”தங்குமிடத்துக்கு உள்ளேயே இருக்கும்படி போலீசார் சொன்னார்கள். மளிகைப்பொருளோ வேறு அத்தியாவசியப் பொருளோ வாங்க படியைவிட்டு இறங்கினால் போதும் உடனே போலீஸ் வந்து எங்களை அறைகளுக்குள் போகும்படி அடித்துத் துரத்துவார்கள். சிறுநீர் கழிப்பதற்காக இரவில் வெளியே வந்தால்கூட அவர்கள் எங்களைத் தாக்குவதற்காக அங்கு தயாராய் இருப்பார்கள்.”- நாடளாவிய கோவிட் பொதுமுடக்கத்தின் தொடக்க சில நாள்களில் மும்பையில் நடந்ததை நினைவுகூர்கிறார், தோலா இராம்.
முடக்கம் பற்றி கேள்விப்பட்டு, மலாட்டில் உள்ள வேலைக் களத்திலிருந்து, தோலா இராமும் அவரின் சக பணியாளர்களும் போரிவாலியில் உள்ள தங்கும் அறைகளுக்கு திரும்பிவந்தனர். ஒடுக்கமான அந்த அறைக்குள் அவர்கள் ஆறு நாள்களைக் கழித்தனர். சூழல் மாறிவிடும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. மொத்தம் 15 பேர் தலா ஆயிரம் ரூபாய் மாத வாடகைக்கு அந்த அறையை எடுத்திருந்தனர். விரைவில் அவர்களின் உணவுப்பொருள்கள் தீர்ந்துவிட்டன. எனவே, 37 வயது தோலா இராமும் மற்றவர்களும் இராஜஸ்தானில் உள்ள அவரவர் ஊர்களுக்குத் திரும்ப முடிவுசெய்தனர்.
”மும்பையில் வேலை இல்லை. ஹோலி பண்டிகைக்கு ஊருக்குப் போய்விட்டு திரும்பிய பிறகு பெரிதாக சேமிப்பு எதுவும் இல்லை. மேற்கொண்டு நகரத்தில் தங்கியிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என எங்களிடம் தொலைபேசியில் சொன்னார், தோலா இராம். நகரைவிட்டுக் கிளம்பும் முன்னரே அவருடைய 5 வயது மகனுக்கு நலக்குறைவு என்ற தகவல் வந்திருந்தது. அவருடைய இணையர், சுந்தரும் மற்ற உறவினர்களும் குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். அதன்பிறகு மரபு வைத்தியரிடம் கூட்டிச்சென்றும் அவனுக்கு உடல்நலம் தேறவில்லை.
இராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள பரோலியாவில், மார்ச் 9 - 10 ஹோலி கொண்டாடிவிட்டு சில நாள்களுக்குப் பிறகு மும்பைக்குத் திரும்பியிருந்தார், தோலா இராம். பிழைப்புக்காக சலும்பார் வட்டத்தில் உள்ள தன் ஊரைவிட்டு 8 - 9 மாத காலம் அவர் வெளியில்தான் இருப்பார். கடந்த 15 ஆண்டுகளாக இராஜஸ்தானின் நகரங்களிலும் குஜராத், கோவா, மகாராஷ்டிரத்திலும் கட்டுமானக் களத்தில் கொத்தனாராக வேலைசெய்துவருகிறார். அவர் இரண்டு ஆண்டுகளாகத்தான் மும்பைக்கு வந்துபோகிறார். தோலா இராமின் புதிய வேலை, பளிங்குக் கற்களைப் பளபளப்பாக்குவது; அதன் மூலம் மாதத்துக்கு 12, 000 ரூபாய் சம்பாதிக்கிறார். அதில், 7 - 8 ஆயிரம் ரூபாயை வீட்டுக்கு அனுப்புவார். ஆண்டுக்கு இரண்டு முறை அவர் தன் குடும்பத்தினரைப் பார்க்கச் செல்வார். ஹோலிக்கு ஒரு முறை, அடுத்து அக்டோபர்-நவம்பரில். அந்த முறை 15 நாள்கள் முதல் ஒரு மாதம்வரை தங்கிவிடுவார்.
மும்பையிலிருந்து அண்மையில் பரோலியாவுக்குச் செல்வது கையில் ஒன்றுமில்லை என்பதுடன் கடினமான ஒன்றாகவும் ஆனது. முடக்கம் தொடங்கி ஆறு நாள்களுக்குப் பிறகு, மார்ச் 31 அன்று அவரும் மற்றவர்களும் நகரைவிட்டு புறப்பட்டனர். ” இராஜஸ்தானில் உள்ள எங்கள் ஊருக்குச் செல்ல மொத்தம் 19 பேர் சேர்ந்து 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒரு டாக்சியைப் பிடித்தோம். ஆனாலும் மகாராஷ்டிர எல்லையில் வைத்து போலீசு திருப்பி அனுப்பிவிட்டதுடன் மும்பையில் பிடித்துவைத்துவிட்டனர்.” என்கிறார் தோலா.






