வெள்ளைப் புள்ளிகளை கொண்ட பழுப்பு சிறகுகள் புற்களில் சிதறி கிடக்கின்றன.
மங்கும் ஒளியில் ராதேஷ்யம் பிஷ்னோய் அப்பகுதியில் தேடுகிறார். அவர் எண்ணம் தவறாக இருக்க வேண்டுமென விரும்புகிறார். “இந்த இறகுகள் பிடுங்கப்பட்டவை போல் தெரியவில்லை,” என்கிறார் சத்தமாக. பிறகு ஓர் எண்ணை அழைத்து, “வருகிறீர்களா? நான் உறுதியாக இருக்கிறேன்,” என செல்பேசியில் கூறுகிறார்.
சகுனம் போல நமக்கு மேலே வானில் நீண்டிருந்த 220 கிலோவாட் உயரழுத்த மின் தடங்கள் சடசடத்து பொறி பறந்து அணைந்தன. இருண்ட மாலை வானத்தில் கறுப்பு தடங்களாக அவை நீண்டிருந்தன.
தரவுகளை சேகரிப்பவரின் கடமையை நினைவுகூர்ந்து 27 வயதான அவர் புகைப்படக் கருவியை எடுத்து, க்ளோஸப் மற்றும் சற்று தூரம் வைத்து புகைப்படங்கள் எடுத்தார்.
அடுத்த நாள் அதிகாலைப் பொழுதில் நாங்கள் மீண்டும் இடத்துக்கு வந்துவிட்டோம். ஜெய்சால்மர் மாவட்டத்தின் கெதோலய் அருகே கங்காராம் கி தானா குக்கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அந்த இடம் இருக்கிறது.
இம்முறை சந்தேகமே இல்லை. சிறகுகள் கானமயிலுடையதுதான்.
மார்ச் 23, 2023 அன்று காலையில் வன உயிர் மருத்துவர் சம்பவ இடத்தில் இருந்தார். சாட்சிகளை ஆராய்ந்துவிட்டு அவர் சொன்னார்: “இறப்பு, உயரழுத்த மின் தடங்களில் மோதியதால் ஏற்பட்டிருக்கிறது. சந்தேகமே இல்லை. மூன்று நாட்களுக்கு முன், மார்ச் 20 (2023) அன்று நடந்திருக்கும் வாய்ப்பிருக்கிறது.”
இந்திய வன உயிர் நிறுவனத்தில் (WII) பணிபுரியும் டாக்டர் ரதோர் 2020ம் ஆண்டுக்கு பிறகு கண்டறியும் நான்காவது இறப்பு இது. WII, சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவு ஆகும். “இந்த சடலங்கள் யாவும் உயரழுத்த தடங்களுக்கு கீழே கண்டுபிடிக்கப்பட்டன. மின் தடங்களுக்கும் இந்த மரணங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு தெளிவாக இருக்கிறது,” என்கிறார் அவர்.
இறந்து போன பறவை அருகி வரும் இனத்தை சேர்ந்த கானமயில் ( Ardeotis nigriceps) ஆகும். ஐந்து மாதங்களில் உயரழுத்த தடங்கள் மீது மோதி இறந்து போன இரண்டாம் கானமயில் இது. “2017ம் ஆண்டிலிருந்து (அவர் கவனிக்க தொடங்கிய ஆண்டு) இது ஒன்பதாவது மரணம்,” என்கிறார் ராதேஷ்யாம். ஜெய்சால்மர் மாவட்டத்தை சேர்ந்த சங்க்ரா ஒன்றியத்தின் தோலியா கிராமத்தை சேர்ந்தவர் அவர். இயற்கை ஆர்வலரான அவர் எப்போதும் இப்பறவைகளை கவனித்துக் கொண்டிருப்பார். “பெரும்பாலான கானமயில் பறவைகளின் மரணம் உயரழுத்த மின் தடங்களுக்குக் கீழ்தான் நேருகின்றன,” என்கிறார் அவர்.
