சஞ்சா கிராமத்தின் தொடக்கப்பள்ளியில், போன வருடம் அக்டோபர் கடைசியில் இரண்டு தட்டையான தொலைக்காட்சிப் பெட்டிகள் இரண்டு வகுப்பறைகளில் பொருத்தப்பட்டன. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய கருவிகளாக அவை பஞ்சாயத்தால் தரப்பட்டன.
ஆனால், கடந்த மார்ச் 2017ஆம் வருடம் முதல் சுவர்களில் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் இரண்டு வருடங்களாக தொங்கிக்கொண்டேயிருக்கின்றன, தொலைக்காட்சி திரை வெற்றாக உள்ளது. அவற்றை இயக்கக்கூட முடியவில்லை. ஏனென்றால் பள்ளியில் மின்சாரம் கிடையாது.
ஓஸ்மனாபாத் மாவட்டத்தின் பள்ளி முதல்வர் ஷீலா குல்கர்னிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. “அரசாங்கம் தரும் நிதிகள் போதவில்லை. இரண்டு வகுப்புகளில் 40 மாணவர்கள் படிக்கும் எங்களில் பள்ளிக்கு பத்தாயிரம் ரூபாய் ஒரு வருடத்துக்கு பள்ளி பராமரிப்புக்கு என்று தரப்படுகிறது. அதில்தான் பள்ளிக்குத் தேவையான பொருள்கள் வாங்க வேண்டும். மின்சாரத்தை நாங்கள் மீண்டும் கிடைக்கச் செய்வதற்கு 18 ஆயிரம் ரூபாய் வேண்டும். ”
பள்ளிக்கு மின்சாரம் இல்லாமல் போனது என்பது 2012 க்குப் பிறகுதான். இனிமேல் வீடுகளுக்கான மின்சாரக்கட்டணம் மாவட்டப்பள்ளிகளுக்கு கிடையாது. கடைகளுக்கான வணிகக் கட்டணமே வசூலிக்கப்படும் என்று மின்சாரக்கட்டணத்தை மாநில அரசாங்கம் மாற்றியது. அதற்குப் பிறகுதான் யூனிட்டுக்கு 3.36 ரூபாய் என்பது 5.86 என்று உயர்ந்தது. அதோடு பள்ளியில் மின்சாரம் இல்லாமல் போனது.
2015ஆம் வருடத்துக்குள் ஓஸ்மான் மாவட்டத்தில் உள்ள 1094 பள்ளிகளில் 822க்கு மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்கிறார் ஓஸ்மான்பாத் மாவட்ட பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் கோல்தே. 2018 அக்டோபர் இறுதிக்குள் 70 சதவீத பள்ளிகள் மின்சாரம் இல்லாமல் இயங்கின. மின்சாரக் கட்டணப் பாக்கிகள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே போனது.
இந்த மாவட்டத்தில் உள்ள 1092 பள்ளிகளில் 30 சதவீதம் அல்லது 320 பள்ளிகள் சூரிய ஒளி மூலம் தயாராகும் மின்சாரத்தால் இயங்குகின்றன என்கிறார் கண்காணிப்பாளர் ராஜாபாவ் கிரி. இதற்கான பேனல்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளன. மாவட்ட பஞ்சாயத்தின் நிதிகள் கொஞ்சம். மிச்சம் எல்லாம் பொதுமக்களின் நன்கொடைகள்.
மகாராஷ்ட்ரத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளும் இப்படித்தான் மின்கட்டணம் கட்டமுடியாமல் தவிக்கின்றன. அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் உள்ள 2190 பள்ளிகளில் 1617 பள்ளிகளில் மின்சாரம் இல்லை.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சசிகாந்த் ஷிண்டே, 2018 ஜூலை மாதத்தில் சட்டப்பேரவையில் மகாராஷ்டிரத்தில் 13844 பள்ளிகளில் மின்சாரம் இல்லை என்றார். கல்வித் துறையில் பணியாற்றும் செயல்பாட்டாளர்கள் இந்த மதிப்பீடு குறைவானது என்கிறார்கள்.
சட்டப்பேரவையில் இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் வினோத் தாவ்தே, பள்ளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க ஒரு திட்டத்தை உருவாக்குவதாக தெரிவித்தார். ஆனால் அது எதுவும் நடைமுறையில் வந்ததாகத் தெரியவில்லை.
சட்டப்பேரவையில் இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் வினோத் தாவ்தே, பள்ளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க ஒரு திட்டத்தை உருவாக்குவதாக தெரிவித்தார். ஆனால் அது எதுவும் நடைமுறையில் வந்ததாகத் தெரியவில்லை.
