"ஒரு துணியில் படம் வரைந்து விட்டால் அது வார்லி ஓவியம் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எங்களின் கடவுள்களின் ஓவியங்களை வரையத் தெரியவில்லை. அவர்களுக்கு எங்கள் கதைகள் தெரிவதில்லை," என்கிறார் சதாஷிவ். பிரபலமான வார்லி ஓவியரான ஜிவ்யா சோமா மாஷேவின் மகன் அவர். பால்கர் மாவட்டத்தில் உள்ள தகானு தாலுகாவின் கஞ்சத் கிராமத்தில் 2015 ஆம் ஆண்டின் மே மாதத்தில் அவரை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவரின் தந்தையின் வயது எண்பது.
வார்லிகளால் வரையப்படும் ஓவியத்தின் பாணி தற்போது கண்காட்சிகளிலும் ஹோட்டல்களிலும் ஓவிய அறைகளிலும் துப்பட்டாக்களிலும் சேலைகளிலும் பாத்திரங்களிலும் தென்படுகிறது. ஆனால் பெரும்பாலும் இவற்றை வரைவது வார்லிகள் அல்ல. தனித்தன்மை வாய்ந்த இந்த ஓவியங்கள் ஆரம்பத்தில் வார்லிகளின் பாதுகாப்பில் இருந்தது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் எல்லைக்கு இருபக்கங்களிலும் வாழும் ஆதிவாசி சமூகமே வார்லிகள். மகாராஷ்டிராவில் அவர்கள் துலே, நாசிக் மற்றும் பல்கர் மாவட்டங்களில் வாழ்கிறார்கள். குஜராத்தில் பெரும்பாலும் அவர்கள் வல்சத்தில் வாழ்கிறார்கள்.
1971 ஆம் ஆண்டில் கேன்வாஸ் பரப்பில் முதன் முதலாக ஓவியம் வரையத் தொடங்கிய வார்லி, ஜிவ்யா சோமா மாஷே ஆவார். அதற்கு முன்னால் வரை அச்சமூகத்தில் இருந்த திருமணமான பெண்கள் மட்டுமே பாரம்பரியமாக அக்கலையை தொடர்ந்து வந்தார்கள். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின்போது குடிசைகளின் மண் சுவர்களில் அவர்கள் ஓவியங்களை வரைந்தார்கள்.
2011 ஆம் ஆண்டு மாஷேவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் வார்லி ஓவியத்தை பிரபலப்படுத்தியதில் முக்கியமான பங்கு வகித்தவர் என குறிப்பிடப்படுபவர். 2018 ஆம் ஆண்டின் மே மாதம் 15ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார். இந்த காணொளியில் அவரும் சதாஷிவ்வும் (அவரும் ஒரு ஓவியர்) மாட்டுச் சாணத்தை கேன்வாஸ் பரப்பில் எப்படி பிரயோகிப்பது என்பதைப் பற்றியும் மாஷே எப்போது வண்ணங்களை பயன்படுத்த தொடங்கினார் என்பதைப் பற்றியும் வரைவதற்கு எந்த வகையான குச்சிகளை அவர் விரும்புவார் என்பது பற்றியும் ஓவியக்கலை மெல்ல அதன் பாரம்பரிய வேர்களை எப்படி இழந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் பேசுகிறார்கள்.
தமிழில்: ராஜசங்கீதன்.