1972ம் ஆண்டின் வன உயிர் பாதுகாப்புச் சட்ட த்தின் முதல் பட்டியலில் கானமயில் இடம்பெற்றிருக்கிறது. ஒருகாலத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் புல்வெளிகளில் காணப்பட்ட இப்பறவையின் மொத்த எண்ணிக்கை உலகிலேயே 120-150 தான் இருக்கின்றன. ஐந்து மாநிலங்களில் அந்த எண்ணிக்கை விரவியிருக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலெங்கானா ஆகிய மாநிலங்கள் இணையும் சந்திப்பில் 8-10 பறவைகள் தென்பட்டிருக்கின்றன. நான்கு பெண் பறவைகள் குஜராத்தில் தென்பட்டிருக்கின்றன.
அதிக எண்ணிக்கை இங்கு ஜெய்சால்மர் மாவட்டத்தில்தான் இருக்கிறது. “இரண்டு இடங்களில் இருக்கின்றன. ஒன்று பொகரானுக்கு அருகே, இன்னொன்று 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாலைவன தேசியப் பூங்கா ஆகும்,” என்கிறார் வன உயிர் உயிரியலாளரான டாக்டர் சுமித் தூகியா. பறவைகளின் வசிப்பிடமான மேற்கு ராஜஸ்தானின் புல்வெளிகளில் அவற்றை அவர் கண்காணித்து வருகிறார்.
எந்தத் தடுமாற்றமும் இன்றி அவர், “கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நாம் கானமயில்களை இழந்துவிட்டோம். குறிப்பிடத்தக்க அளவில் வசிப்பிட மீட்போ பாதுகாக்கும் முயற்சியோ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை,” என்கிறார். சூழலியல், கிராம மேம்பாடு மற்றும் நிலைத்து நீடித்த வளர்ச்சி (ERDS) அறக்கட்டளையின் கவுரவ அறிவியல் ஆலோசகராக அவர் இருக்கிறார். கானமயில்களை காக்க மக்களின் பங்கேற்பை உருவாக்கவென இப்பகுதியில் 2015ம் ஆண்டு முதல் இயங்கி வரும் அமைப்பு அது.
“என் சொந்த வாழ்க்கையிலேயே வானில் இப்பறவைகளை திரளாக பார்த்திருக்கிறேன். இப்போது ஒற்றை பறவை பறப்பதை எப்போதாவதுதான் பார்க்கிறேன்,” என சுட்டிக் காட்டுகிறார் சுமேர் சிங் பாட்டி. நாற்பது வயதுகளில் இருக்கும் சுமேர் சிங் ஒரு சூழலியலாளர் ஆவார். ஜெய்சால்மர் மாவட்டத்தின் தோப்புகளில் கானமயில்களையும் அவற்றின் வசிப்பிடங்களையும் காக்க இயங்கி வருபவர்.
ஒரு மணி நேர தூரத்தில் இருக்கும் சாம் ஒன்றியத்தின் சன்வதா கிராமத்தில் அவர் வசிக்கிறார். எனினும் கானமயிலின் இறப்பு அவரையும் பிற உள்ளூர்வாசிகளையும் அறிவியலாளர்களையும் சம்பவ இடத்துக்கு வர வைத்தது.
*****
100 மீட்டர் தொலைவில் ரஸ்லா கிராமத்தின் அருகே இருக்கும் தெக்ரே மாதா மந்திரில் ஆளுயர கானமயில் சிலை இருக்கிறது. நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும் வகையில் ஒரு மேடையில் மீது அமைக்கப்பட்டிருக்கிறது.
உள்ளூர்வாசிகள் எதிர்ப்பின் அடையாளமாக அச்சிலையை நிறுவியிருக்கின்றனர். “கானமயில் இறந்த ஓராண்டு நினைவின்போது அது அமைக்கப்பட்டது,” என்கின்றனர். இந்தி மொழியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களின் மொழிபெயர்ப்பு: ”தெக்ரே மாதா மந்திருக்கு அருகே 16 செப்டம்பர் 2020 அன்று ஒரு பெண் கானமயில் உயரழுத்த மின் தடங்களில் மோதிவிட்டது. அதன் நினைவில் இச்சின்னம் கட்டப்பட்டிருக்கிறது.’
