"இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, வடிகால்கள் சுத்தமாக இருந்த போது தண்ணீர் கண்ணாடி போலத் தெளிவாக இருந்தது. (ஆற்றின் உள்ளே) விழுந்த ஒரு நாணயத்தை மேலே இருந்தே நாம் கண்டுபிடித்து விடலாம். யமுனை நதி தண்ணியை அப்படியே அள்ளிப் பருகலாம்", என்று மீனவர் ராமன் ஹல்தார், ஒரு கை நிறைய நீரை அள்ளி தன் வாயின் அருகில் வைத்தபடி கூறுகிறார். நாங்கள் அவரை ஒரு மாதிரி பார்த்ததும், அந்த தண்ணீரை கீழே விட்டுவிட்டு எங்களை பார்த்து சிரிக்கிறார்.
இன்றைய யமுனையில் பிளாஸ்டிக்குகள், அலுமினிய தாள்கள், குப்பைகள், செய்தித்தாள்கள், இறந்த தாவரங்கள், கான்கிரீட் குப்பைகள், துணிகள், சேறு, அழுகிய உணவுகள், தேங்காய் நெற்று, ரசாயன நுறை மற்றும் ஆகாயத்தாமரை ஆகியவை தலைநகரத்தின் பொருள் நுகர்வினைப் பற்றிய இருண்ட பிரதிபலிப்பை நமக்கு வழங்குகிறது.
யமுனையின் வெறும் 22 கிலோமீட்டர் (அல்லது 1.6 சதவீதம்) மட்டுமே தேசிய தலைநகர் பகுதி வழியாக பாய்கிறது. ஆனால் 1,376 கிலோ மீட்டர் நீளம் உள்ள ஆற்றில் உள்ள மொத்த மாசுபாட்டில் 80% வரை அந்த சிறிய நீளத்தில் இருந்து வெளியேறும் கழிவு மற்றும் விசத்தால் ஏற்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கண்காணிப்புக் குழு அறிக்கை தில்லியிலுள்ள நதியை 'கழிவுநீர் பாதை' என்று ஒப்புக்கொண்டு அறிவித்தது. இதன் விளைவாக நீரில் பிராணவாயுவின் அளவு கடுமையாக குறைந்து வருவதால் அதிக அளவிலான மீன்கள் இறந்து வருகின்றன.
கடந்த வருடம், தில்லியில் ஆற்றின் தெற்கு பகுதியிலுள்ள கலிந்தி குஞ்ச் படித்துறை பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன மேலும் பல நீர்வாழ் உயிரினங்களும் இறந்தன, தில்லியை ஒட்டியுள்ள நதிப் பகுதியில் இது இப்போது ஒரு வருடாந்திர நிகழ்வாகவே மாறிவிட்டது.
"ஒரு நதி சுற்றுச்சூழல் அமைப்பு உயிர்ப்புடன் இருக்க அதற்கு 6 மற்றும் அதற்கும் மேற்பட்ட அளவில் கரைந்த பிராணவாயு (நீரில் இருக்கும் பிராணவாயுவின் அளவு) தேவை. மீன்களுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 வரை கரைந்த பிராணவாயு தேவைப்படுகிறது. தில்லியைச் சேர்ந்த யமுனை பகுதியில் கரைந்த பிராணவாயு 0 - 0.4 வரையே உள்ளது", என்று சிகாகோ பல்கலைக்கழகத்திலுள்ள டாடா வளர்ச்சி மையத்தின், நீரில் இருந்து மேகம் வரை திட்டத்தின் இயக்குனரான பிரியங் ஹிராணி கூறுகிறார். இந்தத் திட்டம் நதியில் ஏற்படும் நிகழ்நேர மாசுபாட்டை கணக்கிடுகிறது.
