தனது பிரச்னைகளை அமைதியாக பட்டியலிடுகிறார் எஸ். முத்துலட்சுமி. கரகாட்டம் எனும் பாரம்பரிய கலை வடிவத்தை வாழ்வாதாரமாகக் கொள்வதற்கு திறமையும், இரவு முழுவதும் ஆடுவதற்கு உடலில் தெம்பும் வேண்டும் என்கிறார். இருப்பினும் இக்கலைஞர்கள் இழிவாக நடத்தப்படுவதாலும், களங்கப்படுத்தப்படுவதாலும் சமூகத்தில் பாதுகாப்பின்றி உணர்கின்றனர். இந்த 44 வயது கலைஞர் இதுபோன்ற அனைத்து சிக்கல்களையும் தாண்டி வந்தவர்.
பத்தாண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் ஒற்றை பெண்மணியாக தனது வாழ்வாதாரத்தின் அனைத்து செலவுகளையும் சமாளித்து தனது வருமானத்தில் இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இப்போது கோவிட்-19 அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் குறித்து பேசுகையில் அவரது குரலில் கோபமும், வலியும் வெளிப்படுகிறது. “பாழாப்போன கரோனா” என்று நோயை அவர் திட்டுகிறார். “பொது நிகழ்ச்சிகள் இல்லாததால் வருவாயின்றி இருக்கிறோம். எனது மகள்களிடம் பணம் பெறும் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.”
“கடந்தாண்டு ரூ.2000 அளிப்பதாக அரசு உறுதி அளித்தது,” என்கிறார் முத்துபேச்சி. “ஆனால் கையில் ரூ.1000 தான் கிடைத்தது. இந்தாண்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.” 2020 ஏப்ரல்-மே மாதங்களில் மாநில நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கலைஞர்களுக்கு சிறப்பு தொகையாக ரூ.1000 இருமுறை வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
பெருந்தொற்று தொடங்கியது முதல் மதுரை மாவட்டத்தில் மட்டுமே 1,200 கலைஞர்கள் வேலையிழந்து சிரமப்பட்டு வருகின்றனர் என்கிறார் நாட்டுப்புற கலைகளின் ஆசானும், புகழ்மிக்க கலைஞருமான மதுரை கோவிந்தராஜ். அவனியாபுரம் நகரின் அம்பேத்கர் நகர் பகுதியில் கிட்டதட்ட 120 கரகாட்ட கலைஞர்கள் வசிக்கும் இடத்தில் மே மாதம் முத்துபேச்சியையும், மற்றவர்களையும் நான் சந்தித்தேன்.
கிராமப்புற நடனக் கலையான கரகாட்டம் சமய பண்டிகைகள், கலாச்சார நிகழ்வுகள், திருமணங்கள், இறுதி சடங்குகள் போன்ற சமூக நிகழ்ச்சிகளின் போது நிகழ்த்தப்படுகின்றன. ஆதி திராவிட வகுப்பின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இக்கலைஞர்கள். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு இக்கலையை சார்ந்துள்ளனர்.
கரகாட்டம் எனும் அலங்கரிக்கப்பட்ட குடத்தை தலையில் சமநிலைப்படுத்தியபடி ஆண்கள், பெண்கள் குழுவாக கரகம் ஆடுவார்கள். அவர்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலும் இரவு முழுவதும் ஆடுவார்கள்.