சுமேர் சிங், ராதேஷ்யம் மற்றும் ஜெய்சால்மெர்வாசிகளை பொறுத்தவரை, இறந்து கொண்டிருக்கும் கானமயில்களும் அழிந்து கொண்டிருக்கும் அவற்றின் வசிப்பிடங்களும், சூழல் மீது மேய்ச்சல் சமூகங்கள் கொண்டிருக்கும் பிணைப்பின் அழிவையும் அவர்களது வாழ்விழப்பையும் வாழ்வாதார இழப்பையும் அடையாளப்படுத்துவதாக இருக்கிறது.
”வளர்ச்சி என்ற பெயரில் நாங்கள் அதிகம் இழக்கிறோம்,” என்கிறார் சுமேர் சிங். “இந்த வளர்ச்சி யாருக்கானது?” அவர் சொல்வதில் உண்மை இல்லாமலில்லை. 100 மீட்டர் தொலைவில் சூரிய ஆற்றலெடுக்கும் இடம் இருக்கிறது. மின் தடங்கள் தலைக்கு மேல் செல்கின்றன. ஆனால் அவரின் கிராமத்தில் மின்சார இணைப்போ சரியாக இருப்பதில்லை.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்ளளவு, கடந்த 7.5 வருடங்களில் 286 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் குறிப்பிடுகிறது. கடந்த பத்தாண்டுகளில், குறிப்பாக கடந்த 3-4 வருடங்களில் காற்று மற்றும் சூரிய ஆற்றலுக்கான ஆயிரக்கணக்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆலைகள் மாநிலத்தில் தொடங்கப்பட்டிருக்கின்றன. அவற்றிலும் முக்கியமாக அதானி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா ராஜஸ்தான் லிமிடெட் (AREPRL), 500 மெகாவாட் கொள்ளளவு கொண்ட சூரிய ஆற்றல் பூங்காவை ஜோத்பூரின் பத்லாவிலும் 1,500 மெகாவாட் சூரிய ஆற்றல் பூங்காவை ஜெய்சால்மரின் ஃபதேகரிலும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மின் தடங்கள் பூமிக்குள் கொண்டு செல்லும் திட்டமிருக்கிறதா என இணையதளம் வழியாக அனுப்பப்பட்ட கேள்வி, இக்கட்டுரை பதிப்பிக்கப்படும் வரை பதிலளிக்கப்படவில்லை.
சூரிய மற்றும் காற்றாலைகளால் உருவாக்கப்படும் ஆற்றல் தேசிய சேமிப்பு பின்னலுக்கு, மின் தடங்கள் கொண்ட பெரும் வலைப்பின்னலின் உதவியோடுதான் அனுப்பப்படுகிறது. கானமயில், கழுகுகள், பருந்துகள் மற்றும் பிற பறவைகளின் பறக்கும் வழியில் அந்தத் தடங்கள் தடைகளாக இருக்கின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கான பசுமை பகுதி, கானமயில்களின் வசிப்பிடங்கள் இருக்கும் பொக்ரான் மற்றும் ராம்கர்-ஜெய்சால்மர் ஆகிய இடங்களினூடாக செல்லும்.
ஆர்க்டிக் பகுதியிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்கு மத்திய ஐரோப்பா மற்றும் ஆசியா வழியாக வருடந்தோறும் இடம்பெயரும் பறவைகளுக்கான மத்திய ஆசிய பறக்கும் பாதை (CAF) பகுதியில் ஜெய்சால்மர் இடம்பெற்றிருக்கிறது. 182 நீர்ப்பறவை இனங்களின் 279 பறவைகள் இப்பாதையின் வழியாக வருவதாக இடம்பெயரும் வன விலங்கு வகைகள் பாதுகாப்புக்கான கூட்டமைப்பு தெரிவிக்கிறது. வெண் முதுகுக் கழுகு ( Gyps bengalensis ), கருங்கழுத்து கழுகு ( Gyps indicus ), வெண்புருவ புதர்ச்சிட்டு ( Saxicola macrorhyncha ), வெண் முதுகுச் சில்லை ( Amandava formosa ) மற்றும் ஹவுபாரா ( Chlamydotis maqueeni ) போன்றவை அருகி வரும் பிற பறவைகளில் சில.
