எல்லப்ப்பன் குழப்பமாகவும் கோபமாகவும் இருக்கிறார்.

“நாங்கள் கடலோர மீனவ சமூகம் கிடையாது. ஏன் எங்களை செம்பனந்த மறவராகவும் கோசாங்கியாகவும் அடையாளப்படுத்துகின்றனர்?”

“நாங்கள் சோளகர்கள்,” என்கிறார் 82 வயது நிரம்பிய அவர். “(அரசு) எங்களிடம் அடையாள ஆவணம் கேட்கிறது. நாங்கள் இங்கேயே இருந்து வாழ்கிறோம். அது போதுமான அடையாளம் இல்லையா? ஆதாரம், ஆதாரம்… அவர்கள் அதைத்தான் கேட்கிறார்கள்.”

தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட சாக்கிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் எல்லப்பன் சமூகத்தினர் சாட்டையடிக்கும் வேலை செய்பவர்கள். உள்ளூரில் சாட்டை சமூகம் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் கணக்கெடுப்பில் அவர்கள் செம்பனந்த மறவர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்குக் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கிறார்கள்.

“கணக்கெடுப்பவர்கள் எங்களை வந்து பார்ப்பார்கள். சில கேள்விகள் கேட்பார்கள். அவர்களுக்கு பிடித்த பட்டியலில் எங்களை போடுவார்கள்,” என்கிறார் அவர்.

நாட்டில் தவறாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 15 கோடி இந்தியர்களில் எல்லப்பனும் ஒருவர். இத்தகைய சமூகங்கள் பெரும்பாலானவை காலனியாட்சியில் குற்றப் பழங்குடி சட்டத்தின் கீழ், குற்றப்பரம்பரை என அறிவிக்கப்பட்டவை. இச்சட்டம் 1952ம் ஆண்டில் திரும்பப் பெறப்பட்டு, இச்சமூகங்கள் சீர்மரபினர் அல்லது மேய்ச்சல் பழங்குடிகள் என அழைக்கப்பட்டன.

“முழுமையடையவும் இல்லை. போதுமான அளவுக்கும் கீழ் மோசமாக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் சமூக அடுக்குமுறையில் கடைசியில்தான் இருக்கின்றனர். காலனியாட்சியின்போது உருவாக்கப்பட்ட பாரபட்சங்களை அவர்கள் இன்னும் எதிர்கொண்டு வருகின்றனர்,” என்கிறது 2017ம் ஆண்டின் தேசிய சீர்மரபினர் மேய்ச்சல் மற்றும் அரை நாடோடி பழங்குடி சமூகங்களுக்கான வாரிய அறிக்கை .

Yellappan, part of the Sholaga community
PHOTO • Pragati K.B.
lives in Sakkimangalam village in Madurai district of Tamil Nadu
PHOTO • Pragati K.B.

சோளகர் சமூகத்தை சேர்ந்த எல்லப்பன் (இடது) மதுரையின் சாக்கிமங்கலம் கிராமத்தில் (வலது) வசிக்கிறார்

இக்குழுக்களில் சில பிறகு பட்டியல் பழங்குடி, பட்டியல் சாதி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளாக வகைப்படுத்தப்பட்டன. எனினும் 269 சமூகங்கள் இன்னும் எந்த வகைக்குள்ளும் வகைப்படுத்தப்படவில்லை என 2017ம் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது. இதனால் அவர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு, நில ஒதுக்கீடு, அரசியல் பங்கேற்பு போன்ற சமூக நல நடவடிக்கைகள்  கிடைக்கவில்லை.

