவதையே நாங்கள் நிறுத்திவிட்டோம்,” என்கிறார்.
55 வயதான கோஹினூர் அக்கா, முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள ஜானகி நகர் பிரதாமிக் வித்யாலயா தொடக்கப் பள்ளியின் மதிய உணவு சமைக்கும் வேலை செய்கிறார். அவகாசம் கிடைக்கும்போது பீடி சுற்றுகிறார். இந்த வேலையில் இருக்கும் பெண்களுக்கான உரிமைகளை பிரசாரம் செய்யும் வேலையையும் செய்கிறார். முர்ஷிதாபாதில் ஏழ்மையிலுள்ள பெண்கள்தான், பீடி சுற்றும் வேலை செய்கின்றனர். உடல்ரீதியாக அந்த வேலை பெரும் தண்டனை. இளம் வயதிலிருந்து தொடர்ந்து புகையிலையுடன் புழங்குவது அவர்களின் ஆரோக்கியத்தை பெரும் ஆபத்தில் தள்ளுகிறது. உடன் படிக்க: புகைமயமாகும் பெண் பீடித் தொழிலாளர்களின் ஆரோக்கியம்
2021ம் ஆண்டின் டிசம்பர் மாத காலை ஒன்றில் கோஹினூர் அக்கா பீடித் தொழிலாளர்களுக்கான பிரசாரத்துக்கு சென்று வரும்போது இந்த செய்தியாளரை சந்தித்தார். பிறகு, ஆசுவாசமான நிலையிலிருந்த கோஹினூர், தன் பால்ய காலத்தை பற்றி பேசினார். சொந்தமாக எழுதிய பாடலை பாடவும் செய்தார். கடினமான உழைப்பை பற்றியும் பீடித் தொழிலாளர்கள் பணிபுரியும் சுரண்டல் மிக்க சூழல் பற்றியும் பேசும் பாடல் அது.
குழந்தையாக இருந்தபோது குடும்பத்தின் வறுமை, நிறைய அசவுகரியத்தை வீட்டில் கொடுத்ததாக சொல்கிறார் கோஹினூர் அக்கா. சிறுமியாக அவருக்கு அச்சூழல் தாங்க முடியாததாக இருந்தது. “எனக்கு ஒன்பது வயதுதான் அப்போது,” என்கிறார் அவர். “ஒரு காலை, வீட்டில் வழக்கமாக இருக்கும் குழப்பத்துக்கிடையே என் அம்மா கரித்துண்டுகள், சாணம் மற்றும் விறகு ஆகியவற்றைக் கொண்டு அடுப்பை தயார் செய்து கொண்டே அழுவதை பார்த்தேன். சமைப்பதற்கு தானியம் ஏதுமில்லை.”