கல்விக்கான ஒதுக்கீட்டில் பள்ளிக்கல்விக்கு அரசாங்கம் 2008- 2009 காலகட்டத்தில் ஏறத்தாழ 18சதவீதம். ஆனால், அதுவே 2018- 2019இல் ஏறத்தாழ 12.68 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தத் தரவுகள் பள்ளிக் கல்வி மீதான புறக்கணிப்பு அதிகமாக இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.
மாநில அரசாங்கத்தின் கடந்த ஆறு வருட பட்ஜெட்களில் கல்விக்கான ஒதுக்கீடுகள் எப்படி இருந்தன என்பதை ஆய்வு செய்துள்ளது பட்ஜெட்களை ஆய்வு செய்கிற நிறுவனமான சமார்த்தன்.“ மாநில அரசாங்கத்தின் மொத்த உற்பத்தியில் ஏழு சதவீதம் கல்விக்கான நிதி ஒதுக்கீடாக இருக்கும் என்றும் அதில் 75 சதவீதம் நிதியை பள்ளிக்கல்விக்கு ஒதுக்குவோம்” என்றும் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிற தகவல்கள் வேறு. பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு என்பது 52.46 சதவீதமாக இருந்திருக்கிறது. கல்விக்கான ஒதுக்கீடு என்பது 2007 - 08 காலகட்டம் முதலாக மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
புறக்கணிப்புக்கும் நிதி நெருக்கடிகளுக்கும் விளைவுகள் இருக்கும். 2009 - 10 கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் 11லட்சம் மாணவர்கள் மாவட்டப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் படித்தனர். எட்டாண்டுகளுக்குப் பிறகு 2017- 2018 கல்வியாண்டில் எட்டாம் வகுப்பில் 1லட்சத்து 23ஆயிரத்து 739பேர்தான் படித்தனர். 89சதவீதமான மாணவர்கள் இடையில் நின்றுவிட்டனர் என்பது அதன் அர்த்தம் இது நான் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டு வாங்கிய விவரம். (பார்க்க-
Sometimes, there's no place like school
)
இதற்கிடையில் அமைதியாக இருக்கிற டிவி திரையின் முன்பாக சஞ்சா மாவட்டப் பஞ்சாயத்து பள்ளியில் மாணவர்கள் உட்கார்ந்திருந்தனர். எதிரில் ஆசிரியர் பார்வதி குஜே உட்கார்ந்திருக்கிறார். அவர் கையில் ஒரு கருவி வைத்திருக்கிறார். உள்ளூர் மார்க்கெட்டில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது அது. மொபைல் போனின் திரையில் தெரிவதைப் பெரிதாகக் காட்டும் கருவி அது. மேலே உள்ள மின்விசிறிகள் சுற்றவில்லை. எல்லோரும் வியர்வையில் நனைந்துள்ளார்கள். மாணவர்கள் அந்த மொபைல் திரையில் தெரியும் வீடியோ பாடல் மீது கவனம் செலுத்த முயல்கின்றனர். “ இதை நாங்கள் எங்களின் சொந்தப் பணத்தில் வாங்கியிருக்கிறோம்” என்கிறார் குஜே.
பணம் பற்றாக்குறை என்பதால் மற்ற ஆசிரியர்களும் அவர்களின் சொந்தப் பணத்தை செலவிட்டுள்ளனர். ஒஸ்மான்பாத் நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக கற்றுக்கொள்வது எப்படி என்று பயிற்றுவிப்பதற்காக ஒரு இண்டர்நெட் தனியார் கடைக்கு மாணவிகளை அழைத்துப் போயிருக்கிறார்கள். ஆனால், அதற்காகவே பள்ளிக்கூடத்தில் கட்டப்பட்ட அறை என்பது தூசி படிந்து கிடக்கிறது.
“ கல்வி உதவித் தொகையின் விண்ணப்பங்கள் எல்லாம் தற்போது ஆன்லைனில் கிடைக்கின்றன.” என்கிறார் டபாசம் சுல்தானா, பள்ளின் கணினி அறையில் பத்து கணினிகளும் பிரிண்டர்களும் தூசு படிந்துகிடக்கின்றன. “எங்களுக்கு 2017 ஆகஸ்ட் மாதத்திலிருந்தே மின்சாரத்தை நிறுத்திவிட்டார்கள். பள்ளியில் மின்சாரம் இல்லை என்பதாலேயே நாங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டியதை சொல்லிக்கொடுக்காமல் விடமுடியாது.” என்கிறார் அவர். பக்கத்தில் வீடு கட்டும் பணி நடப்பதால் அங்கிருந்து மின்சாரம் வாங்க முயன்றது. அதுவும்கூட நிறுத்தப்பட்டுவிட்டது.