இச்சமூக உறுப்பினர்களில் எல்லப்பன் போன்ற கழைக்கூத்தாடிகள், சர்க்கஸ்காரர்கள், கைரேகை பார்ப்பவர்கள், பாம்பாட்டிகள், அலங்கார அணிகலன் விற்பவர்கள், வைத்தியர்கள் மற்றும் மாட்டுடன் வாத்தியம் வாசிப்பவர்கள் போன்ற சமூகங்கள் உண்டு. அவர்களின் வாழ்க்கைகள் இடம்பெயரும் தன்மை கொண்டது. அவர்களின் வாழ்வாதாரங்களும் இலகுவானவை. அன்றாடம் வாடிக்கையாளர்களை தேடும் அவர்களுக்கான வருமானம் அவர்கள் இடம்பெயர்வதை சார்ந்துதான் இன்றும் இருக்கிறது. குழந்தைகளுக்கான கல்விக்காக, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு திரும்புவதற்கென ஒரு வசிப்பிடத்தை வைத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் பெருமாள் மாட்டுக்காரன், தொம்மாரா, குடுகுடுபாண்டி மற்றும் சோளக சமூகங்கள் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி அல்லது மிக பிற்படுத்தப்பட்ட சாதியாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. அவர்களின் தனித்துவ அடையாளம் பொருட்படுத்தப்படாமல் ஆடியான், கட்டுநாயக்கன் மற்றும் செம்பனந்த மறவர் சமூகங்களில் அவர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும் பல சமூகங்கள் பல மாநிலங்களில் தவறான பட்டியல்களில் இடம்பெற்றிருக்கின்றன.

“கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு இல்லாமல் எங்கள் குழந்தைகளுக்கு எந்த வாய்ப்பும் கிடையாது. பிறருடன் (சீர்மரபினர், பட்டியல் பழங்குடி அல்லாதார்) சேர்ந்து எந்த ஆதரவுமின்றி நாங்கள் போட்டி போட வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமல்ல,” என்கிறார் பெருமாள் மாட்டுக்காரன் சமூகத்தை சேர்ந்த பாண்டி. அவரது சமூகத்தினர் வீடுதோறும் அலங்கரிக்கப்பட்ட காளைகளை அழைத்து சென்று வருமானம் ஈட்டுகின்றனர். அச்சமூகம் பூம் பூம் மாட்டுக்காரன் என்றும் அழைக்கப்படுகிறது. அவர்கள் எதிர்காலத்தை கணித்தும் கூறுவார்கள். காசுக்காக பக்தி பாடல்களும் பாடுவார்கள். 2016ம் ஆண்டில் அவர்களுக்கு பட்டியல் பழங்குடி இடம் கிடைத்து ஆடியான் சமூகத்தில் வகைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு அதில் நிறைவு இல்லை. பெருமாள் மாட்டுக்காரர்களாக அழைக்கப்படவே விரும்புகின்றனர்.

பாண்டி பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது மகன் தர்மதுரை அலங்கரிக்கப்பட்ட ஒரு காளையை இழுத்துக் கொண்டு வீடு திரும்புகிறார். அவரது தோளில் ஒரு பை தொங்குகிறது. கையின் வளைவில் ‘பிராக்டிகல் ரெகார்ட் புக்’ என எழுதப்பட்ட ஒரு புத்தகம் இருக்கிறது.

His father, Pandi, with the decorated bull
PHOTO • Pragati K.B.
Dharmadorai is a student of Class 10 in akkimangalam Government High School in Madurai.
PHOTO • Pragati K.B.

தர்மதுரை (வலது) சாக்கிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். அவரின் தந்தை பாண்டி (இடது) அலங்கரிக்கப்பட்ட காளை ஒன்றுடன்

தர்மதுரை, சாக்கிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். அவர் வளர்ந்ததும் மாவட்ட ஆட்சியராக விரும்புகிறார். அதற்கு அவர் பள்ளியில் படிப்பை தொடர வேண்டும். அவர் ஏழு புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது. அப்பா பாண்டி 500 ரூபாய்தான் கொடுத்தார். ஏழாவது புத்தகம் மட்டும் வாங்க முடியவில்லை. எனவே அவர் ஒரு முடிவு எடுத்தார்.

”காளையை அழைத்துக் கொண்டு நான் ஐந்து கிலோமீட்டர் சென்று 200 ரூபாய் சம்பாதித்தேன். இப்புத்தகத்தை அந்த பணத்தில் வாங்கினேன்,” என்கிறார் அவர் தன் வியாபார நுட்பத்தில் சந்தோஷம் கொண்டு.

தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான - 68 சீர்மரபு சமூகங்கள் இருக்கின்றன. மேய்ச்சல் பழங்குடிகள் எண்ணிக்கையை 60 ஆகக் கொண்டு இரண்டாம் இடத்தில் அம்மாநிலம் இருக்கிறது. எனவே தர்மதுரைக்கான கல்வி வாய்ப்புகள் குறைவு என பாண்டி நினைக்கிறார். “நாங்கள் நிறைய பேருடன் போட்டி போட வேண்டும்,” என்கிறார் அவர் பட்டியல் பழங்குடியாக பல காலமாக அடையாளப்படுத்தப்பட்டு இருப்பவரைக் குறித்து. தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டசமூகங்களுக்கும் வன்னியர்களுக்கும் சீர்மரபினருக்கும் பட்டியல் சாதிகளுக்கும் பட்டியல் பழங்குடிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

*****

“நாங்கள் கடந்து செல்லும் கிராமத்தில் ஏதேனும் காணாமல் போனால், நாங்கள்தான் முதலில் குற்றஞ்சாட்டப்படுவோம். கோழி திருட்டுப் போனாலும், நகையோ துணிகளோ எது காணாமல் போனாலும் எங்களை சிறைப்பிடித்து அடித்து அவமானப்படுத்துவார்கள்,” என்கிறார் மகராஜா.

PHOTO • Pragati K.B.
His wife, Gouri performing stunts with fire
PHOTO • Pragati K.B.

இடது: தெருவில் சர்க்கஸ் போடும் தொம்மர் சமூகத்தை சேர்ந்த மகராஜா அவரது கூடாரத்தை மூட்டைக் கட்டுகிறார். வலது: அவரது மனைவி, கவுரி நெருப்புடன் ஸ்டண்ட் செய்து கொண்டிருக்கிறார்

30 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் ஆர்.மகராஜா தெரு சர்க்கஸ் கலைஞர்களின் தொம்மர் சமுகத்தை சேர்ந்தவர். அவர் ஒரு வண்டியுடன் கூடிய கூடாரத்தில் சிவகங்கை மாவட்ட மானாமதுரையில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவர்களின் குழுவில் 24 குடும்பங்கள் இருக்கின்றன. மகராஜாவின் வீடு என்பது மூன்று சக்கர வாகனம். எளிதாக அதை மூட்டை கட்டி, குடும்பம் உடைமைகளுடன் பயணித்துவிட முடியும். அவரின் மொத்த வீடும், கம்பளம், தலையணை, மண்ணெண்ணெய் அடுப்பு, ஒரு மெகாஃபோன், கேசட் இசைக்கும் கருவி, நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும் தடிகள், வளையங்கள் ஆகிய எல்லாமும் அவர்களுடன் சேர்ந்து இடம்பெயரும்.

“என் மனைவியும் (கவுரி) நானும் காலையில் எங்களின் வண்டியில் கிளம்புவோம். முதல் கிராமமான திருப்பத்தூரை அடைந்ததும் ஊர்த்தலைவரிடம் எங்களின் நிகழ்ச்சியையும் கூடாரத்தையும் போட அனுமதி கேட்போம். ஸ்பீக்கருக்கும் மைக்குக்கும் தேவையான மின்சாரத்தையும் வேண்டுவோம்.”

அனுமதிக்கப்பட்டால், அவர்கள் ஊர் முழுக்க சென்று தங்களின் நிகழ்ச்சி பற்றி அறிவிப்பார்கள். பிறகு மாலை 4 மணிக்கு சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மணி நேரம் நடக்கும். அடுத்த ஒரு மணி நேரம் இசையும் நடனமும் நிகழும். நிகழ்ச்சி முடிந்த பிறகு வேடிக்கை பார்ப்போரிடம் சென்று அவர்கள் பணம் கேட்பார்கள்.

தொம்மர்கள் காலனியாட்சியில் குற்றப்பழங்குடிகளாக வகைப்படுத்தப்பட்டிருந்தனர். “அவர்கள் அச்சத்திலேயே வாழ்கின்றனர். காவலர்களின் அடக்குமுறைகளும் கும்பல் வன்முறைகளும் அவர்களுக்கு இயல்பாக நேர்பவை,” என்கிறார் TENT (மேய்ச்சல் சமூகங்கள் மற்றும் பழங்குடிகளுக்கு அதிகாரமளிக்கும் மையம்) அமைப்பின் செயலாளர். பழங்குடி சமூகங்களின் உரிமைகளுக்காக மதுரையில் இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்பு அது.

பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பட்டியல் சாதியினருக்கும் பட்டியல் பழங்குடியினருக்கும் சட்டரீதியான பாதுகாப்பை வழங்கினாலும் சட்டரீதியான பாதுகாப்பு முறைகள் எதுவும் அவர்களுக்கு கிடையாது என அவர் சுட்டிக் காட்டுகிறார்.

Kili Josyam uses a parrot to tell fortunes.
PHOTO • Pragati K.B.
People from Narikuruvar community selling trinkets near the Meenakshi Amman temple in Madurai
PHOTO • Pragati K.B.

இடது: கிளி ஜோசியத்தில் ஜோசியம் சொல்ல கிளி பயன்படுத்தப்படுகிறது. வலது: மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே அணிகலன் விற்கும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கல்

தொம்மர் கலைஞர்கள் வீடு திரும்புவதற்கு முன் சில சமயங்களில் ஒரு வருடம் வரை பயணிப்பார்கள் என்கிறார் மகராஜா. “மழை பெய்தாலோ காவலர் இடையூறு ஏற்பட்டாலோ எங்களுக்கு வருமானம் கிடைக்காது,” என்கிறார் கவுரி. அடுத்த நாள், வண்டியில் அடுத்த ஊருக்கு அவர்கள் செல்ல வேண்டும். மீண்டும் அதே கதை தொடரும்.

அவர்களின் 7 வயது மகன் மணிமாறன் கல்வி பயிலுவது சமூக முயற்சியாக நடக்கிறது. “ஒரு வருடம் என் சகோதரரின் குடும்பம் வீட்டிலிருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள். சில நேரம் என் மாமா அவர்களை பார்த்துக் கொள்வார்,” என்கிறார் அவர்.

*****

நிகழ்ச்சி நாளில், ருக்மிணி செய்யும் ஸ்டண்ட்கள் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். பெரிய, கனமான கற்களை தன் முடியால் தூக்குவார். உலோகத் தடியை அவருக்கும் இன்னொருவருக்கும் இடையே வைத்து வளைப்பார். இன்று அவர் நெருப்பு விளையாட்டு, கம்பு சுற்றுதல் போன்ற பல விஷயங்கள் செய்து மக்களை ஈர்க்கிறார்.

37 வயதாகும் அவர் தொம்மர் சமூகத்தை சேர்ந்தவர். சிவகங்கை மாவட்டத்தின் மானாமதுரையில் வசிக்கிறார்.

தவறான வார்த்தைகளால் காயப்படுத்தப்படுவதாக அவர் சொல்கிறார். “ஒப்பனை போட்டு, வண்ண உடைகள் அணிந்து நிகழ்ச்சி நடத்தினால், ஆண்கள் அதை அழைப்பு கொடுப்பதாக புரிந்து கொள்கிறார்கள். கண்ட இடங்களில் தொடுகிறார்கள். தவறாக அழைக்கிறார்கள். ‘ரேட்’ என்னவென கேட்கிறார்கள்.”

காவலர்கள் உதவுவதில்லை. அவர்கள் புகாரளிக்கும் ஆட்கள் கோபம் கொண்டு இவர்கள் மீது “பொய்யாக வழக்கு பதிவு செய்வார்கள். உடனே காவலர்கள் நடவடிக்கை எடுத்து, எங்களை சிறைக்குள் போட்டு அடிப்பார்கள்,” என்கிறார்.

2022ம் ஆண்டில்தான் கழைக்கூத்தாடிகள் என அழைக்கப்படும் இந்த மேய்ச்சல் சமூகம் பட்டியல் சாதியாக பட்டியலிடப்பட்டது.

Rukmini, from the Dommara settlement in Manamadurai, draws the crowds with her fire stunts, baton twirling, spinning and more
PHOTO • Pragati K.B.