ராதேஷ்யம் ஒரு புகைப்படக் கலைஞரும் கூட. அவரின் நீண்ட குவிய டெலி லென்ஸ் கலங்க வைக்கும் புகைப்படங்களை எடுத்திருக்கின்றன. “ஏரி என தவறாக நினைத்துக் கொண்டு நாரைகள் சூரியத் தகடுகள் மீது இரவில் வந்திறங்குவதை நான் பார்த்திருக்கிறேன். துரதிர்ஷ்டவசமான பறவை பிறகு தகடில் வழுக்கி, குணப்படுத்த முடியாதளவுக்கு மெல்லிய கால்களை காயப்படுத்திக் கொள்கின்றன.”
மின் தடங்கள், கானமயில்களை மட்டுமின்றி, ஜெய்சால்மரின் பாலைவன தேசியப் பூங்காவின் 4,200 சதுர கிலோமீட்டரில் கிட்டத்தட்ட 84,000 பறவைகளை கொன்றிருக்கின்றன என இந்திய வனஉயிர் நிறுவன 2018ம் ஆண்டு ஆய்வு குறிப்பிடுகிறது. ”இந்தளவுக்கான (கானமயில்களின்) மரணம் அந்த பறவை இனத்தால் சமாளிக்க முடியாது. அழிந்து போவதற்கான முக்கிய காரணமாக இது இருக்கும்.”
ஆபத்து வானில் மட்டுமல்ல், தரையிலும் இருக்கிறது. புல்வெளிகளிலும் வழிபாட்டுக்கான புனித காட்டுத் தளங்களிலும் 200 மீட்டர் உயர காற்றாலைகள் 500 மீட்டர் இடைவெளியில் நிறுவப்பட்டிருக்கின்றன. பல ஹெக்டேர் அளவு நிலம் மூடப்பட்டு, சூரிய ஆற்றல் பண்ணைகளாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிளை வெட்டுவதை கூட மக்கள் அனுமதிக்காத புனித காட்டுப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் தலையீடு, மேய்ச்சல் பணியை பாம்பு ஏணி கொண்ட பரமபத விளையாட்டாக மாற்றியிருக்கிறது. மேய்ச்சலுக்கு செல்பவர்கள் நேர்வழியை எடுக்கத் துணிவதில்லை. வேலிகளை சுற்றி, காற்றாலைகளையும் அதன் காவலாளிகளையும் தவிர்த்து செல்ல வேண்டியிருக்கிறது.
“காலையில் கிளம்பினால், வீடு வர மாலை ஆகிவிடும்,” என்கிறார் தனீ (இப்பெயரைதான் அவர் பயன்படுத்துகிறார்). நான்கு மாடுகளுக்கும் ஐந்து ஆடுகளுக்கும் தினமும் காட்டுக்கு சென்று புற்களை அந்த 25 வயதுக்காரர் எடுத்து வர வேண்டும். “என் விலங்குகளை காட்டுக்குள் அழைத்து செல்லும்போது சில நேரங்களில் எனக்கு ஷாக் அடித்திருக்கிறது.” தனீயின் கணவர் பார்மெர் டவுனில் படிக்கிறார். ஆறு பிகா நிலத்தை (கிட்டத்தட்ட 1 ஏக்கர்) பார்த்துக் கொள்கிறார். 8, 5, மற்றும் 4 வயதுகளில் இருக்கும் மூன்று மகன்களையும் பார்த்துக் கொள்கிறார்.
”சட்டசபை உறுப்பினரிடமும் மாவட்ட கமிஷனரிடமும் கேள்வி கேட்க முயன்றோம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை,” என்கிறார் ஜெய்சால்மரின் சாம் ஒன்றியத்திலுள்ள ராஸ்லா கிராமத்தின் தெக்ரேவின் கிராமத் தலைவரான முரித் கான்.
