“பாருங்கள்! என் மோட்டார் மண்ணுக்குள் புதைந்திருக்கிறது,” என்கிறார் வெள்ளத்தால் மண்ணுக்குள் புதைந்திருக்கும் பம்ப்பை தோண்ட முயற்சிக்கும் தேவேந்திர ராவத். தேவேந்திரா, மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்திலுள்ள சுண்ட் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆவார். “வெள்ளம் என் நிலத்தை அரித்துவிட்டது. மூன்று மோட்டார்களின் பகுதிகள் தரையில் புதைந்து போயிருக்கின்றன. ஒரு கிணறு கூட உடைந்துவிட்டது. நான் என்ன செய்வது?” எனக் கேட்கிறார் 48 வயது நிரம்பிய அவர்.
நர்வார் தாலுகாவில் இருக்கும் சுண்ட் கிராமம் சிந்து நதியின் இரு கிளை ஆறுகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. ஆகஸ்ட் 2021-ல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, 635 பேர் (கணக்கெடுப்பு 2011) வசிக்கும் அந்த கிராமத்தில் பரவலாக பெரும் சேதம் ஏற்பட்டது. அத்தகைய ஒரு வெள்ளம் அதற்கு முன் எதுவும் வந்ததாக நினைவில்லை என்கிறார் தேவேந்திரா. “வெள்ள நீர் கிட்டத்தட்ட 30 பிகா (தோராயமாக 18 ஏக்கர்) நிலத்தில் போட்டிருந்த நெற்பயிரை அழித்துவிட்டது. என் குடும்பம் வெள்ள அரிப்பால் நிரந்தரமாக ஆறு பிகா (கிட்டத்தட்ட 3.7 ஏக்கர்) நிலத்தை இழந்துவிட்டது,” என்கிறார் அவர்.
காலி பகதியிலுள்ள கிராமம் வெள்ளநீரால் சூழப்பட்டு ஒரு தீவைப் போல் காட்சியளிக்கிறது. கனமழை பெய்தால், மறுபக்கத்துக்கு செல்லும் கிராமவாசிகள் ஆற்றுக்குள் நடந்தோ நீந்தியோ செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
“வெள்ளம் வந்தபோது எங்களின் கிராமம் மூன்று நாட்கள் மூழ்கியிருந்தது,” என்கிறார் தேவேந்திரா. அரசாங்க படகுகள் வந்து, ஊரிலேயே இருக்க விரும்பிய 10லிருந்து 12 பேரை தவிர்த்து மற்ற அனைவரையும் காப்பாற்றியது. மீட்கப்பட்ட கிராமவாசிகள் அருகாமை சந்தையிலிருந்த முகாமிலும் பிற ஊர்களில் இருந்த உறவினர் வீடுகளிலும் தங்கினர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீண்டும் மின்சாரம் வர ஒரு மாதம் ஆனது என நினைவுகூருகிறார் தேவேந்திரா.










