அரசு அதிகாரியின் பெயரைத்தவிர இங்குக் கொடுக்கப்பட்டுள்ள அனைவரின் பெயர்களும், அவர்களை அடையாளத்தை மறைப்பதற்காக மாற்றப்பட்டுள்ளது. அதற்காகத்தான் அவர்கள் கிராமங்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை. இது இரண்டு பாகங்களை கொண்ட கட்டுரையின் இரண்டாம் பாகம் ஆகும்.
“கீடா ஜாடி என்ற மூலிகைதான் இங்குள்ளவர்களின் வாழ்க்கையை மாற்றியது“ என்று சுனில் சிங் நாம் பயணம் செய்துகொண்டிருக்கும் டாக்சியை ஓட்டிக்கொண்டே கூறுகிறார். 23 வயதான சுனில் சிங் இரண்டாண்டுகளுக்கு மேலாக டாக்சி ஓட்டுகிறார். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்களை தார்ச்சுலாவுக்கு அழைத்துச்செல்கிறார். இங்குள்ள கிராம மக்களுக்கு அங்குதான் பள்ளி, கல்லூரி, சந்தை மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. உத்ரகாண்டின் பைதோராகார் மாவட்டத்தில் தார்ச்சுலா வட்டம் இந்திய – நேபாள எல்லையில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் உள்ளது.
சுனில், பொலிரோ காரை வாங்கி டாக்சியாக பயன்படுத்தி வருகிறார். ரூ.3.5 லட்சம் சேமித்து, வங்கியில் கடன் பெற்று இந்தக் காரை வாங்கினார். அவர் கீடா ஜாடி விற்று, அதிலிருந்து கார் வாங்குவதற்கு பணம் சேமித்தார். கீடா ஜாடி என்பது மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒருவகை மூலிகை பூஞ்சை வகைத் தாவரமாகும். அதை சேமிக்க தனது குடும்பத்தினருடன் 8 வயதிலிருந்து செல்கிறார். அவர் ஈட்டும் வருமானத்தில் இருந்து கடனை செலுத்தி வருகிறார்.
கம்பளிபூச்சி பூஞ்சை அல்லது கீடா ஜாடி என்பது திபெத்தியன் பீடபூமியின் பனிப்புல்வெளிகளில் 3,500 முதல் 5,000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் வளரும். இது பாலியல் உணர்வை உருவாக்கும் திறமை கொண்டதால் இதை ‘இமயமலையின் வயகரா‘ என்றும் அழைக்கிறார்கள். இந்த பூஞ்சை யர்சகும்பா என்று சீனாவில் அழைக்கப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவத்தில் முக்கியமானப் பொருளாகும். உயர்தரமான கீடா ஜாடி சில நேரங்களில் எல்லை தாண்டிய விற்பனையில் ரூ.12 லட்சம் வரை சட்ட விரோதமான முறையில் விற்கப்படுகிறது. பெரும்பாலான பூஞ்சை அறுவடை செய்யப்பட்டு, கடத்தல்காரர்களால் நேபாளத்துக்கும் அங்கிருந்து சீனாவுக்கும் கடத்தப்படுகிறது.
உத்ரகாண்டின் உயர்ந்த மலைப்பகுதிகளின் எல்லை மாவட்டங்களான பைத்தோராகார் மற்றும் சமோலியில் இந்த பூஞ்சை அறுவடைக் காலம் மே மாதத்தின் ஆரம்பத்திலேயே துவங்கி, ஜீன் மாத மத்தியிலோ அல்லது இறுதியிலோ மழைக்காலத்தின் வருகையையொட்டி முடிவடைகிறது. குடும்பம் முழுவதும் புல்வெளிக்கு இடம்பெயர்ந்து, கூடாரங்களில் பல வாரங்கள் தங்கியிருந்து, நீண்ட நேரம், கடினமான சூழல்ளில் வேலை செய்து இப்பூஞ்சையைச் சேகரிக்கிறார்கள். (பைத்தோராகாரின் குடும்பங்களுக்கு வருமானம் வழங்கும் பூஞ்சைகள் என்ற கட்டுரையை பார்க்கவும்)