மானாமதுரையின் தொம்மாரா வசிப்பிடத்தை சேர்ந்த ருக்மிணி நெருப்பு விளையாட்டு, கம்பு சுற்றல் முதலியவற்றை செய்து கூட்டத்தை ஈர்க்கிறார்

சீர்மரபினர் மற்றும் மேய்ச்சல் குழுக்கள் அனைவருக்கும் ஏற்படும் அனுபவமே ருக்மிணியும் எதிர்கொள்கிறார். குற்றப்பழங்குடி சட்டம் திரும்பப் பெறப்பட்டாலும் சில மாநிலங்கள் பழக்கமான குற்றவாளிகள் சட்டத்தை இயற்றியது. குற்றப்பழங்குடி சட்டம் போலவே புதிய சட்டமும் பதிவு செய்து கண்காணிக்கும் முறைகளை உள்ளடக்கியது. வித்தியாசம் ஒன்றுதான். முன்பு மொத்த சமூகமும் இலக்காக்கப்பட்டது. இப்போது தனி நபர்கள் இலக்காக்கப்படுகின்றனர்.

இச்சமூகம் வண்டிகள், கூடாரங்கள், அரைகுறை வீடுகள் கொண்ட இந்த வசிப்பிடத்தில் வசிக்கின்றனர். ருக்மிணியின் பக்கத்து விட்டுக்காரரான 66 வயது தெரு சர்க்கஸ் கலைஞர் செல்வியும் இதே சமூகத்தை சேர்ந்தவர்தான். பாலியல்ரீதியாக அச்சுறுத்தப்பட்டதாக அவர் சொல்கிறார். “கிராமத்தை சேர்ந்த ஆண்கள் எங்களின் கூடாரங்களுக்குள் இரவு நேரத்தில் நுழைந்து எங்கள் அருகே படுத்துக் கொள்வார்கள். அவர்களை விரட்டவே நாங்கள் அழுக்காக இருக்கிறோம். முடியை நாங்கள் கோத மாட்டோம். குளிக்க மாட்டோம். சுத்தமான ஆடைகள் உடுத்த மாட்டோம். ஆனாலும் சில விஷமிகள் வரவே செய்கின்றனர்,” என்கிறார் இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் கொண்ட தாய்.

“ஊர் ஊராக நாங்கள் செல்லும்போது உங்களால் எங்களை அடையாளம் காண முடியாது. அந்தளவுக்கு அழுக்காக இருப்போம்,” என்கிறார் செல்வியின் கணவர் ரத்தினம்.

இச்சமூகத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தாயம்மா, சன்னதிபுதுக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறார். குழுவில் கல்வி முடிக்கும் முதல் நபராக அவர்தான் இருப்பார்.

ஆனால் கல்லூரியில் “கணிணி பயிலும்” அவரது கனவை அவரது பெற்றோர் ஏற்கப் போவதில்லை.

“எங்கள் சமூகப் பெண்களுக்கு கல்லூரிகள் பாதுகாப்பான இடம் அல்ல. அவர்களை பள்ளியிலேயே ‘சர்க்கஸ் போடுறவ இவ’ என கேலி பேசி பாரபட்சம் காட்டுவார்கள். கல்லூரியில் இன்னும் மோசமாக இருக்கும்.” அதை பற்றி யோசித்துவிட்டு அவரது தாய் லட்சுமி, “ஆனால் யார் இவளை அனுமதிப்பார்? கல்லூரியில் சேர்ந்தாலும் கூட எங்களால் எப்படி பணம் கட்ட முடியும்?” என்கிறார்.

Families in the Sannathipudukulam settlement
PHOTO • Pragati K.B.
take turns fetching drinking water in a wheel barrow (right) every morning
PHOTO • Pragati K.B.

சன்னதி புதுக்குள வசிப்பிடத்திலுள்ள (இடது) குடும்பங்கள் குடிநீர் சேகரிக்க சக்கர வண்டியை (வலது) ஒவ்வொரு காலையும் மாறி மாறி பயன்படுத்திக் கொள்கின்றனர்

எனவே இச்சமூகங்களை சேர்ந்த பெண் குழந்தைகள் இளம் வயதிலேயே மணம் முடித்து வைக்கப்படுகின்றனர் என்கிறார் TENT-ஐ சேர்த்த மகேஸ்வரி. “ஏதேனும் தவறாக (பாலியல் தாக்குதல், வன்புணர்வு, கர்ப்பங்கள் போன்றவை) நடந்துவிட்டால், அப்பெண் குழுக்குள்ளேயே ஒதுக்கி வைக்கப்படுவார். திருமணமும் நடக்காது,” என்கிறார் செல்வி.

