ஆந்திர மாநிலம் துள்ளூர் மண்டல் பகுதியிலுள்ள உத்தந்தராயுனிபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதான கைம்பெண் வேமுறி சுஜாதா, தலித் சமூகமான மாலா சமூகத்தைச் சார்ந்தவர். கடந்த 2015 வரை விவசாயக் கூலியாகப் பணிபுரிந்துள்ளார். அவருக்கென்று சொந்தமாக எந்த நிலமும் இல்லை. அவர் கூறுகையில் ,"ஒரு நாளைக்கு 150 ரூபாய் வருமானம் ஈட்டி வந்தேன், வாரத்தின் 6 நாட்கள் வேலை இருக்கும், ஆனால் தற்போது பெண்களுக்கு இங்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை" என்று கூறினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆந்திரபிரதேச மாநிலம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரண்டாகப் பிரிக்கப்பட்டப்பட்டது. அப்போது ஆந்திரமாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்ட அமராவதி நகரம் செயல்படத்தொடங்கும் வரை, ஹைதராபாத் நகரம் இருமாநிலங்களுக்கும் பொதுத்தலைநகராக 10 ஆண்டு நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து, ஆந்திரபிரதேச மாநில அரசு அமராவதி பகுதியில் உலகத்தரம் வாய்ந்த புதிய தலைநகர் அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதிலிருந்து, குண்டூர் மாவட்டத்தில் விவசாய வேலைகள் கிடைப்பது மிகவும் சிக்கலானது.
கடந்த 2008 ஆம் ஆண்டு, சுஜாதாவின் கணவர் இறந்த பிறகு, விவசாயக் கூலியாக பணிபுரிந்து அதில் வருகின்ற சொற்ப ஊதியத்தை வைத்து தனது இரு மகன்களை முன்னேற்ற போராடியுள்ளார். ஆனால், தற்போது அவரது மகன்கள் கூட வாழ்வாதாரத்திற்காகக் கடினமாக உழைக்காத தொடங்கியுள்ளனர். அவரது மூத்த மகனான 19 வயது வேமுறி பிரசாத் துள்ளூர் பகுதியிலுள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் 10 வகுப்பு வரை படித்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பள்ளிக்கு செல்வதை நிறுத்தியுள்ளார்.இதேபோன்று, ஒரு வருடம் கழித்து அதே பள்ளியில் படித்து வந்த சுஜாதாவின் இளையமகனான 17 வயது கொண்ட வேமுறி ராஜாவும் பள்ளியில் இருந்து நின்றுள்ளார். தற்போது, இருவரும் கிருஷ்ணா ஆற்றுப்பகுதியில் செயல்படும் மணல் குவாரியில் தினக்கூலியாகப் பணிபுரியத் தொடங்யுள்ளனர். இதன்வழியாக, ஒரு நாளைக்கு 200-250 ரூபாய்வரை ஊதியமாக பெற்று வருகின்றனர். குறைவான வேலைக் காரணமாக சுழற்சி முறையில் வாரத்தில் மூன்று நாள் பணிபுரிந்து வருகின்றனர்.
மணல் குவாரி தொடங்கப்பட்டதில் இருந்து பெண்கள், அங்கு பணிக்கு அமர்த்தப்படவில்லை. மேலும் அவரது கிராமத்தில் விவசாய வேலைகளும் கிடைக்கவில்லை. இதனால், சுஜாதாவைப் போன்றப் பெண்கள் பலர், தங்கள் வீடுகளிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜா கூறுகையில்,"இது பெரிய அளவில் முதுகுவலி எடுக்கும் வேலை ,அதுமட்டுமல்லாமல் அதிகளவிலான ஆற்றல் தேவைப்படக்கூடிய வேலையும் கூட , மேலும், நாங்கள் அதிகாலை 6 மணிக்கெல்லாம் சென்று, மாலை 6 மணிக்கு தான் திரும்பி வருகிறோம்" என்று தெரிவித்தார்.










