“ரேஷன் கடையில் இருந்து எனக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய அரிசி ஏன் கிடைக்கவில்லை?“ என்று ஜன்மபூமிக்காக தும்மாலாவில் உள்ள அரசு பள்ளியில் குழுமியிருந்த மண்டல அதிகாரிகளிடம் முகமது கேட்டார். அது மாநில அரசால் ஜனவரி மாதம் பேசுவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த ஒரு குழுவாகும்.
தும்மாலா கிராமத்தில் முகமதுவின் பெயர் அவரது ரேஷன் அட்டையில் இருந்து காணாமல் போயிருந்தது. அவரது வீட்டில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கர்னூல் நகரில் உள்ள ரேஷன் அட்டையில் அவரது புகைப்படம் இருந்தது. “சிலரின் பெயர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருக்கிறது“ என்று அதிகாரிகள் பதிலளித்தனர்.
ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்த பின்னர், 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து பதான் முகமது அலி கானுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுகிறது. 52 வயதான, காய்கறிகள் விற்பனை செய்யும் அலி, ஆந்திர அரசு இணைக்கும் செயலியை உருவாக்கிய உடனேயே ஆதார் எண்ணையும் ரேஷன் அட்டையையும் இணைத்துவிட்டார். சில வாரங்களிலேயே பொது வழங்கல் முறையில் தும்மாலா கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அவருக்கு பிரச்சினைகள் துவங்கிவிட்டன. அவரது கிராமம் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள அமடங்கூர் மண்டலத்தில் உள்ளது.
அலியைப் போல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வைத்துள்ள ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், ரேஷன் கடைகளுக்குச் சென்றபோதெல்லாம், கடைக்காரர் ரேஷன் அட்டையை ஓர் இயந்திரத்தில் சொருகுவார். அந்த இயந்திரம் அந்த குடும்பத்தில் உள்ள நபர்களின் பெயர்பட்டியலைக் காட்டும். அதில் உள்ள நபர்கள் தங்களின் கைரேகையை பதிவிடவேண்டும். ரேஷன் கடைக்காரர் அந்த இயந்திரம் காட்டும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்களை வழங்குவார். ஆனால், அலியின் குடும்ப அட்டையிலிருந்த அவரது பெயர் காணாமல் போயிருந்தது. “நான் பலமுறை சென்றேன். ஆனால், எனது பெயர் அதில் இல்லை“ என்று அவர் கூறுகிறார். “எங்கள் எண்ணை அவர் பதிவிடும்போது 5 பெயர்களை காட்டப்பட வேண்டும். ஆனால், நான்கு மட்டுமே இருந்தது. எனது பெயரை காணவில்லை. பெயர் இருந்தால் மட்டுமே கைரேகை வேலை செய்யும். இல்லாவிட்டால் வேலை செய்யாது“ என்று அவர் மேலும் கூறினார்.