“ஆறிலிருந்து ஏழு உயரழுத்த மின் தடங்கள் எங்களின் பஞ்சாயத்தில் நிறுவப்பட்டிருக்கின்றன,” என அவர் சுட்டிக் காட்டுகிறார். “எங்களின் புனிதக் காட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களை ‘யார் அனுமதியளித்தது’ எனக் கேட்டால், அவர்கள் ‘எங்களுக்கு உங்களின் அனுமதி தேவையில்லை’ என்கின்றனர்.
சம்பவம் நடந்து சில தினங்களுக்கு பிறகு மார்ச் 27, 2023 அன்று, மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி க்கு பதிலளித்த சூழல், காடு, காலநிலை மாற்ற அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, முக்கியமான கானமயில் வசிப்பிடங்கள், அவற்றுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் தேசியப் பூங்காக்கள்தான் என்றார்.
இரண்டு வசிப்பிடங்களில் ஒன்று ஏற்கனவே தேசியப் பூங்காவாகவும் மற்றொன்று பாதுகாப்புத்துறை நிலமாகவும் இருக்கிறது. இரண்டிலும் கானமயில்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது.
*****
ஏப்ரல் 19, 2021 அன்று ஒரு ரிட் மனுவுக்கான பதிலில், உச்சநீதிமன்றம், “கானமயில்கள் அதிகம் இருக்கக் கூடிய பகுதியில், தலைக்கு மேலே செல்லும் மின் தடங்கள் தரைக்குள் கொண்டு செல்லப்படுவதற்கான பணிகள் ஒரு வருடத்தில் முடிக்கப்பட வேண்டும். அதுவரை திசைதிருப்பான்கள் (வெளிச்சத்தை பிரதிபலித்து பறவைகளை எச்சரிக்கும் பிளாஸ்டிக் தட்டுகள்) மின் தடங்களில் தொங்கப்பட வேண்டும்,” என உத்தரவிட்டது .
ராஜஸ்தானில் 104 கிலோமீட்டர் மின் தடங்கள் தரைக்கடியில் கொண்டு செல்லப்பட வேண்டுமென்றும் 1,238 மின் தடங்கள் திசைதிருப்பான்களை கொண்டிருக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலிட்டிருக்கிறது.
இரண்டு வருடங்கள் கழித்து ஏப்ரல் 2023-ல், தரைக்குள் மின் தடங்கள் கொண்டு செல்லப்பட வேண்டுமென்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பு முற்றாக புறக்கணிக்கப்பட்டு பிளாஸ்டிக் திசைதிருப்பான்கள் மட்டும், மக்கள் மற்றும் ஊடகங்களின் கவனம் பெறும் இடங்களில் சில கிலோமீட்டர்கள் இடைவெளியில் ஒன்றென வைக்கப்பட்டது. “இருக்கும் ஆய்வுகளின்படி, பறவை திசைதிருப்பான்கள் பெரிய அளவில் மோதலை குறைத்திருக்கிறது. எனவே இந்த மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்ககூடியவை,” என்கிறார் வன உயிர் உயிரியலாளர் தூகியா.
கானமயில் இனமோ அவற்றின் ஒரே பூர்விகமாக இப்பூவுலகில் இருக்கும் இடத்தில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது. இவற்றுக்கிடையில் நாம் வெளிநாட்டு இனமான ஆப்பிரிக்க சிறுத்தைப்புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர 224 கோடி ரூபாய் நிதி மதிப்பிலான திட்டத்தை தீட்டியிருக்கிறோம். பிரத்யேக விமானங்களில் அவற்றைக் கொண்டு வருவது, தனி வசிப்பிடங்களை கட்டுவது, அதிநவீன கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் போன்றவையெல்லாம் திட்டத்தில் இருக்கின்றன. அது மட்டுமின்றி அதிகரித்து வரும் புலிகளுக்கென 2022ம் ஆண்டில் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
*****
பறவை இனங்களில் ஒன்றான கானமயில் ஒரு மீட்டர் உயரமும் 5-10 கிலோ எடையும் கொண்டது. வருடத்துக்கு ஒருமுறை திறந்தவெளியில் முட்டையிடும். அப்பகுதியில் அதிகரித்து வரும் நாய்களால் அம்முட்டைகளுக்கு ஆபத்து இருக்கிறது. “சூழல், நம்பிக்கைக்கான வாய்ப்பற்றிருக்கிறது. இந்த இனத்தை தக்க வைப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். யாரும் அத்துமீற முடியாத பகுதிகளை கண்டுபிடிக்க வேண்டும்,” என்கிறார் இப்பகுதியில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் பாம்பே இயற்கை வரலாற்று சொசைட்டி (BNHS) அமைப்பின் திட்ட அதிகாரி நீல்கந்த் போதா.
