58 வயது ரமேஷ் உகார் நவம்பர் 28ஆம் தேதி அதிகாலை எழுந்தார். அவரது மனதில் இரண்டு விஷயங்கள் மட்டுமே இருந்தன. “நான் வாக்களிக்க வேண்டும்,” என்றார் அவர். “அடுத்த நாள் நான் டெல்லி சென்றடைய வேண்டும்.”
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபுவா மாவட்டம் பெட்லாவாட் தாலுக்கா மானஸ்சியா கிராமத்தில் உகார் வசிக்கிறார். அவர்களுக்கு அருகமை இரயில் நிலையம் என்பது சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தூரில் உள்ளது. இந்தூரில் ரயில் ஏறினால் டெல்லியை அடைவதற்கு 14 மணி நேரம் ஆகும். “நேற்றிரவே என் துணிகளை மடித்துவைத்து விட்டேன், பயணத்திற்குத் தேவையான உணவை மனைவி காலையில் தயார் செய்ய சொல்லிவிட்டேன், ” என்ற அவர் நவம்பர் 29ஆம் தேதி டெல்லியில் உள்ள குருத்வாரா ஸ்ரீ பாலா சாஹிப்ஜி முகாம்களில் கம்பு ஏந்தி அமர்ந்திருந்தார். “நான் வாக்களித்துவிட்டு மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டேன். பேருந்து மூலம் மாலையில் இந்தூருக்கு வந்து அங்கிருந்து டெல்லிக்கு நள்ளிரவில் ரயில் ஏறினேன்.”
மத்திய பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெற்றன. 150-200 வேளாண் குழுக்கள், சங்கங்களின் கூட்டமைப்பான அனைத்து இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு நாடெங்கிலும் இருந்து சுமார் 50,000 விவசாயிகளை தலைநகருக்கு கொண்டு வந்தது. நாட்டின் விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து கவனத்தை திருப்பும் வகையில் 21நாள் கூட்டம் மற்றும் இரண்டு நாள் பேரணியில் பங்கேற்க அவர்கள் வந்திருந்தனர். 1995 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியா முழுவதும் நெருக்கடி காரணமாக 3,00,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.