தில்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ராம் படித்துறையின் கரையில் புல்வெளியில் தங்கள் மீன்பிடி வலைகள் அருகில் அமர்ந்து 52 வயதாகும் ஹல்தாரும் அவரது 2 நண்பர்களும் அமைதியாக புகைத்துக் கொண்டிருந்தனர். "நான் மூன்று வருடங்களுக்கு முன்பு, கலிந்தி குஞ்ச் படித்துறை பகுதியில் இருந்து இங்கு வந்தேன்.அங்கு இப்போது மீன்கள் இல்லை, முன்னர் நிறைய இருந்தது. இப்போது சில கெழுத்தி மீன்கள் மட்டுமே உள்ளன. அதிலும் சில அழுக்காகவும் மேலும் ஒவ்வாமை, சொறி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன", என்று தூரத்திலிருந்து பார்ப்பதற்கு வெள்ளை நிற மேகத்தை போல இருக்கும், கையால் பின்னப்பட்ட வலையில் சிக்குகளை நீக்கியபடியே அவர் கூறுகிறார்.
தண்ணீரில் ஆழமான பகுதியில் வாழும் மற்ற உயிரினங்களை போல் அல்லாமல் கெழுத்தி மீன்களால் மேற்பரப்பில் மிதந்து சுவாசிக்க முடியும் எனவே மற்ற உயிர்களை விட நன்றாக அது தப்பி உயிர் வாழ்கிறது. தில்லியைச் சேர்ந்த கடல் பாதுகாப்பு நிபுணர் திவ்யா கர்னாட், சுற்றுச்சூழலில் உள்ள வேட்டையாடுபவர்கள் உணவுச் சங்கிலியில் மிகவும் கீழே உள்ள நச்சுக்களுக்கு வெளிப்பட்ட மீன்களை உண்பதால் அவர்களது உடலிலும் நச்சுக்கள் சேர்கின்றன. எனவே மாமிசம் உண்டு தூய்மை செய்கின்ற மீனான கெழுத்தி மீனை உண்பவர்கள் அதன் விளைவுகளை சந்திப்பது ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை", என்று கூறினார்.
*****
இந்தியாவில் மீன் பிடிபடும் திறனில் கிட்டத்தட்ட 87% நூறு மீட்டர் ஆழத்தில் தான் கிடைக்கிறது என்று கூறுகிறது கடற்கரை தொழில்: இந்தியாவின் நீல பொருளாதாரம் என்ற தில்லியை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனம் இது இத்தகைய பிரச்சனைகளில் ஈடுபடும் ஒரு லாபநோக்கற்ற குழு. அவற்றில் பெரும்பாலானவை நாட்டின் மீன்பிடி சமூகங்களால் அணுகக்கூடியவை. இது உணவை மட்டுமல்ல அன்றாட வாழ்க்கையையும், கலாச்சாரத்தையும் கூட வளர்கிறது.
“இப்போது நீங்கள் மீனவர்களின் சிறிய அளவிலான பொது பொருளாதாரத்தை உடைக்கிறார்கள், என்று சிறு மீன் பிடி தொழிலாளர்களின் (உள்நாட்டு) தேசிய சங்கத்தின் (NPSSFWI) தலைவரான பிரதீப் சாட்டர்ஜி சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் உள்ளூரில் மீன்பிடித்து, உள்ளூர் சந்தைகளில் விற்கின்றனர் அங்கு உங்களுக்கு கிடைக்கவில்லை எனில் நீங்கள் வேறு ஒரு தூரதேசத்திலிருந்து அதைக் கொண்டு வர வேண்டும், அதில் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து மீண்டும் இந்த நெருக்கடியை மோசமாக்கும். நிலத்தடி நீருக்கு மாறுவது என்றால் அதிக ஆற்றலை பயன்படுத்துதல் என்று பொருள் அது மட்டுமின்றி அது நீர் சுழற்சியையும் பாதிக்கும்", என்று கூறுகிறார்.
