“தாஷ்ரா நடனம் ஆடப் போகிறோம்,” என்கிறார் நடனக் கலைஞரான இத்வாரி ராம் மச்சியா பைகா. “இந்த நடனம் தசராவின்போது தொடங்கி, மூன்று நான்கு மாதங்கள் தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் வரை நடக்கும். தசரா கொண்டாடியபிறகு, பிற பைகா கிராமங்களுக்கு சென்று இரவு முழுவதும் ஆடுவோம்,” என்கிறார் சட்டீஸ்கரின் பைகா சமாஜ தலைவர்.
அறுபது வயதுகளில் இருக்கும் நடனக் கலைஞரும் விவசாயியுமான அவர், கபீர்தம் மாவட்ட பண்டரியா ஒன்றிய அமானிய கிராமத்தில் வசிக்கிறார். ராய்ப்பூரில் மாநில அரசு ஒருங்கிணைக்கும் தேசிய பழங்குடி நடனத்தில் கலந்து கொள்ள குழுவின் பிற உறுப்பினர்களுடன் சேர்ந்து இத்வாரிஜி வந்திருக்கிறார்.
அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுவாக (PVTG) சட்டீஸ்கரில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் ஏழு சமூகங்களில் பைகா சமூகமும் ஒன்று. அவர்கள் மத்தியப் பிரதேசத்திலும் வாழ்கின்றனர்.