இச்சமூகங்களை சேர்ந்த பெண்கள் இரட்டிப்பு கொடுமையை அனுபவிக்கின்றனர். பழங்குடி என்பதால் ஒடுக்குமுறையையும் பெண் என்பதாலான ஒடுக்குமுறையையும் சேர்த்து அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

*****

“16 வயதில் என்னை மணம் முடித்து கொடுத்தார்கள். நான் படிக்கவில்லை. கைரேகை பார்த்துதான் நான் பிழைப்பை ஓட்டுகிறேன். ஆனால் இந்த வேலை என் தலைமுறையுடன் முடிய வேண்டும்,” என்கிறார் மூன்று குழந்தைகள் பெற்றெடுத்த 28 வயது ஹம்சவல்லி. “அதனால்தான் என் குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்புகிறேன்.”

குடுகுடிபாண்டி சமூகத்தை சேர்ந்த அவர், மதுரை மாவட்ட கிராமங்களுக்கு கைரேகை சொல்ல பயணிக்கிறார். ஒருநாளில் அவர் சுமாராக 55 வீடுகள் சென்று விடுகிறார். 40 டிகிரி வரை சுட்டெரிக்கும் வெயிலில் 10 கிலோமீட்டர் வரை நடக்கிறார். 2009ம் ஆண்டில் அவரது வசிப்பிடத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பட்டியல் பழங்குடியான கட்டுநாயக்கர்களாக வகைப்படுத்தப்பட்டனர்.

“கொஞ்சம் உணவும் கையளவு தானியங்களும் வீடுகளில் எங்களுக்குக் கிடைக்கும். சிலர் ஒன்றிரண்டு ரூபாய்கள் கொடுப்பார்கள்,” என்கிறார் அவர். மதுரை திருப்பரங்குன்றத்தில் 60 குடும்பங்களை கொண்ட ஜெஜெ நகரிலுள்ள வீட்டில் அவர் வசிக்கிறார்.

Hamsavalli with her son
PHOTO • Pragati K.B.
in the Gugudupandi settlement
PHOTO • Pragati K.B.

ஹம்சவல்லி மகனுடன் (இடது) குடுகுடுபாண்டி வசிப்பிடத்தில் (வலது)

குடுகுடுபாண்டி சமூகத்தின் இந்த வசிப்பிடத்தில் மின்சார வசதிகளும் இல்லை. கழிவறை வசதிகளும் இல்லை. வசிப்பிடத்தை சுற்றி வளர்ந்திருக்கும் புதர்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுவதால் பாம்பு கடி இங்கு இயல்பான விஷயம். “சுருண்டு என் இடுப்பு வரை உயர்ந்து படமெடுக்கும் பாம்புகள் இங்கு உண்டு,”என ஹம்சவல்லி சைகையில் காட்டுகிறார். மழை பெய்யும்போது கூடாரங்களில் ஒழுகும். பெரும்பாலான குடும்பங்கள், தொண்டு நிறுவனம் கட்டியிருக்கும் பெரிய அறை கொண்ட ‘வாசிப்பிடம்’ ஒன்றில்தான் இரவை கழிக்கும்.

அவரின் குறைவான வருமானத்தை கொண்டு 11, 9 மற்றும் 5 வயதுகளில் இருக்கும் மூன்று குழந்தைகளுக்கு உணவளிக்க முடியவில்லை. “(என்) குழந்தைகள் எப்போதும் நோயில்தான் இருக்கின்றனர். ’சத்தாக சாப்பிட வேண்டும், குழந்தைகளுக்கு சக்தியும் நோய் எதிர்ப்பு சக்தியும் வேண்டும்’ என மருத்துவர் சொல்கிறார். ரேஷன் அரிசியில் கஞ்சி காய்ச்சி ரசம் வைத்து மட்டுமே என்னால் அவர்களுக்குக் கொடுக்க முடிகிறது.”

எனவே அவர் உறுதியாக சொல்கிறார், “இந்த வேலை இந்த தலைமுறையுடன் முடிந்துவிட வேண்டும்,” என.

இக்குழுக்களின் அனுபவத்தை குறித்து பி.அரி பாபு சொல்கையில், “சாதி சான்றிதழ் என்பது வெறும் சாதியை அடையாளப்படுத்தும் காகிதம் அல்ல. மனித உரிமையை செயல்படுத்துவதற்கான கருவியும் கூட,” என்கிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உதவி பேராசிரியராக அவர் இருக்கிறார்.