நீர் நிலைகள் பாதிக்கப்படும் மேலும் ஆறுகள் மீள் நிறைப்பு செய்யப்படாது என்றும் சுட்டிக்காட்டி கூறுகிறார். இதை சரி செய்யவும் ஆற்றிலிருந்து சுத்தமான குடிநீரை பெறவும் வழக்கமான மூலங்களிலிருந்து இன்னமும் அதிகமான ஆற்றல் தேவைப்படும். எனவே நாம் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரங்களை வலுக்கட்டாயமாக உடைத்து வருகிறோம் மேலும் உழைப்பு, உணவு மற்றும் உற்பத்தியை அதிகமான ஆற்றலை எடுத்துக் கொள்ளும் நிறுவன சுழற்சிக்குள் உட்படுத்துகிறோம். அதே வேளையில் ஆறுகள் இன்னமும் கழிவுகளை கொட்டுவதற்குத் தான் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன", என்று கூறுகிறார்.
தொழிற்சாலைகள் அதன் கழிவுகளை நதி நீரில் வெளியேற்றும் போது மீனவர்கள் தான் முதலில் அதை தெரிந்து கொள்கின்றனர். துர்நாற்றம் வீசுவதில் இருந்தும், மீன்கள் எப்போது இறக்கத் துவங்குகின்றன என்பதிலிருந்தும் எங்களால் அதை கண்டறிந்து கூற முடியும்", என்று, பல்லாவில் வசிக்கும் - ஹரியானா தில்லியின் எல்லையில், அங்கு தான் யமுனை நதி தலைநகருக்குள் நுழைகிறது, வசிக்கும் 45 வயதாகும் மங்கள் சாகினி குறிப்பிடுகிறார். பீகாரின் சியோகர் மாவட்டத்தில் உள்ள தனது 15 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தை எவ்வாறு கவனிப்பது என்பது குறித்து சாகினி கவலைப்படுகிறார். மக்கள் எங்களை பற்றி எழுதிக் கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் எங்களது வாழ்வு மேம்படவில்லை மேலும் மோசமாகிக் கொண்டே தான் போகிறது", என்று கூறி அவர் எங்களை நிராகரித்தார்.
மத்திய அரசின் கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்படி சுமார் 8.4 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த, இந்தியாவின் கடற்கரையோரத்தில் உள்ள பாரம்பரிய கடல் மீன்பிடி சமூகங்களைச் சேர்ந்த சுமார் 40 லட்சம் மக்கள் உள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை மீன்பிடி பொருளாதாரத்தை சார்ந்து இருப்பவர்களை கணக்கிடும்போது 7 முதல் 8 மடங்கு அதிகமாக இருக்கிறது. NPSSFWI இன் சாட்டர்ஜி கூறுகையில் 40 லட்சம் மக்கள் உள்நாட்டு மீன்பிடி தொழிலாளர்களாக இருக்கலாம் என்கிறார். கடந்த பல தசாப்தங்களாக லட்சக்கணக்கான மக்கள் தங்களது ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது முழு நேர பணியான மீன் பிடித்தலை கைவிடுகின்றனர். "கிட்டத்தட்ட 60 - 70 சதவீத கடல் மீனவர்கள் தங்களது சமூகம் அழிந்து வருவதால் பிற விசயங்களை நோக்கி திருப்பி உள்ளனர்", என்று சாட்டர்ஜி கூறுகிறார்.
ஆனால், தலைநகரில் மீனவர்கள் இருக்கிறார்கள் என்கின்ற எண்ணமே அசாதாரணமானது என்பதால் டெல்லியின் ஓடக்கூடிய நதியின் நீளத்தில் எத்தனை மீனவர்கள் இருந்தார்கள், எத்தனை மீனவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான பதிவுகள், வெளியிடப்பட்ட தரவுகள் என எதுவும் இல்லை. மேலும் சாகினியைப் போன்ற புலம்பெயர்ந்து குடியேறியவர்கள் பலர் இந்த எண்ணிக்கையினை மேலும் கடுமையாக்குகின்றனர். எஞ்சியிருக்கும் மீனவர்கள் ஒப்புக் கொள்வது என்னவென்றால், அவர்களது எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதைத் தான். சுதந்திரத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கானதாக இருந்த எண்ணிக்கை இப்போது நூற்றுக்கும் குறைவான முழு நேர மீனவர்களே இருக்கின்றனர் என்று, நீடூழி வாழ் யமுனை இயக்கத்தினை வழிநடத்தும் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான மனோஜ் மிஸ்ரா கூறுகிறார்.