தலைக்கு மேலே தொங்குகிற மின்விசிறிக்குப் பக்கத்தில் புரொஜெக்டர் கருவியும் வெறுமனே தொங்குகிறது. “இது மாணவரும் ஆசிரியரும் கலந்துரையாடி கற்றுக்கொள்வதற்குப் பயன்படும் என்று நாங்கள் வாங்கினோம்” என்கிறார் ஒஸ்மான்பாத் பள்ளியில் பணிபுரியும் இன்னொரு ஆசிரியர் பசீர் டாம்போலி.
போதுமான நிதி ஒதுக்கப்படாததால் பல பள்ளிகளில் பாதுகாவலர்கள், கிளார்க்குகள், துப்புரவு பணியாளர்கள் கிடையாது என்கிறார் ஒஸ்மான்பாத் பகுதியில் உள்ள 30 பள்ளிகளுக்குப் பொறுப்பாளரான ராஜபாவ் கிரி. வகுப்பறைகளை சுத்தம் செய்கிற பணி உள்பட சில ஆசிரியர்களும் மாணவர்களும் செய்கின்றனர் “அதை பல பெற்றோர்கள் விரும்புவதில்லை” என்கிறார் அவர். “கழிவறைகள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருப்பதில்லை. அவை மிகவும் குறைவாகவும் இருக்கின்றன. பலவற்றில் தண்ணீர் இல்லை.பெண்களுக்கு இது மிகவும் சிரமம். அதுவும் வயதுக்கு வந்த குழந்தைகளுக்கு இது மிகவும் சிரமம்.” என்கிறார்.
ஒஸ்மான்பாத் நகரிலிருந்து 18கிலோ மீட்டர்கள் தள்ளியிருக்கிற யெட்சி கிராமத்தில் அடுத்தடுத்து மூன்று பள்ளிக்கூடங்கள் உள்ளன. அவற்றுக்குப் பொதுவான விளையாட்டுத் திடல் இருக்கிறது. 110 பெண்கள் உள்ளிட்ட 290 மாணவர்கள் படிக்கிற பள்ளியில் இங்கே வெறும் மூன்று கழிவறைகள்தான் இருக்கின்றன. “அவற்றுக்கும் கூட தண்ணீர் இல்லை” என்கிறா 35 வயதான விட்டால் ஷிண்டே. கூலித் தொழிலாளியான அவரது ஏழு வயது மகள் சந்தியா அங்கே படிக்கிறார்.“ சின்னப்புள்ள அவ. எப்படியோ சமாளிச்சுடுறா. வளர்ந்துட்டான்னா என்ன பண்ணுவா?”
ஒஸ்மான்பாத் என்பது வறட்சி தாக்குவதற்கு வாய்ப்புள்ள மாவட்டம். வழக்கமாகவே அது தண்ணீருக்காக தவிக்கும். தற்போதைய கடும் வறட்சியில் ஆழ்துளை கிணறுகள் எல்லாம் வறண்டுபோயின. கிராம பஞ்சாயத்து தருகிற 500லிட்டர் தண்ணீரில்தான் பள்ளி இயங்க வேண்டிய கட்டாயம் வந்தது. அப்பாவுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு சந்தியா சொல்கிறாள் “எப்பவும் பள்ளியின் கழிவறை போகிறதுக்கு நீளமான வரிசையில் நின்றுதான் போவனும்” “ஒன்னுக்கு பெல் அடிச்சா எல்லாரும் வரிசையில் நிப்பாங்க”. என்கிறாள் அவள். தண்ணீர் எடுத்துக்கொண்டு கழிப்பறை செல்லும்போது அந்த மைதானத்தில் சிலர் கிரிக்கெட் விளையாடிட்டிருப்பாங்க. சிலநேரம் நாங்க பாட்டில்ல தண்ணீ எடுத்துக்கிட்டு சந்தை மைதானத்துக்கும் போவோம்” என்கிறாள் அவள்.
கழிவறைகளை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது என்று குழந்தைகளுக்குத் தெரிகிறது. என்கிறார் சந்தியாவின் அப்பா. “ஆனால், பள்ளி பத்து மணிக்கு ஆரம்பித்து மாலை நான்கு மணி வரை நடக்குது. இது நீண்ட நேரம். குழந்தைங்க அடிக்கடி கழிப்பறைக்கு போகாமல் இருப்பது நல்லது அல்ல” என்கிறார் அவர்.
