மயிலாப்பூரின் அந்தச் சின்னச் சந்தில் நீலக் கலரில் பெயிண்ட் அடித்த ஒற்றை அறையில் எல்லாப் பொருள்களும் அடைத்துக்கொண்டு கிடந்தன. கர்நாடக சங்கீதம் பாடிக்கொண்டு ஒரு ரேடியோ அங்கிருந்தது. இந்துக் கடவுள்கள் எல்லாம் சுவர்களை அலங்கரித்துக்கொண்டிருந்தன. பலா மரத்தின் கட்டைகளும் தோல்களும் தரையில் பரவிக்கிடந்தன. ஜேசுதாஸ் அந்தோணியும் அவரது மகன் எட்வின் ஜேசுதாஸூம் அந்த அறையில் வேலை செய்துகொண்டிருந்தனர். சுத்தியல்கள், பளப்பளப்பாக்குவதற்கான எண்ணை, வேறு சில கருவிகள் என அவர்களைச் சுற்றிலும் கிடந்தன. மத்திய சென்னையில் உள்ள பழைய குடியிருப்பு பகுதியான இங்கே கோயில்களின் மணிகள் ஒலித்துக்கொண்டிருந்தன.
கைதேர்ந்த அந்த இரண்டு கைவினைஞர்களும் தென் இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த இசையின் ஒரு கருவியான மிருதங்கத்தை உருவாக்கிக்கொண்டிருந்தனர். “ எனது தாத்தாவின் அப்பா தஞ்சாவூரில் மிருதங்கம் தயாரிப்பதைத் தொடங்கினார்” என்கிறார் எட்வின். எட்வினின் அப்பா தலையைத் தூக்கி புன்னகைக்கிறார். பிறகு வட்ட வட்டமாக உள்ள தோல்களின் ஓரங்களில் மிருதங்கங்களுக்குத் தேவையான துளைகளைப் போடுவதில் கவனமாய் இருக்கிற தனது வேலையைத் தொடர்கிறார். அதன் பிறகு இரண்டு தோல்துண்டுகளைப் பிடித்து இழுக்கிறார். மெலிதான இரண்டு தோல் துண்டுகளை இழுத்து இரண்டு பக்கமும் மிருதங்கத்தின் முனைகளில் கட்டுகிறார். கனமான தோல் துண்டுகளையும் இணைத்துக் கட்டுகிறார். ஒரு முனைக்கும் மறு முனைக்கும் இரண்டையும் இணைத்து மிருதங்கத்தின் உடல் முழுதும் கட்டுகிறார். ஒரு மிருதங்கத்தை முழுமையாக செய்து முடிக்க ஒரு வாரம் ஆகிறது. அவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மிருதங்கங்களை உருவாக்குகிறார்கள்.