"யமுனையில் மீனவர்கள் இல்லாதது நதி இறந்துவிட்டது அல்லது அது இறந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். அவர்களே நிலைமை என்ன என்பதை குறிக்கும் அடையாளங்கள்", என்று ஆராய்ச்சிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த சித்தார்த் சக்கரவர்த்தி கூறுகிறார். என்ன நடந்து கொண்டிருக்கிறது, மனித நடவடிக்கைகளால் உந்தப்பட்டு ஏற்பட்டிருக்கும் பருவநிலை நெருக்கடிக்கு "மேலும் தூண்டுதலாக இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு புத்துயிர் அளிக்கும் பல்லுயிர் பெருக்கம் எதுவும் நடைபெறவில்லை என்பதே அதன் பொருள்", என்று கூறுகிறார் சக்கரவர்த்தி. அது மேலும் வாழ்க்கை சுழற்சியையே பாதிக்கிறது, உலகில் வெளியிடப்படும் கரிமத்தில் 40% உலக அளவில் கடல்களால் உறிஞ்சப்படுகிறது என்றும் கூறினார்.
*****
தில்லியின் 40% கழிவு நீருக்கு இணைப்புகள் இல்லாததால், கழிவுநீர் தொட்டி மற்றும் பிற மூலங்களிலிருந்து எண்ணற்ற டன் கழிவுகள் மற்றும் கழிவு பொருட்கள் தண்ணீரில் கலக்கின்றன. 1,797 (அங்கீகரிக்கப்படாத) காலனிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான காலனிகளில் மட்டுமே கழிவுநீர் குழாய்களை கொண்டிருக்கின்றன என்றாலும், "51,837 தொழிற்சாலைகள் சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வருகின்றன, அவற்றின் கழிவுகள் நேரடியாக வடிகால்களிலும், இறுதியில் நதியிலும் கலக்கின்றன", என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிடுகிறது.
தற்போதைய நெருக்கடியை, ஒரு நதியின் மரணத்தின் பின்னணியில் இருக்கும், மனிதச் செயல்பாட்டின் அளவு, முறை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுடன் அதற்கு இருக்கும் தொடர்புகளின் அடிப்படையிலும் நாம் காணலாம்.
அவர்களின் மீன்பிடிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், மீனவர்களின் வருவாயும் மிகவும் கடுமையாக குறைந்துள்ளது. முன்னரெல்லாம் மீன்பிடித்தல் மட்டுமே அவர்களுக்கு போதுமான பணத்தை ஈட்டித் தந்தது. ஒரு நல்ல மாதத்தில், திறமையான மீனவர்கள், சில நேரங்களில் மாதத்திற்கு 50,000 ரூபாய் வரை கூட சம்பாதித்தனர்.
ராம் படித்துறையில் வசிக்கும் ஆனந்த் சாகினிக்கு இப்போது 42 வயதாகிறது, அவர் பீகாரின் மோட்டிஹாரி மாவட்டத்தில் இருந்து தில்லிக்கு ஒரு இளைஞராக வந்தார். "எனது வருவாய் கடந்த 20 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துவிட்டது. இப்போது ஒரு நாளுக்கு நூறு - இருநூறு ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறேன். எனது குடும்பத்தினரை ஆதரிக்க நான் பிற வழிகளை காண வேண்டியிருக்கிறது, மீன்பிடித்தொழில் இப்போதெல்லாம் ஒரு நிலையான தொழில் அல்ல", என்று அவர் கடுமையாகக் கூறுகிறார்.
