”வீட்டு வாசலுக்கு வந்துவிடக்கூடாது என ஊர்க்காரர்கள் எங்களைப் பார்த்து கத்துகிறார்கள். ஏதோ பீமாரி (நோய்) வந்துவிட்டதெனச் சொல்கிறார்கள். அந்த பீமாரி என்பது என்ன என்று யாரும் எங்களிடம் சொல்லமாட்டேன் என்கிறார்கள். எனக்கு எந்த நோயும் இல்லை. ஏன் அவர்கள் என்னைத் தடுக்கிறார்கள்?”
பேன்ஸ் பர்தி பழங்குடியினரான கீத்தாபாய் காலேவுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் கடைசியாக உணவு கிடைத்தது. ஏனென்றால் 78 வயதான அவர், சாதாரணமான காலத்திலேயே பிச்சை எடுத்துதான் சாப்பிட்டு வந்தார். முடக்கம் காரணமாக அவரின் உணவு ஆதாரம் இல்லையென்று ஆகிவிட்டது. கோவிட்-19 என்றால் என்னவென்று அவருக்கு சிறிதுகூடத் தெரியவில்லை. ஆனால், அவரும் மற்ற பர்திகளும் அன்றாடம் காய்ந்த வயிற்றுடன் சரிவை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர்.
மார்ச் 25 அன்று சாப்பிட்ட பழைய சோள ரொட்டிதான், கடைசியாக அவருக்குக் கிடைத்த உணவு." எனக்குத் தெரியாத சில சிறுவர்கள், இட்வாரில் (மார்ச் 22, ஞாயிறு)வந்து எனக்கு நான்கு சோள ரொட்டிகளைக் கொடுத்தார்கள். அவற்றை நான்கு நாள்கள் வைத்திருந்து சாப்பிட்டேன். அன்றிலிருந்து அவர் பசியை அடக்கிக்கொண்டு இருக்கிறார். "அதன் பிறகு யாரும் இங்கு வரவில்லை. ஊரார் என்னை உள்ளேவிட மறுக்கிறார்கள்." என்கிறார் கீத்தாபாய்.
மகாராஷ்டிரத்தின் புனே மாவட்டம், சிரூரில் உள்ள முதன்மைச் சாலைக்கு அருகில் ஒரு தகரக் கொட்டகையில் தனியாக வசித்துவருகிறார், கீத்தாபாய். இங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள சவான்வாடி கிராமத்துக்குப் போய் இரந்து சாப்பிடுகிறார். ” மக்கள் கொடுக்கும் மீத்த உணவு எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் வாங்கி சாப்பிடுவோம். அரசாங்கமே இலவசமாக உணவு தானியம் வழங்குவதாக சிலர் சொல்கிறார்கள். பங்கீட்டு ரேசன் அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் என்கிறார்கள்; என்னிடம் அட்டை இல்லை.” என ஆற்றாமையையும் வெளிப்படுத்துகிறார், கீத்தாபாய்.
பர்தி பழங்குடியினரிலேயே பேன்ஸ் பர்தி பட்டியல் பழங்குடியினரின் வாழ்நிலைதான் வறிய, பின்தங்கிய நிலையில் மிக மோசமாக இருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் காட்டுமிராண்டித்தனமான காலனியகால சட்டத்தையும் அதன் சுமையையும் பர்திகள் இன்னும் தாங்கிக்கொண்டு இருக்கின்றனர். காலனிய ஆதிக்கத்துக்கு சவாலாகவும் போர்க்குணத்தோடும் இருந்த பல்வேறு பழங்குடி இனத்தவரையும் அலைகுடி ஆயர் குழுக்களையும் தண்டிக்கும் நோக்கில் பிரித்தானிய அரசானது 1871-ல் குற்றப் பழங்குடியினர் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, பிறப்பின் அடிப்படையில் 200 சமூகங்கள் குற்றசமூகங்களாக ஆக்கப்பட்டன. இதன் விளைவாக அந்த சமூகங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன; மற்ற சமூகங்களிடமிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தவும் செய்தது.
சுதந்திர இந்தியாவில் 1952-ல் இந்த சட்டம் இரத்துசெய்யப்பட்டது. குற்றப்பழங்குடிப் பட்டியலில் இருந்த சமூகங்கள், சீர்மரபினர் என அறிவிக்கப்பட்டனர். ஆனாலும் மற்ற சமூகங்கள் இவர்கள் மீது தொடரும் பழைய களங்கம், தவறான எண்ணம், துயர் ஆகியவை உறுதிபடத் தொடர்கின்றன. இந்த சமூகங்களில் இன்னும் பலவற்றைச் சேர்ந்தவர்களுக்கு ஊரின் முதன்மைப் பகுதிக்குள் நுழைவதும் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பதும் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. அந்த ஊர்களிலிருந்து இரண்டுமூன்று கிமீ தொலைவிலேயே இவர்கள் வசிக்கின்றனர். இவர்களால் வேலை பெறமுடியாது; கல்வி நிலைமையும் படுமோசமாக இருக்கிறது. நிறைய பேர் சிறு வழக்குகளில் சிறைப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் கணிசமானவர்களுக்கு உயிர்வாழ்வதற்கு இரந்து உண்பதைத் தவிர வேறு வழி இல்லை.