நிலத்தில் வாழும் இனமான அது நடக்கவே விரும்பும். 4.5 அடி நீளமான இரு இறக்கைகளையும் விரித்து தன் உடல் தூக்கி பாலைவன வானங்களில் அது பறப்பதை பார்க்கவே அற்புதமாக இருக்கும்.
கானமயில் பறவையின் கண்கள் தலையின் பக்கவாட்டில் இரு பக்கங்களில் இருக்கும். நேராக பார்க்க முடியாது. ஆகவே உயரழுத்த மின் தடத்தை நேராக சென்று மோதும் அல்லது கடைசி நிமிடத்தில் கண்டு திரும்ப முற்படும். சடாரென திருப்ப முடியாத ட்ரெயிலர் லாரிகள் போல, கானமயிலின் திடீர் திருப்பம் எப்போதும் தாமதமாகவே நேரும். அதன் இறக்கையில் ஒரு பகுதியோ தலையோ 30 மீட்டருக்கும் அதிக உயரத்தில் இருக்கும் மின் தடங்களில் மோதும். “மின்சார ஷாக்கால் இறக்கவில்லை என்றாலும் கூட, மோதி கீழே விழுவதில் இறப்பு நேர்ந்துவிடும்,” என்கிறார் ராதேஷ்யம்.
2022-ல் வெட்டுக்கிளிகள் இந்தியாவுக்குள் ராஜஸ்தான் வழியாக நுழைந்தபோது, "சில வயல்களை கானமயில்கள்தான் காப்பாற்றின. ஆயிரக்கணக்கில் அவை வெட்டுக்கிளிகளை தின்றன," என நினைவுகூருகிறார் ராதேஷ்யம். கானமயில்களால் யாருக்கும் பாதிப்பு இல்லை. சொல்லப்போனால், சிறு பாம்புகள், தேள்கள், சிறு பல்லிகள் போன்றவற்றை உண்ணுவதன் வழியாக அவை விவசாயிகளுக்கு உதவுகின்றன," என்கிறார் அவர்.
அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் சேர்த்து 80 பிகா (கிட்டத்தட்ட 8 ஏக்கர்) நிலம் இருக்கிறது. அதில் அவர்கள் கொத்தவரையும் கம்பும் விளைவிக்கின்றனர். குளிர்கால மழை இருந்தால் சில சமயங்களில் மூன்றாவதாக ஒரு பயிரையும் விளைவிப்பார்கள். ”150 கானல்மயில்கள் இல்லாமல் ஆயிரக்கணக்கில் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என யோசித்துப் பாருங்கள். வெட்டுக்கிளிகள் உருவாக்கிய பெரும் சேதம் குறைக்கப்பட்டிருக்கும்,” என்கிறார் அவர்.
கானமயில்களையும் அவற்றின் வசிப்பிடங்களையும் தொந்தரவு செய்யப்படாமல் காக்கப்பட வேண்டுமெனில் குறைந்த பரப்பில் கவனம் செலுத்த வேண்டும். “அதற்கான முயற்சியை நாம் எடுக்க முடியும். பெரிய விஷயம் ஒன்றுமில்லை. மின் தடங்களை பூமிக்கடியில் கொண்டு செல்லவும் புது மின் தடங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாதெனவும் நீதிமன்ற உத்தரவு இருக்கிறது,” என்கிறார் ராதோர். “எல்லாம் முடிவதற்குள் அரசாங்கம் நிறுத்தி சிந்திக்க வேண்டும்.”
கட்டுரையாளர், இக்கட்டுரைக்கு உதவிய பையோடைவர்சிட்டி கொலாபரேடிவ் அமைப்பின் டாக்டர் ரவி செல்லத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.
தமிழில்: ராஜசங்கீதன்