மல்லாவின் சுமார் 30 - 40 குடும்பங்கள் அல்லது மீனவர்கள் மற்றும் படகு சவாரி சமூகங்கள் யமுனையின் குறைந்த மாசுபட்ட இடமான ராம் படித்துறையில் வசிக்கின்றனர். சில மீன்களை தங்களது நுகர்வுக்காக வைத்துக் கொண்டு மீதம் உள்ளவற்றை அருகிலுள்ள சந்தைகளான சோனியா விஹார், கோபால்பூர் மற்றும் ஹனுமன் சவுக் ஆகியவற்றில் ரகத்திற்கு ஏற்றவாறு கிலோ ஒன்றுக்கு 50 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
*****
மழை மற்றும் வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும் பருவநிலை நெருக்கடி, யமுனையின் பிரச்சனைக்கு மேலும் பல அடுக்குகளை சேர்க்கிறது என்று திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த சுற்றுச்சூழல் ஆலோசகரான டாக்டர் ராதா கோபாலன் கூறுகிறார். நீரின் அளவு மற்றும் நீரின் தரத்தில் சமரசம் செய்து கொள்வது மற்றும் பருவநிலை மாற்றத்தின் நிச்சயமற்ற தன்மை ஆகியவை சிக்கலை மேலும் அதிகப்படுத்துகிறது, இது மீன்பிடிப்பில் தரம் மற்றும் அளவு ஆகியவற்றில் பெரும் பாதிப்புக்கு வழிவகுக்கிறது.
"நீர் மாசுபாட்டால் தான் மீன்கள் இறக்கின்றன", என்று 35 வயதாகும் சுனிதா தேவி கூறுகிறார்; அவரது கணவர் மீனவரான நரேஷ் சாகினி தினக்கூலியாக வேலை தேடுகிறார். "இப்போதெல்லாம் மக்கள் எல்லா வகையான குப்பைகளையும் குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகளை ஆற்றில் எறிந்து விட்டு செல்கின்றனர்". மதப் பண்டிகைகளின் போது பூரி, ஜிலேபி மற்றும் லட்டு போன்ற சமைத்த பொருட்களைக் கூட மக்கள் கொட்டுகின்றனர் இது ஆற்றில் மேலும் அழுகளைச் சேர்க்கிறது.
2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கடந்த நூறு ஆண்டுகளில் முதல் முறையாக துர்கா பூஜையின் போது சிலையை நீரில் கரைப்பது தடைசெய்யப்பட்டது, இதுபோன்ற நடவடிக்கைகள் ஆற்றை பெரிய அளவில் பாதிக்கின்றன என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கை குறிப்பிட்டதன் அடிப்படையில், தடைசெய்யப்பட்டது.
16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் முகலாயர்கள் தில்லியை தங்கள் ராஜிய நகரமாக உருவாக்கும் போது, பழைய பழமொழி கூறுவது போல நதி, மேகங்கள் மற்றும் பேரரசரைக் கொண்ட ஒரு நகரமாக கட்டியெழுப்பினர். ஒரு கலை வடிவமாகக் கருதப்பட்ட அவர்களின் நீர் அமைப்பு இன்று ஒரு வரலாற்று எச்சமாக இருக்கின்றது. 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தண்ணீரை வெறும் வளமாக மட்டுமே கருதினர், மேலும் யமுனையில் இருந்து விலகிச் செல்வதற்காக அவர்கள் புது தில்லியைக் கூட கட்டினர் காலப்போக்கில், அங்கு நகரமயமாதல் மற்றும் மக்கள் தொகை வெடிப்பு ஏற்பட்டது.
தில்லியின் சுற்றுச்சூழலின் விவரிப்புகள் (கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது) என்ற புத்தகத்தில், 1940-களில் மற்றும் 1970 களுக்கு இடையில், தில்லியின் ஒக்லா பகுதியில் மீன் பிடித்தல், படகு சவாரி, நீச்சல் மற்றும் சுற்றுலா செல்வது ஆகியவை வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தன என்பதை பழைய காலத்தவர்கள் நினைவு கூர்கின்றனர். ஒக்லா தடுப்பணை அருகே கங்கை ஓங்கில்களைக் கூட காண முடிந்தது, அதே நேரத்தில் ஆற்றில் தண்ணீர் குறைவாக ஓடும் பொழுது ஆற்றலுள்ள தீவுகளில் ஆமைகள் சூரியக்குளியல் செய்வதை நம்மால் காணமுடியும்.
ஆக்ராவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பிரிஜ் காண்டேல்வால், "யமுனா மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டது", என்று கூறுகிறார். உத்தர்காண்ட் உயர்நீதிமன்றம் 2017ஆம் ஆண்டில் கங்கை மற்றும் யமுனை நதிகளை வாழும் உயிர்களாக அறிவித்தவுடன், காண்டேல்வால் தனது நகரத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மீது 'கொலை முயற்சி' வழக்குகளை தாக்கல் செய்ய முயன்றார். அவரது குற்றச்சாட்டு: அவர்கள் மெதுவாக கொல்கின்ற விஷத்தால் யமுனாவை கொல்ல முயற்சிக்கின்றனர் என்பதே.
இதற்கிடையில் நாடு முழுவதும் உள்ள நீர் வழிகளை துறைமுகங்களுடன் இணைக்கும் சாகர்மாலா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தப் போகிறது. ஆனால், "பெரிய சரக்குகள் உள்நாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டால் அது மீண்டும் ஆறுகளைத் தான் மாசுபடுத்தும்", என்று NPSSFWI இன் சாட்டர்ஜி எச்சரிக்கிறார்.
*****
ஹல்தார் அவரது குடும்பத்தில் உள்ள கடைசி தலைமுறை மீனவர். அவர் மேற்கு வங்கத்தின் மால்டாவைச் சேர்ந்தவர், ராம் படித்துறையில் மாதத்திற்கு 15 முதல் 20 நாட்கள் வரை தங்குகிறார் மீதி நாட்களில் நொய்டாவில் உள்ள அவரது 25 மற்றும் 27 வயதாகும் இரண்டு மகன்களுடன் வசிக்கிறார். ஒருவர் தொலைபேசிகளை பழுது பார்க்கும் பணி செய்கிறார் மற்றொருவர் மோமோஸ் மற்றும் எக் ரோல் விற்பவராக இருக்கிறார். "என்னுடைய தொழில் காலாவதியானது என்று என்னுடைய குழந்தைகள் கூறுகின்றனர். எனது தம்பியும் ஒரு மீனவரே. இது ஒரு பாரம்பரியம், என்ன நடந்தாலும், இத்தொழில் மட்டுமே எங்களுக்கு தெரியும். வேறு எப்படி எங்களால் பிழைப்பு நடத்த முடியும் என்று எனக்கு தெரியவில்லை..." என்று கூறுகிறார்.
"இப்போது மீன்பிடி ஆதாரமும் குறைந்து விட்டது, அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேட்கிறார் டாக்டர் கோபாலன். முக்கியமாக, மீன்கள் தான் அவர்களுக்கான ஊட்டச்சத்தின் ஆதாரமாகும். பொருளாதார அம்சத்துடன் பிணைக்கப்பட்டுள்ள சமூக - சுற்றுச்சூழல் இடத்தில் நாம் அவர்களை வைக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தில், இவையெல்லாம் தனித்தனி பகுதிகளாக பிரிந்து இருக்க முடியாது, நமக்கு வருமானமும் பல வழிகளில் இருந்து வரவேண்டும் மேலும் சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் பன்முகத் தன்மை தேவை", என்று கூறுகிறார்.