மேலும் அவர், “சமூகநீதி அவர்களை அடைவதற்கான வழிதான் சான்றிதழ். அது வழியாகத்தான சமூக மற்றும் பொருளாதார பங்கேற்பை உறுதிப்படுத்தி பல ஆண்டுகளாக நடந்த அநீதிகளை சரி செய்ய முடியும்,”  என்கிறார். தொற்றுக்காலத்தில் தமிழ்நாட்டின்  விளிம்பு நிலை சமூகங்கள் சந்தித்த கஷ்டங்களை ஆவணப்படுத்திய பஃபூன் என்கிற யூட்யூப் சேனலின் நிறுவனர் அவர்.

*****

“இந்த தேர்தல்களில் (தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021) முதன்முறையாக 60 வருடங்களில் நான் வாக்களித்தேன்,” என்கிறார் ஆர்.சுப்ரமணி பெருமையுடன் தன் வாக்காளர் அட்டையை சன்னதிபுதுக்குள வீட்டில் காட்டியபடி. தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் ஆதார் உள்ளிட்ட பிற அரசு அடையாள ஆவணங்களும் பெறப்பட்டிருக்கின்றன.

“நான் படிக்கவில்லை. வேறு எதுவும் செய்து நான் சம்பாதிக்க முடியாது. அரசாங்கம் ஏதேனும் தொழிற்கல்வியும் கடனும் கொடுக்க வேண்டும். சுயதொழிலுக்கு உதவும்,” என்கிறார் அவர்.

சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் பிப்ரவரி 15, 2022 அன்று சீர்மரபினருக்கான பொருளாதார அதிகாரமளித்தல் திட்டம் (SEED) தொடங்கப்பட்டது. இத்திட்டம் “இதே போன்ற மாநில மற்றும் ஒன்றிய அரசு திட்டங்களில் பயனடையாத, 2.50 லட்சம் வரையிலான வருடாந்திர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கானது.”

A palm-reader in front of the Murugan temple in Madurai .
PHOTO • Pragati K.B.
A group of people from the Chaatai or whip-lashing community performing in front of the Tirupparankundram Murugan temple in Madurai
PHOTO • Pragati K.B.

இடது: மதுரை முருகன் கோவிலுக்கு வெளியே கைரேகை பார்க்கும் ஒருவர். வலது: சாட்டை சமூகத்தை சேர்ந்த சிலர் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு முன்னால்

ஊடக அறிக்கையும் இச்சமூகங்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை அங்கீகரித்து, “2021-22 நிதி ஆண்டு தொடங்கி 5 வருடங்களுக்கு 200 கோடி ரூபாய் செலவழிக்கப்படும்,” எனக் குறிப்பிட்டிருக்கிறது. கணக்கெடுப்பு முடியாததால் இன்னும் எந்த சமூகத்துக்கும் நிதி தரப்படவில்லை.

“பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி சமூகங்களுக்கென அரசியல் சாசனத்தில் தனி அங்கீகாரத்தை நாம் பெற வேண்டும். அரசால் நாங்கள் புறக்கணிக்கப்பட்டாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முதல் நடவடிக்கையாக அது இருக்கும்,” என்கிறார் சுப்ரமணி. அவர்களுக்கான அடையாளத்தை சரியான கணக்கெடுப்பு எடுத்தாலே கொடுத்துவிட முடியும் என்கிறார்.

இக்கட்டுரை 2021-22-ன் பெண்களுக்கான ஆசியா பசிஃபிக் மன்றத்தின் சட்டம் மற்றும் வளர்ச்சி ((APWLD) ஊடக மானியப்பணியின் பகுதியாக எழுதப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

Pragati K.B.

Pragati K.B. is an independent journalist. She is pursuing a master’s in Social Anthropology at the University of Oxford, UK.

यांचे इतर लिखाण Pragati K.B.
Editor : Priti David

प्रीती डेव्हिड पारीची वार्ताहर व शिक्षण विभागाची संपादक आहे. ग्रामीण भागांचे प्रश्न शाळा आणि महाविद्यालयांच्या वर्गांमध्ये आणि अभ्यासक्रमांमध्ये यावेत यासाठी ती काम करते.

यांचे इतर लिखाण Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan