ரச்செனஹல்லியின் குப்பத்தில் வாழும் மக்தும்பே எம்.டி. ஊரடங்கு நேரத்தில் குடும்பத்தின் பசியை எப்படி போக்குவது என்கிற பதைபதைப்பில் இருக்கிறார். “என் கணவருக்கு வார ஊதியம் கிடைத்துக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் எங்களுக்கு உணவு வாங்க செல்வோம். கடந்த இரண்டு வாரங்களில் யாரும் சம்பளம் கொடுக்கவில்லை. அதனால் எங்களால் உணவுப் பொருட்களை வாங்க முடியவில்லை,” என்கிறார் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பத்து நாட்களுக்கு பிறகு நான் சந்தித்த 37 வயதான மக்தும்பே. அவரின் கணவர் கட்டடங்களுக்கு வெள்ளை அடிக்கும் வேலை பார்ப்பவர். வழக்கமாக ஒரு வாரத்துக்கு 3500 ரூபாய் வரை சம்பாதித்தவருக்கு, மார்ச் 25ம் தேதி ஊரடங்கு தொடங்கியதிலிருந்து வேலை எதுவும் கிடைக்கவில்லை.
மூன்று குழந்தைகளை கொண்ட தம்பதியர் 10 வருடங்களுக்கு முன் வேலை தேடி பெங்களூருவுக்கு புலம்பெயர்ந்தனர். கர்நாடகாவின் விஜயபுர மாவட்டத்தின் (முன்பு பிஜாப்பூர்) தளிகோட்டா (தளிகோட்டி என்றும் அழைக்கப்படும்) டவுனிலிருந்து வந்தவர்கள். மக்தும்பேவின் கணவர், மவுலாசாப் தோடாமனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வாங்கும் சம்பளத்தில்தான் குடும்பம் ஓடியது. “ஒவ்வொரு வாரமும் நாங்கள் உணவுப் பொருட்கள் வாங்குவோம். ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், பருப்பு போன்றவை வாங்கி எங்கள் வாழ்க்கையை ஓட்டுவோம். இப்போது அது நின்று விட்டது. எங்கும் எங்களால் இப்போது செல்ல முடியாது. உணவு வாங்க வெளியே செல்ல விரும்புகிறோம்.”
ஏப்ரல் 4ம் தேதி வடக்கு பெங்களூரின் குப்பத்தில் வாழ்ந்தவர்களை நாங்கள் சந்தித்தபோது, தங்களின் பல்வேறு துயரங்களை பற்றி அவர்கள் பேசினார்கள். மத்திய நிதி அமைச்சர் அறிவித்த நிவாரணத்தில் கிடைக்கும் மானிய விலை அரசி அவர்களுக்கு கிடைக்காது. அவர்களிடம் குடும்ப அட்டை இல்லை. சிலரிடம் இருந்தாலும் அது அவர்களின் ஊர் முகவரியை கொண்டிருப்பதாக சொல்கிறார் கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்திலிருந்து வந்த 30 வயதான மனிக்யம்மா. “பெங்களூருவில் அந்த குடும்ப அட்டைகள் பயன்படாது,” என்கிறார் அவர்.
“வேலையில்லாமல் நாங்கள் சிரமப்படுகிறோம். நிறைய கஷ்டம் இருக்கிறது. எங்களுக்கு குழந்தைகள் இருக்கின்றன. வாடகை கொடுக்க வேண்டும். நாங்கள் என்ன செய்வது?” என கேட்கிறார். ஊரடங்குக்கு முன் வரை மனிக்யம்மாவும் அவரது கணவரும் கட்டுமானத் தொழிலாளர்களாக வேலை பார்த்தார்கள். ஏழு வருடங்களுக்கு முன் பெங்களூருவுக்கு வந்தவர்கள். நான்கு குழந்தைகள் அவர்களுக்கு.
மனிக்யம்மா நகரத்துக்கு வந்த அதே காலத்தில் ராய்ச்சூரில் இருந்து வந்தவர் 27 வயதான லஷ்மி, என். ஊரடங்கு தொடங்கும்வரை அவர் வடக்கு பெங்களூருவிலிருந்து கட்டுமான வேலைகளில் கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். “நாங்கள் சிமெண்ட் செய்து கற்களை உடைப்போம். இந்த வேலைக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் கூலியாக எங்களுக்கு கிடைக்கும்,” என்கிறார். தனியே அவர் வாழும், கூரை வேயப்பட்ட ஓரறை கொண்ட வீட்டுக்கு 500 ரூபாய் வாடகை கொடுக்கிறார்.