இதற்கிடையில், பருவநிலை நெருக்கடி குறித்து அரசாங்கம் உலகளாவிய கட்டமைப்பில் பேசுகிறது, அங்கு மீன்வளர்ப்பு மற்றும் மீன்கள் ஏற்றுமதி கொள்கைக்கு அது உதவுகிறது, என்று ஆராய்ச்சிக் குழுவை சேர்ந்த சக்கரவர்த்தி கூறுகிறார்.
2017 - 18 ஆம் ஆண்டில் இந்தியா 4.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள இறால்களை ஏற்றுமதி செய்தது. அவை பெரும்பாலும் மெக்சிகன் கடலில் கிடைக்கக்கூடிய பசிபிக் வெள்ளை இறால்கள், இது ஒரு வெளிநாட்டு வகை மீன் இங்கு வளர்க்கப்பட்டது என்று சக்ரவர்த்தி கூறுகிறார். இந்தியா இதை மட்டுமே வளர்கிறது, ஏனெனில் "மெக்சிகன் இறாலுக்கு தான் அமெரிக்காவில் பெரும் தேவை உள்ளது".நமது இறால் ஏற்றுமதியில் வெறும் 10 சதவிகிதம் தான் கரும்புலி இறால் வகை ஏற்றுமதி செய்யப்படுகிறது,இது தான் இந்திய நீரில் அதிகமாக கிடைக்கக்கூடியது. இந்தியா ஒரு பல்லுயிர் இழப்பை ஏற்றுக்கொள்கிறது, மேலும் அது வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. கொள்கைகள் ஏற்றுமதி சார்ந்ததாக மட்டுமே இருக்கப்போகிறது என்றால், அதன் விலை உயர்ந்து விடும் மேலும் உள்ளூர் ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்றதாக இருக்காது", என்று கூறுகிறார்.
இருண்ட எதிர்காலத்தை எதிர்நோக்கியபடி ஹல்தார் தனது படகினை பார்த்து பெருமை கொள்கிறார். ஒரு மீன்பிடி படகு 10,000 ரூபாய் மற்றும் ஒரு வலை 3,000த்தில் இருந்து 5,000 ரூபாய் பெறும், ஆனால் அவர் ஃபோம், மண் மற்றும் கயிறை பயன்படுத்தி அவர்களே செய்த மீன்பிடி வலையை நமக்கு காட்டுகிறார். ஒரு வலை நாளொன்றுக்கு 50 முதல் 100 ரூபாய் பெறுமானமுள்ள மீன் பிடிக்க அவருக்கு உதவுகிறது.
45 வயதாகும் ராம் பர்வேஷ் இப்போதெல்லாம் மூங்கில் மற்றும் நூலைக் கொண்டு செய்யப்பட்ட கூண்டு போன்ற கட்டமைப்பை பயன்படுத்துகிறார் இதன் மூலம் 1 - 2 கிலோ கிராம் மீன்கள் வரை பிடிக்க முடியும். "நாங்களே இதை எங்களது கிராமத்தில் செய்ய கற்றுக் கொண்டோம். தூண்டிலில் கோதுமை இருபுறமும் வைக்கப்படும் மேலும் அந்தக் கூடை தண்ணீரில் தாழ்வாக வைக்கப்படுகிறது. சில மணி நேரத்தில், சிறிய வகை மீன்களான கெண்டை மீன்கள் பிடிபடுகின்றன", என்று அவர் விளக்குகிறார். கெண்டை இங்கு மிகவும் பொதுவாக கிடைக்கக்கூடிய மீன் வகை என்று உள்ளூர் ஆர்வலரான மற்றும் தெற்காசிய அணைகள் ஆறுகள் மற்றும் மக்கள் வலையமைப்பில் பணிபுரியும் பீம் சிங் ராவத் கூறுகிறார். ஒவரிக் கெண்டையும், காக்காச்சியும் குறைவாகவே கிடைக்கின்றன, அதேவேளையில், கட்டிக்காளை மற்றும் வெள்ளை கெண்டை ஆகியவை கிட்டத்தட்ட அழிந்துவிட்டன. கெழுத்தி மட்டுமே மாசுபட்ட இடத்தில் காணப்படுகிறது", என்று கூறுகிறார்.