மாணவர்கள் தங்களின் வீடுகளிலிருந்து குடிக்க தண்ணீர் எடுத்து வருகிறார்கள். வறட்சி காலகட்டத்தில் அதுவும் சிரமம். (பார்க்க- Small meal, big deal for hungry students )“ கடைசியான ஒரு நாளைக்கு பள்ளிக்கூடத்தில தண்ணி இல்லை” என்கிறாள் சந்தியா. தண்ணி குடிக்கக்கூட நாங்க ஓட்டலுக்கு போனோம். நாங்க நிறைய பேரு வர்றதைப் பாத்துட்டு ஓட்டல்காரரும் தரமாட்டேனு சொல்லிட்டாரு” என்கிறாள் அவள்.
அகமது நகர் மாவட்டத்தின் அகோலா தாலுகாவின் விர்கான் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் பாவு சாஸ்கர். செயல்பாட்டாளராகவும் இருக்கிறார். நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது என்று புகார் தெரிவித்தால் என்ன செய்கிறார்கள் என்பதை அவர் சொல்கிறார். உள்ளூர் சமூகங்களில் நன்கொடைகள் வசூலித்து பள்ளி நடத்தச் சொல்கிறார்கள். “ 2018இல் 54 சதவீதமான ஆசிரியர்களை இடமாறுதல்கள் செய்ததும் நன்கொடைகளைப் பாதித்தது.” என்கிறார் மாவட்ட கல்வி அதிகாரி ராமாகாந்த் கட்மோர். அதன் விளைவு என்ன? அனில் மொகித் எனும் ஆசிரியர் அகோலா டவுனைச் சேர்ந்தவர். 35 கிலோமீட்டர் தள்ளி ஷெல்விகைர் கிராமத்துக்கு அவரை பணியிட மாற்றம் செய்தார்கள். “இங்கே யாரையும் எனக்குத் தெரியாது. என்னையும் யாருக்கும் தெரியாது. நான் எப்படி பள்ளிக்கு நன்கொடைகள் திரட்டுவது? ” என்கிறார் அவர்.
மோசமான, பற்றாக்குறையான கட்டமைப்புகள் பள்ளிகளில் இருப்பது கற்றல் மீதும் கல்வியின் மீதும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது. மகாராஷ்டிராவில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளால் இரண்டாம் வகுப்பு புத்தகங்களைத்தான் வாசிக்க முடிகியது என்கிறது 2008 ஆண்டுக்கான
கல்வி நிலை பற்றிய ஆண்டு அறிக்கை
. பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 66 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஏறத்தாழ 59சதவீதமான பள்ளிக்குழந்தைகள் தனியார் பள்ளிகளைத்தான் தேர்வு செய்கின்றன “ அங்கே நல்லா படிக்கலாம்” என்ற கருத்தும் அவர்களிடம் இருக்கிறது என்கிறது தரவுகளை ஆய்வு செய்கிற IndiaSpend, எனும் இணையதளம்.
ஆனாலும், சில பள்ளிகள் நன்றாக சாதிக்கின்றன. அரசாங்கம் புறக்கணித்தாலும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களும் உதவுகிற கிராமத்தினரும் இருப்பதால் இது சாத்தியமாகிறது. (பார்க்க:
'I don't feel like I'm a teacher'
) ஒஸ்மான்பாத்தில் சாக்னேவாடே மாவட்டப் பள்ளியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் பள்ளிக்கு வெளியில் நிற்கும் கம்பத்திலிருந்து கிராமத்தினர் மின்சாரம் எடுத்துக் கொடுத்துள்ளனர்.
இந்தப் பள்ளியில் தொலைக்காட்சி பெட்டிகள் இயங்குகின்றன. 6,7 வயதுள்ள 40 மாணவர்கள் தொலைக்காட்சியில் பார்த்து அவர்களுக்கான பாடல்களை கற்றுக்கொள்கின்றனர். நான் பள்ளியின் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே அவர்கள் “குட் ஆஃப்டர்நூன்” என்று வரவேற்றனர். அவர்களின் ஆசிரியர் சாமிபாடா தாஸ்பால்கர் டிவியை ஆன்செய்கிறார். பென் ட்டிரைவ் போடுகிறார். மாணவர்கள் எந்தப் பாடலைக் கேட்க விரும்புகிறார்கள் என்று கேட்கிறார். ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்ததைச் சொன்னாலும் தண்ணீர் பற்றியும் பருவ காலங்கள் பற்றியும் பாடுகிற ஒரு பாடலைக் கேட்கலாம் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படுகிறது. மாணவர்களும் அந்த பாடலோடு சேர்ந்து பாடுகின்றனர்.
தமிழில் : த. நீதிராஜன்