நான்டெடின் மஹூர் தாலுக்காவில் உள்ள சவர்கேத் கிராமத்தில் பலரும் சிரிப்பதோ, புன்னகைப்பதோ இல்லை. தெரியாதவர்களிடம் பேசும்போது, மிகவும் கவனத்துடன் பேசுகின்றனர். “இது சங்கடமானது,” என்கிறார் ரமேஷ்வர் ஜாதவ். அவர் பேசும்போது பற்கள் அனைத்தும் அழுகி, உடைந்து, மஞ்சள் நிறத்திலிருந்து கரும் பழுப்பு நிறத்திற்கு மாறியுள்ளதைக் காண முடிகிறது.
சுமார் 500பேர் வசிக்கும் சவர்கேத் கிராமத்தில் இதுபோன்ற பிரச்னையால் 22 வயது விவசாய கூலித்தொழிலாளியான ரமேஷ்வர் மட்டும் பாதிக்கப்படவில்லை. அங்குள்ள எல்லா பெரியவர்களின் பற்களும் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளன. பலரும் தளர்ச்சியுடன் அல்லது நிரந்தர கூன் முதுகுடன் குறுகிய பாதையில் அல்லது வயல்வெளிகளில் மெதுவாக நடந்து செல்கின்றனர். நடந்து செல்பவர்களுக்கு அடிக்கடி ஓய்வுத் தேவைப்படுகிறது. ஒட்டுமொத்த கிராமமும் வெவ்வேறு காலத்தில் நகர்ந்து செல்வதை போன்று தோன்றுகிறது.
பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதை அதன் மீது நடமாடும் இம்மனிதர்கள் பிரதிபலிக்கிறார்கள்: இங்குள்ள நிலத்தடி நீரில் ஃபுளோரைட் உள்ளது. மண், பாறைகள், நிலத்தடி நீரில் இயற்கையாக காணப்படும் ரசாயனம். ஆனால் அடர்ந்த நிலையில் இது கடுமையான தீங்கை விளைவிக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துபடி, ஒரு லிட்டர் தண்ணீரில் 1.5 மிகி மேல் ஃபுளோரைட் இருந்தால் பயன்படுத்துவதற்கு ஆபத்தானது என்கிறது. 2012-13 வாக்கில் நிலத்தடி அளவீடு மற்றும் வளர்ச்சி முகவம் (ஜிஎஸ்டிஏ) பரிசோதனை செய்தபோது சவர்கேதில் அது 9.5 மிகி ஆக இருந்தது.
“நீரில் உள்ள அதிகளவிலான ஃபுளோரைடினால் ஃபுளோரோசிஸ் உருவாகியுள்ளதால் அதன் வளர்ச்சி வேறுபடுகிறது,” என்கிறார் நான்டெட் நகர மருத்துவரான டாக்டர் ஆஷிஷ் அர்தாபுர்கார். ஒருமுறை சீர்கேடு தொடங்கிவிட்டால் அதை மாற்ற முடியாது என்று அவர் கூறுகிறார். “ஆனால் குழந்தைகள் பாதுகாக்கப்படுகின்றனர். அறிவுப் பல் முளைத்த பிறகு தான் பற்களில் ஃபுளோரோசிஸ் பிரச்னை வரும், ஆனால் ஆறு வயதிற்கு பிறகு நடக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பிறகு ஃப்ளோரோசிஸ் அவற்றை பாதிக்கின்றன.”






