தட்டாலஷ்மியும் பொதாடாலஷ்மியும் நஷ்டத்தில் இருக்கின்றனர். டி.லஷ்மிக்கு சேர வேண்டிய ஊதியத்தை பி.லஷ்மியின் வங்கிக் கணக்கில் போட்டிருக்கிறது அரசாங்கம். பொதாடலஷ்மியின் பணம் தட்டாலஷ்மியின் வங்கிக் கணக்கில் போடப்பட்டிருக்கிறது.
டி.லஷ்மி மிச்ச 16000 ரூபாய்க்கு காத்திருக்கிறார். பி.லஷ்மி மிச்ச 9000 ரூபாய்க்கு காத்திருக்கிறார். இரு பெண்களுமே பட்டியல் சாதியை சேர்ந்தவர்கள். இருவரிடமுமே நிலம் இல்லை. இருவரும் ஊரக வேலைவாய்ப்பு ஊழியர்கள். டி.லஷ்மி முனகபகா கிராமத்தை சேர்ந்தவர். பி.லஷ்மி கனர்பதி கிராமத்தை சேர்ந்தவர். இரு கிராமங்களும் ஒரே மண்டலத்தில்தான் இருக்கிறது.
2016லிருந்து 2017 வரை டி.லஷ்மி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 95 நாட்களுக்கு வேலை செய்தனர். அவருக்கான ஊதியம் கிடைக்கவில்லை (கள அலுவலர்கள் முழு 95 நாட்களுக்கும் அதை கணக்கிடவில்லை), காரணம், ஏப்ரல் 2015லிருந்து ஆதார் அட்டைகளை ஊரக வேலைவாய்ப்பு அட்டைகளுடன் ஊழியர்கள் இணைக்க வேண்டுமென அரசு வலியுறுத்தியிருந்தது.
”முனகபகா மண்டலில் இருக்கும் கணிணி அலுவலர் ஊரக வேலைவாய்ப்பு அட்டையின் 18 இலக்கத்தையும் ஆதார் அட்டையின் 12 இலக்கத்தையும் இணைப்பதில் செய்த தவறால், எனக்கு கிடைக்க வேண்டிய பணம் (இப்போதைக்கு அவருக்கு கிடைக்க வேண்டிய பணத்தில் பாதியளவு) கணபர்தி கிராமத்திலிருக்கும் பி.லஷ்மியின் வங்கிக் கணக்கில் போடப்பட்டிருக்கிறது,” என்கிறார் அவர்.