"நாங்களே யமுனையின் பாதுகாவலர்கள்", என்று சிரித்தபடி கூறுகிறார் 75 வயதாகும் அருண் சாகினி, நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் இருந்து, தனது குடும்பத்தை விட்டுவிட்டு தில்லிக்கு வந்திருக்கிறார். 1980கள் மற்றும் 90களில் கெழுத்தி, சிங்ரி, சவுல் மற்றும் வெள்ளை கெண்டை போன்ற வகைகள் உட்பட நாளொன்றுக்கு 50 கிலோ கிராம் அளவிற்கு மீன்களைப் பெற முடிந்தது. ஆனால் இப்போது ஒரு நாளில் 10 கிலோ அதிகபட்சம் 20 கிலோ மீனையே பெற முடிகிறது, என்று கூறுகிறார்.
அதேசமயம், யமுனையின் மைல்கல் பாலம் - குதுப்மினாரை விட இரு மடங்கு உயரம் கொண்டது, ராம் படித்துறையில் இருந்து பார்த்தால் தெரியக் கூடியது - அதன் மதிப்பு சுமார் 1,518 கோடி. 1993 முதல் யமுனாவை 'சுத்தம் செய்வதற்கு' செலவழித்த தொகை 1,514 கோடி, ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை.
"அதிகாரிகளின் தோல்வி மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது, மேலும் ஆற்றையும் அச்சுறுத்துகிறது, கங்கை நதியையும் பாதிக்கிறது" என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
கொள்கை மட்டத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால், யமுனையின் செயல்திட்டம் (1993 ஆம் ஆண்டில் வரப்பட்டது) நதியை ஒரு உயிராக அல்லது சுற்றுச்சூழல் அமைப்பாகவே கருதாமல், ஒரு தொழில்நுட்ப கண்ணோட்டத்தில் மட்டுமே காண்கிறது என்று டாக்டர் கோபாலன் கூறுகிறார். "ஒரு நதி என்பது அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் செயல்பாடே. தில்லி யமுனையின் நீர்ப்பிடிப்பு பகுதி. "நீர்பிடிப்பை சுத்தம் செய்யாமல் உங்களால் நதியை சுத்தம் செய்ய முடியாது", என்று கூறுகிறார்.
எங்களது சுரங்கத்தில் உள்ள மஞ்சள் குருவிகள் தான் மீனவர்கள் என்று சுட்டிக் காண்பிக்கிறார் கடல் பாதுகாப்பு நிபுணரான திவ்யா கர்னாட். "கனரக உலோகங்கள் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன என்பதை நம்மால் எப்படி சிந்திக்காமல் இருக்க முடியும்? மிகவும் மாசுபட்ட ஆறுகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து நிலத்தடி நீரை எடுப்பது நமது மன ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பார்க்காமல் இருக்க முடியுமா? விளிம்பில் இருக்கும் மீனவர்கள் இந்த இணைப்புகளை காண்கிறார்கள், அவர்களே உடனடியான தாக்கங்களை எதிர்கொள்கின்றனர்", என்று கூறுகிறார்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தாமதமாக தனது வலையை செலுத்த தயாரான ஹல்தார் புன்னகைத்து, "இதுவே என்னிடம் மீதமிருக்கும் கடைசி நிம்மதி", என்று கூறினர். சூரிய உதயத்தின் போது மீன்களைப் பிடிப்பதற்கு இரவு ஒன்பது மணி அளவிலேயே அவர்கள் வலையிடுவது மிகச் சிறந்தது என்று அவர் கூறுகிறார். அந்த வழியில், "இறந்த மீன்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்", என்கிறார்.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த தகவல் அறிக்கை, சாதாரன மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? [email protected] என்ற முகவரிக்கு CCயுடன் [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
தமிழில்: சோனியா போஸ்