வெள்ள நீர் உயரத் துவங்கியபோது, பார்வதி வாசுதியோ தனது வீட்டை விட்டு வெளியேறும்போது தன் கணவரின் பாரம்பரிய தலைப்பாகையை தன்னுடன் எடுத்துக்கொண்டார். "நாங்கள் இதையும் சிப்பிலியையும் (ஒரு இசைக் கருவி) மட்டுமே எங்களுடன் கொண்டு வந்தோம். நடப்பது எதுவாக இருந்தாலும், இந்த தலைப்பாகை எங்களால் ஒருபோதும் விட்டு விட முடியாது", என்கிறார் அவர். அந்த தலைப்பாகை மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவரது கணவர் கோபால் வாசுதியோ இறை பாடல்களைப் பாடும்போது அதை அணிந்து கொள்கிறார்.
ஆகஸ்ட் 9 அன்று எழுபதுகளின் பிற்பகுதியில் இருக்கும் கோபால் ஒரு பள்ளியின் அறையில் ஒரு மூலையில் விரக்தியுடன் அமர்ந்திருந்தார். "எனது மூன்று ஆடுகள் இறந்து விட்டன, எங்களால் மீட்கப்பட்ட ஒரு ஆடும் நோய்வாய் பட்டிருப்பதால் இறக்கக்கூடும்", என்று அவர் கூறினார். கோபால், வாசுதியோ சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார், இச்சமூகத்தினர் பகவான் கிருஷ்ணனை வணங்குபவர்கள். இவர்கள் வீடு வீடாகச் சென்று பக்திப் பாடல்களைப் பாடி யாசகம் பெறுவர். பருவமழைக்கால மாதங்களில் கோல்ஹாபூர் மாவட்டத்தின் ஹட்கானங்கள் தாலுகாவில் உள்ள தனது கிராமமான பெந்தவாடேயில் விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார் அவர். "கடந்த ஒரு மாதமாக, கனமழை காரணமாக வயல்களில் எந்த வேலையும் நடைபெறவில்லை, இப்போது வெள்ளம் வேறு மீண்டும் வந்துவிட்டது", என்று அவர் கிட்டத்தட்ட கண்களில் கண்ணீருடன் கூறினார்.
பெந்தவாடே விவசாயிகள் மழையின் தாமதமான வருகை காரணமாக தங்களது மானாவரி பயிர்களின் விதைப்பை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்தனர் - இங்கு பொதுவாக முதல் மழை ஜூன் மாதத்தின் துவக்கத்திலேயே துவங்கிவிடும். ஆனால் இப்போது மழை பெய்தபோது, சோயாபீன், நிலக்கடலை மற்றும் கரும்பு ஆகிய பயிர்களை மூழ்கடிக்க அதற்கு வெறும் ஒரு மாதம் மட்டுமே தேவைப்பட்டது.
திருமண புகைப்படங்கள் எடுப்பதற்காக தான் பயன்படுத்தும் ட்ரோன் - மக்களை மீட்க உதவும் - என்பதை ஆசிப் சற்றும் எதிர்பார்க்கவில்லை: 'நாங்கள் எந்த நபரையும் உயிர் இழக்க விடமாட்டோம். விலங்குகளையும் காப்பாற்றப் போகிறோம்' என்று கூறினார்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி துவங்கி கொட்டித்தீர்த்த கனமழையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவின் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் 200 முதல் 250 கிராமங்களில் ஒன்று பெந்தவாடே (என்கிறது பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா வின் செய்திகள்). கனமழை ஆகஸ்ட் 11 க்கு பிறகே குறையத் துவங்கியது
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மக்கள் தொகை 4686 - இதில் 450 குடும்பங்களிலுள்ள சுமார் 2500 பேரும், கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள வெள்ள நிவாரண முகாம்களுக்கும், பள்ளி கட்டிடங்களிலும், கிராமத்திற்கு வெளியில் இருக்கும் தலைவரின் வீட்டிற்கும் (அங்கு தண்ணீரின் அளவு உயரவில்லை) அனுப்பப்பட்டதாக, பெந்தவாடேயின் தலைவர் ககாசோ சவான் தெரிவித்தார்.
வாசுதியோ, அவரது மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருடன் ஆகஸ்ட் ஆகஸ்டு 3-ஆம் தேதி கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தஞ்சமடைந்தார். நான்கு நாட்களுக்குப் பிறகு அங்கும் தண்ணீரின் அளவு உயர்ந்ததால் கிராமத்திற்கு வெளியே இருக்கும் துவக்கப்பள்ளிக்கு அவர்கள் மாற வேண்டியிருந்தது. எழுபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் பார்வதி ஆகஸ்ட் 9ஆம் தேதி என்னிடம், "நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஒரு வாரம் ஆகிறது. நாங்கள் இங்கேயே இன்னும் ஒரு மாதத்திற்கு தங்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது. இன்று தண்ணீரில் நீந்தி வெளியே சென்று வந்த சிறுவன் ஒருவன் எங்கள் வீடு இடிந்து விட்டது என்று கூறினான்", என்று கூறினார்.
பெந்தவாடேயில் இவர்களது குழுவைப் போன்ற பிற உள்ளூர் குழுக்களின் பெருத்த முயற்சிக்கு இடையேயும் பிற கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் முயற்சிக்கு இடையேயும், பல விலங்குகள் உயிரிழந்துள்ளன. பெந்தவாடேயில் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்றாலும் கோல்ஹாபூர் மற்றும் சங்லி மாவட்டங்களில் வெள்ளத்தால் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புனே வட்டார ஆணையர் சொல்லியிருப்பதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வமாகவோ, நம்பும்படியாகவோ ஏக்கர் அளவில் பயிர் சேதம் பற்றிய மதிப்பீடுகள் இன்னும் கணக்கிடப்படவில்லை.
தமிழில்: சோனியா போஸ்